சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரவு 11.30 மணியளவில் அவ்வையார் சிலைக்கு பின்புறமுள்ள பகுதியில் கடற்கரையில் 2 வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது.
இறந்து கிடந்த குழந்தையின் உடலில் டி–சர்ட் மற்றும் சின்ன கால்சட்டையும் அணிவிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உடலை பார்க்கும் போது அது கடலில் மூழ்கி பலியாகி இருப்பது போல் காணப்பட்டது.
இதையடுத்து மெரீனா போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
பலியான குழந்தையின் உடலில் அணிவிக்கப்பட்டிருந்த ஜட்டி கிளிப்பச்சை கலரில் இருந்தது. டி–சர்ட் வெள்ளை மற்றும் நீலக்கலரில் காணப்பட்டது. குழந்தையை பற்றிய மற்ற எந்த விவரங்களும் தெரிய வில்லை.
2 வயது குழந்தை தானாக போய் கடலில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மெரீனா, அண்ணாசதுக்கம், பட்டினம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என்று எந்த புகாரும் வரவில்லை.
எனவே, இறந்து கிடந்த குழந்தையை திட்டமிட்டு யாராவது தூக்கி வந்து கடலில் வீசி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அது தொடர்பாக மெரீனா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் குழந்தை இறந்து கிடந்ததை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக குழந்தையை பெற்ற தாய் அல்லது தந்தைதான் இச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பலியான குழந்தை எந்த பகுதியை சேர்ந்தது. அதன் பெற்றோர் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போலீசுக்கு இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக ஏதாவது பகுதியை சேர்ந்த பெண் இந்த குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாமா?
என்றும் விசாரணை நடைபெறுகிறது. கடலோர பகுதிகளில் வேறு எங்காவது இளம் பெண்ணின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பெற்றோர் பிணத்துடன் 2 நாள் தவித்த 1 வயது குழந்தையின் அவலம்!
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் உப்பர ஹல்லியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35) இவரது மனைவி மீனாட்சி (30). இருவரும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு ஐதராபாத் அருகே உள்ள ஹுக்கட் பள்ளி ஆல்வின் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.
மஞ்சுநாத் தனியார் செல்போன் கடையிலும், மீனாட்சி அங்குள்ள வர்த்தக வளாகத்திலும் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் வீட்டின் கீழ் தளத்தில் உரிமையாளர் இருந்தார். மாடியில் மஞ்சுநாத் தம்பதிகள் ஹர்சவர்த்தன் என்ற தனது 1 வயது குழந்தையுடன் தங்கி இருந்தனர்.
வீட்டில் இருக்கும் போது கணவன்–மனைவி இருவரும் சத்தமாக பேசி சண்டை போட்டுக் கொள்வது உண்டு. அப்போது குழந்தை அழுதாலும் அவர்கள் சண்டை ஓயாது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் சண்டை நடந்தது. வழக்கமான ஒன்று என்பதால் அக்கம் பக்கத்தினர் இதனை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் 2 நாட்களாக அவர்கள் வீட்டில் இருந்து சத்தம் எதுவும் வரவில்லை. குழந்தை மட்டும் அழுது கொண்டே இருந்தது. பின்னர் அதன் அழுகையும் நின்று விட்டது. மஞ்சுநாத் தினமும் பால் வாங்க வெளியே வருவார். ஆனால் 2 நாட்களாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் மாடிக்கு சென்று பார்த்தார்.
வீட்டில் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வாசல் கதவு அருகே அவளது பிணம் கிடந்தது. பக்கத்து அறையில் மஞ்சுநாத் தூக்கில் பிணமாக தொங்கினார். தாயின் பிணம் அருகே 1 வயது குழந்தை மயங்கி கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அழுகிய நிலையில் இருந்த 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த மஞ்சு நாத் அவளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
குழந்தை அருகே பிஸ்கெட் பாக்கெட் இருந்தது. பெற்றோர் இறந்தது தெரியாமல் 2 நாள் தாயின் பிணம் அருகே பசியால் அழுது அழுது ஓய்ந்து மயங்கியது.
அந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பால் கொடுத்து காப்பாறறினர். அனாதையான அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்க பலர் முன் வந்து உள்ளனர். என்றாலும் தற்கொலை செய்தவர்களின் உறவினர்கள் வருகைக்காக போலீசார் காத்து இருக்கிறார்கள்.