சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.
இன்று நாடாளுமன்ற அமர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகின. அதற்கு முன்னதாக, காலை 9.25 மணியளவிலேயே நாடாளுமன்றத்துக்கு வந்த மகிந்த ராஜபக்ச, முன்வரிசையில் இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
முதலாவது ஆசனத்தில் நிமால் சிறிபால டி சில்வா அமர்ந்திருந்தார். அதையடுத்து மகிந்த ராஜபக்சவும், அவருக்கு அருகே சரத் அமுனுகமவும் அமர்ந்திருந்தனர்.
சபாநாயகர் தெரிவை அடுத்து, உறுப்பினர்கள் பதவியேற்ற போது, மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் பதவியேற்றுக் கொண்டனர். அதேவேளை, நாடாளுமன்றம் வந்த மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இதனை விடவும் பெருமிதமான தருணமில்லை, நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய அரச தலைவருடன் பாராளுமன்றம் செல்லக் கிடைத்தமை வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகின்றேன்” என டுவிட்டரில் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய தேர்வு
புதிய சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுடன் ( ஆவணப்படம்)
இலங்கையில், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இன்று நாடாளுமன்றம் கூடிய பொது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரியாவின் பெயரை முன்மொழிந்தார். அதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார்.
துணை சபாநாயகராக ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல்
சிறிபால டி சில்வா சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் நடுநிலையுடன் செயல்படுவாரென்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரா குமார திசாநாயக்க கருத்துக்களை தெரிவித்த பொது மக்களின் நலன் கருதி நாடாளுமன்றத்தை வழி நடத்தி செல்வதற்கு புதிய சபாநாயகர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் புதிய சபாநாயகர் பாரபட்சமின்றி நியாயமான முறையில் செயல்படுவாரென்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பறிக்கப்பட்டுள்ள ஜனாநாயக உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு புதிய சபாநாயகர் தனது பங்களிப்பை வழங்குவாரென்று எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் கூறினார் .
இதே வேளை புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட உரை இன்று மாலை நடைபெறவுள்ளது
குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்
8ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபாலவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சபை அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.