இலங்கையில் நடந்த பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை ஆதரிப்போம் என அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்திருப்பதாக ஏஎஃபி மற்றும் ஏபி செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நம்பகத்தன்மையுள்ள உள்நாட்டு விசாரணை முயற்சிகளை ஆதரிப்போம் என நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான, நம்பகத்தன்மையுள்ள உள்நாட்டு விசாரணை முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அவர் கூறியிருப்பதாக இந்த இரண்டு சர்வதேச செய்தி நிறுவனங்களும் கூறியுள்ளன.
தீர்மானத்தின் உள்ளடக்கம் என்ன?
இலங்கைக்கு சென்றுள்ள நிஷா பிஸ்வால் கொழும்பில் புதன்கிழமையன்று குறிப்பிட்ட சில செய்தியாளர்களை தேர்ந்தெடுத்து, சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின்போது அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
“ஜெனீவாவில் செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறது.
அந்த தீர்மானத்தை கூட்டாக கொண்டுவரவே நாங்கள் விரும்புகிறோம். இலங்கை அரசுடனும், இது தொடர்புடைய அனைத்து முக்கிய தரப்பினருடனும், இணைந்து இந்த தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்” என்று நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.
அதே சமயம், இந்த தீர்மானத்தின் வாசகங்கள் மற்றும் உள்ளடக்கம் குறித்து தற்போதைக்கு தம்மால் விரிவாக பேசமுடியாது என்றும் நிஷா கூறியிருக்கிறார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணைய அறிக்கையின் உள்ளடக்கம் என்ன என்பது தெரியாமல், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து பேச முடியாது என்றும் கூறினார்.
நல்லிணக்கத்தை மேம்படுத்தக்கூடிய சூழல்
உள்ளக விசாரணைகள் குறித்தும், அதன் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாடு குறித்தெல்லாம் தமிழர் தரப்பில் பெரும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்ததை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த நிஷா பிஸ்வால்,
“இன்றைய நிலையில் முன்பு இல்லாத வேறுபட்ட வாய்ப்பு உருவாகியிருப்பதை நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்.
நல்லிணக்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு உதவக்கூடியதொரு சூழ்நிலை உருவாகியிருப்பதையும் நாங்கள் கணக்கில் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் மூன்று தீர்மானங்களை அமெரிக்க கொண்டுவந்திருந்தது.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென கடந்த ஆண்டில் ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து நல்லிணக்கம் குறித்து புதிய நம்பிக்கை இலங்கையில் ஏற்பட்டிருப்பதாகவும் அதன் நீட்சியாகவே இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கும் மாநாட்டில் புதிய தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாகவும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இருந்த மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை அமைச்சர் டாம் மலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.