சிம்புவின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வாலு வெளியானதை அடுத்து, தற்போது இது நம்ம ஆளு திரைப்படத்தை வெளியிட முயற்சி எடுத்து வருகிறார் சிம்புவின் தந்தையும் படத்தின் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா இணைந்து நடித்து வந்த படம் ‘இது நம்ம ஆளு, தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இது நம்ம ஆளு படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும் 2 பாடல் காட்சிகள் பாக்கியிருப்பதால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.
அந்த 2 பாடல் காட்சிகளிலும் நயன்தாரா நடிக்க மறுக்கிறார் அவரால் தான் படம் தாமதமாகிறது என்று தொடர்ந்து, படத்தின் நாயகியான நயன்தாராவைப் பற்றியும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் படத்தின் நாயகி நயன்தாரா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார், அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.
இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார். பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம்.




