பரிதாபகரமாக உயிரிழந்த பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டு, குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் அவர்களுடைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படுமா….?
றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல. ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதரும் கூட. அவர் எல்லோரிடமும் சஜகமாக பழகுபவர்.
தனது தாய் நாட்டுக்காக முன்னின்று விளையாடும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவிருந்தார். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் றக்பி குழுவில் இடம்பெற்றிருந்த தாஜுதீன் ஹெவ்லொக் ஸ்போர்ட்ஸ் றக்பி குழுவில் இணைந்துகொண்டதுடன், தனது திறமையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஹெவ்லொக் ஸ்போர்ட்ஸ் குழுவின் தலைவராக கடமையாற்றும் சந்தர்ப்பமும் அவருக்கு கிடைத்தது.
சிறந்த தலைமைத்துவமும், குழுவினை வழிநடத்தும் ஆளுமையும் இயல்பாகவே அவரிடம் இருந்தது. தாஜுதீனுக்கு காலில் உபாதையொன்றும் ஏற்பட்டிருந்தது. இதனால் சிறிது காலம் றக்பி விளையாட்டிலிருந்தும் ஒய்வு பெற்றிருந்தார்.
அவருடைய இழப்பானது இலங்கை விளையாட்டு துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்”
இது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக அவரது பயிற்றுவிப்பாளர் சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தாகும்.
இன்று அனைவர் மத்தியிலும் கடந்த 3 வருடங்களுக்கு முன் பரிதாபகரமாக உயிரிழந்த பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டு, குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் அவர்களுடைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படுமா? என்ற கேள்வியே எழுந்துள்ளது.
இந்நிலையில் வஸீம் தாஜுதீன் மரணம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் துரிதமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் எரிந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றிலிருந்து தாஜுதீனுடைய சடலம் மீட்கப்பட்டது.
எனினும், அதி வேகத்தில் வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக மதில் மீது மோதியதில் தீப் பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
இதனையடுத்து சடலமானது குடும்பத்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆனால், வஸீம் தாஜுதீனின் மரணம் ஒரு விபத்து அல்ல அது ஒரு கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அது குறித்த வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் அது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றன.
இறுதியாக குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதிமன்ற நீதவான் நிசாந்த பீரிஸுக்கு சாட்சியங்களுடன் சமர்ப்பித்திருந்ததை தொடர்ந்தே இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வஸீம் தாஜுதீனின் கழுத்துப்பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு, தட்டையான ஆயுதம் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு, முதுகெலும்பு, பற்கள், கைகால்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன், பாதமானது கண்ணாடியை ஒத்த கூரிய ஆயுதத்தால் கிழிக்கப்பட்டு எலும்புகள் முறிக்கப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே பல்வேறு கோணங்களில் தாஜுதீன் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தாஜுதீன் 2009 ஜூலை கால்டெக்ஸ் ஒப்சர்வர் விருதுகளில் (Caltex Observer Rugby Awards) சிறந்த றக்பி வீரர் விருதை (“Most Popular Rugby Player”) வென்றார்.
அதன்பின் காலில் ஏற்பட்ட உபாதையொன்றின் காரணமாக சிறிது காலம் றக்பி விளையாட்டிலிருந்தும் ஒய்வு பெற்றிருந்தார்.
அதுமட்டுமின்றி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சுற்றுலாத் துறையிலும் சிறிதுகாலம் (Mackinnons American Express Travel) பணியாற்றினார்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி மாலை 6 மணியளவில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்காக செல்வதாக கூறிச் சென்ற தாஜுதீன் தொடர்பாக மறுநாள் காலை சோக செய்தியொன்றே அனைவர் காதுகளுக்கும் எட்டியது.
வஸீம் தாஜுதீன் பயணித்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியிலுள்ள மதிலில் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் தாஜுதீன் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் முகாமையாளருடையது என்றே கூறப்பட்டது.
எனினும், பின்னர்தான் அது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலம் என இனங்காணப்பட்டது.
இருப்பினும், தாஜுதீனின் மரணம் தொடர்பாக ஆரம்பத்தில் எந்த விதமான விசாரணைகளும், முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
அப்போது இது ஒரு விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என்றே பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆயினும், அதனை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. வஸீம் தாஜுதீனின் மரணம் கொலையாகத் தான் இருக்கக் கூடும் என சந்தேகித்தனர்.
இந்நிலையில் தாஜுதீ னின் மரணம் ஒரு கொலையாக இருக்கக் கூடும் என்பதற்கான எளிமையான சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றை நோக்குவோமானால், விபத்து இடம்பெற்றதாகக் கூறப்பட்ட பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு பிரதேசமாகும்.
தாஜுதீன் நாரஹேன்பிட்டியாவிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு செல்வதாக கூறியே சென்றுள்ளார்.
விபத்து இடம்பெற்றதும் நாரஹேண்பிட்டியாவில் தான். அதாவது அந்த இடத்தை சென்றடைவதற்கு நீண்ட நேரம் எடுக்காது.
அதுமட்டுமின்றி, வாகனம் வீதியை விட்டு விலகி மதிலில் மோதியுள்ளதால் விபத்து இடம்பெற்றிருக்கின்றது என்று சோடித்துக்காட்டினார்கள்.
எனவே அவ்வாறு இருந்திருந்தால் அது மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்க வேண்டும் என்பதுடன், மதிலில் பெரும் பகுதி இடிந்திருக்கவும் வேண்டும். எனினும், அப்படி பெரிய சேதம் எதுவும் மதிலுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. சிறியதொரு சேதமே மதிலில் ஏற்பட்டிருந்தது.
அடுத்த மிக முக்கிய காரணம் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் பணப்பை (Purse) கிருலப்பனை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், நாரஹேன்பிட்டிய பகுதியில் தான் தாஜுதீனின் கார் விபத்துக்குள்ளாகியது என்று கூறப்பட்டது. அப்படியிருக்கையில் அவருடைய பணப்பை (Purse) அவருடைய காருக்குள்ளேயோ அல்லது காற்சட்டை பையிலோ இருந்திருக்க வேண்டும்.
எனினும், அவ்வாறு இருக்காமல் பணப்பை கிருலப்பனை பகுதியில் கிடந்தது எப்படி? என்று சந்தேகம் வலுவாக எழுந்திருந்தது.
எனவே அது தொடர்பாக சீ.சீ.டி.வி கெமரா பதிவுகளைக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆயினும் அன்றைய சூழ்நிலையில் விசாரணைகள் அனைத்துமே முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன.
அதுமட்டுமின்றி, கார் தீப்பற்றி எரியும் போது தீயிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தாஜுதீன் ஏன் முயற்சி செய்யவில்லை? ஒரு கார் தீயினால் எரிவதற்கும் அது மிகப் பெரிய விபத்தாகவிருக்க வேண்டும் என்பதுடன் கார் முழுமையாக எரிவதற்கும் நீண்ட நேரம் எடுத்திருக்கும்.
எனவே வஸீம் தாஜுதீன் போன்ற மிகச் சிறந்த திறமையான விளையாட்டு வீரர் அதிலிருந்து தப்பிச் செல்ல பலவாறு முயற்சித்திருக்க வேண்டும். எனினும் அவர் ஏன்? அதிலிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை?
எனவே, தாஜுதீன் சாரதி ஆசனத்தில் இருந்தது தீயில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டபின் அவரது சடலம் காருக்குள் போட்டு எரியூட்டப்பட்டதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன?
சம்பவம் இடம்பெற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிவான் நிஷாந்த பீரிஸ் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், அந்த அறிக்கை வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனவே தாஜுதீனுடைய மரணம் நடைபெற்று 3 வருடங்கள் கழிந்த இன்றைய நிலையில் தான் அவருடைய மரணத்தில் மறைந்துள்ள பல திகிலூட்டும் உண்மைகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
தாஜுதீனுடைய மரணம் தொடர்பான அறிக்கையில் வாகனத்தில் தீ பற்றியதில் அவர் உயிரிழந்திருந்தால் அவரது சுவாசப்பையில் காபன்மொனொட்சைட், சாம்பல் போன்றன கலந்திருக்க வேண்டும்.
ஆயினும், அவரது சுவாசப்பையில் அவ்வாறு எதுவும் கலந்திருக்கவில்லை.ஆகையால், கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தான் தாஜுதீன் உயிரிழந்திருக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரியவருகின்றது.
எனவே, இது தொடர்பான விசாரணைகளை தற்போது பல்வேறு ஆதாரங்களுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வஸீம் தாஜுதீனுடைய சடலத்தை மீள பரிசோதனைக்காக தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிமன்ற நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எழுத்து மூலம் அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தனர்.
அதற்கமைய புதைக்கப்பட்ட தாஜுதீனுடைய சடலம் மீள் பரிசோதனைகளுக்காக தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியிலிருந்து கடந்த 10 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய மற்றும் உடற்கூற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள் ளது.
கடந்த 10 ஆம் திகதி கடுமையான பொலிஸ் பாதுகாப் புக்கு மத்தியில் காலை 7.45 மணியளவில் தாஜுதீனுடைய உறவினர்களாலும், தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினராலும் எவ்வித சந்தேகமுமின்றி அவரது சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதில் தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடமும், தாஜுதினுடைய சகோதரியிடமும், சகோதரனிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்து கொண்டனர்.
தாஜுதீனுடைய சகோதரியிடமும், சகோதரனிடமும் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தில் “தாம் தாஜுதீனுடைய சடலத்தை அடக்கம் செய்து விட்டு வேப்பம் மரம் ஒன்றினையும் வேறு சில பூச்செடிகளையும் நட்டதாகவும் அதனடிப்படையிலேயே தாஜுதீன் புதைக்கப்பட்ட இடத்தை தம்மால் அடையாளம் காட்டக் கூடியதாகவிருந்தது என்றும் கூறியிருந்தனர்.
எனவே குறித்த இடத்தில் நடப்பட்ட வேப்பமரம் 12 அடி வளர்ந்திருந்த நிலையில் அதை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி சடலத்தை தோண்டியெடுக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர்.
சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 3 அல்லது 4 அடி தோண்டி செல்லும் போதே பொலித்தீன் மற்றும் வெள்ளைதுணியினால் போர்த்தப்பட்ட நிலையில் சடலம் குழியிலிருந்து எடுக்கப்பட்டது.
அதன்பின், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தாஜுதீனுடைய சடலத்தை மீள் பரிசோதனைகளுக்காக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி அது தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இக்கொலையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இக்கொலையுடன் முன்னைய ஆட்சி காலத்தில் பாதுகாப்புப்பிரிவினைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், சமூக சேவை நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இக்கொலை காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக ஏற்பட்டதாகவிருக்கலாம் என்றும் அதில் பிரபலமான ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
எதுஎவ்வாறாயினும், மண்ணுள் புதைக்கப்பட்ட பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனுடைய சடலம் மீள் பரிசோதனைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட இன்றைய நிலையில் அவருடைய மரணம் தொடர்பான விசாரணைகள் எவ்வித பக்கச்சார்பும் இன்றி மேற்கொள்ளப்படுவதுடன், குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிறைந்து போயுள்ளது.