திருகோணமலை மண்ணின் மைந்தன், இலங்கை வாழ் தமிழ்மக்களின் காவலன், பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கறிந்த வழக்கறிஞன், நேர்மை மிக்கான், திண்ணிய நெஞ்சத்தான், செலச்சொல்ல வல்லான் இரா. சம்பந்தன் இலங்கைபாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றமை ஜனநாயக விழுமியங்கள் மீண்டும் மலர வேண்டும் என்ற வேட்கை துளிர்க்கின்ற இக்கால கட்டத்தில் நம்பிக்கை தரும் நிகழ்வெனலாம்.
திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்காடும் வேளை சிங்கமென கர்ச்சித்த அன்னாரின் கர்ஜனை பல்லாண்டுகளாக பாராளுமன்றத்தில் ஒலிக்கிறது. மாற்றுக் கொள்கையாளரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வாதத்தை முன்வைத்து நமது நலம்பேணுவார்.
இந்தத் தருணத்தில் சம்பந்தன் ஆற்றிய பணிகள் சில ஞாபகத்துக்கு வருகின்றன. 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்.. தந்தை செல்வாவின் வேண்டுகோளினைத் தொடர்ந்து, அவர் அரசியலில் ஈடுபட்டார்.
பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட நாட்தொட்டு தனக்கு நிறைய வருவாய் தந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார்.
1977-, -1983 காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் 2001ஆம் ஆண்டு தொட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
வழக்கறிஞராக
வழக்கறிஞர் தொழில் ஆற்றிய காலத்தில் மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டார். வழக்குகளை மிகவும் நுட்பமாகக் கையாண்டு வெற்றியீட்டினார்.
திருகோணமலையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கொலை வழக்கில் ஆஜராகியபோது, அந்த ஸ்தானத்துக்கு, அரசடிச் சந்திக்கு, தானே நேராகச் சென்று பல கோணங்களில் நிலைமையை ஆராய்ந்து வாதங்களை முன்வைத்து மறுதரப்புக்கு ஆஜாராகியிருந்த கொழும்பில் இருந்து வருகை தந்த பிரபல சட்டத்தரணியின் வாதங்கள் சுக்கு நூறாகும் வண்ணம் வழக்கை நடத்தினார். வெற்றியும் கண்டார்.
தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலாக தமிழில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகியிருந்தார்.
மறு தரப்பில் வழக்கறிஞராக அ.அமிர்தலிங்கம் ஆஜராகி இருந்தார். அப்போது சம்பந்தன் இன்று போல் சரளமாகத் தமிழில் உரையாற்ற மாட்டார்.
ஆனால் அமிர்தலிங்கம் அடுக்கு மொழியில் மிடுக்குடன் வாதங்களை முன்வைத்தார். ஆயினும் சம்பந்தன் சட்ட நுணுக்கங்களை முன்வைத்து தானறிந்த தமிழில், தனக்கே உரியபாணியில் வாதிட்டார். தீர்ப்பும் அவர் கட்சிக்காரருக்குச் சார்பாக அமைந்தது.
அன்று திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இருந்த, நீதியரசர் அப்துல்காதர் திருகோணமலையில் பெரிய கடையில் சின்ன முற்றவெளியில் அமைந்திருந்த பொதுசேவைகள் கழகத்துக்கு மாலை வேளைகளில் உள்ளக விளையாட்டுக்காக வருவதுண்டு.
அங்கு ஒக்ஷன் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்த போது எங்களிடம் ஒரு தடவை இவரது சட்ட நுணுக்கம், வழக்காடும் வாதத்திறம் பற்றிப் பின்வருமாறு கூறினார்.
சம்பந்தன் உயர்நீதிமன்றம் போன்ற வழக்காடு மன்றங்களில் ஆஜராகி வாதிட்டால் அகில இலங்கை ரீதியில் பிரபல்யம் பெறுவார் என்று நம்மிடம் கூறியதுண்டு.
சன்சோணி ஆணைக்குழு முன்னிலையில்
திருகோணமலையில் சன்சோணி ஆணைக் குழுவின் முன்னிலையில் சம்பந்தன் ஆங்கிலத்தில் சாட்சியம் அளித்தார். அப்போது சில அமைப்புக்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.
திருகோணமலையில் சில பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் பண்டைய காலந்தொட்டு காணப்படுகின்ற நிலையில் வட, கிழக்கு தமிழர் தாயகம் என்ற தங்கள் நிலைப்பாடு எப்படி நியாயமாகும்?
இதுவே அவர் வாதமாகும். சம்பந்தனின் பதில் எப்படி அமையப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தோம்.
பௌத்த மதம் சீனா, ஜப்பான், கம்போடியா போன்ற பல நாடுகளில் பரவிக் காணப்படுவதால் அவற்றை சிங்கள பிரதேசமென அறிவுசால் நண்பரால் வாதாட முடியுமா? அவ்வாதம் குதர்க்கமாக அமையாதா?
அங்கு அவர்கள் மதத்தால் பௌத்தர்களாக இருப்பினும், மொழியால், இனத்தால், கலாசாரத்தால் வேறுபட்டவர்கள் என்பதை ஏன் அறிவுசால் நண்பரால் புரிந்து கொள்ளமுடியவில்லை?
மேலும், தமிழ் மொழியில் மணிமேகலை போன்ற பௌத்த மதக்காப்பியங்கள் உண்டு என்பதையும், தமிழ் மக்களில் ஒருசாரார் பௌத்தர்களாக வாழ்ந்திருக்கலாம் என்பதையும் அறிவுசால் நண்பருக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.
இப்படி சம்பந்தன் பட்டென்று கூறிவைக்க, அவையில் செவிமடுத்த நாம் வியப்புற்றோம். ஏன் நீதியரசர் சன்சோணியின் முகத்தில் கூட வியப்புணர்வு முகிழ்த்ததை நாம் கண்டோம்.
அது வன்செயல் வெடித்த காலம். பண்குளம் என்ற தமிழ் கிராமம், கடற்படையினர் சிலர் நள்ளிரவில் அனுமதியின்றி முகாமிலிருந்து வெளியேறி அக்கிராமத்தினுள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
காலையில் இதனை அறிந்ததும், சம்பந்தன் அவர்கள், இங்கு வந்த சிலரிடம் தாக்குதல் பற்றிய தகவல்களைத் திரட்டி, அப்போதைய ஜனாதிபதியின் செயலாளருடன் – மனிக்டீவெல என்று ஞாபகம்- தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவாக இயங்கினார்.
அப்போதைய மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையுடன் தொடர்பு கொண்டு உடனே அக்கிராமத்துக்குத் தாங்கள் இருவரும் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
நாம் அங்கு உடனே சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அக்கிராமத்து மக்கள் பயம் காரணமாக, பாதுகாப்பு கருதி நகரத்தை நாடுவர். எல்லைக் கிராமங்கள் பறிபோய்விடும். என்ற கவலையை வெளியிட்டார்.
அங்கு சென்ற அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாதிட்டு, அப்படையினரை முகாமினுள் முடக்கிவைக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரை ஈடுபடுத்தவும் கட்டளைகளைப் பெற்றார்.
வகுப்புக் கலவரம் நாட்டில் வெடித்த போது, திருக்கோணமலையிலும் நள்ளிரவில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. சம்பந்தன் வீட்டின் முன்பகுதியில் கூட பாதிப்புக்கள் காணப்பட்டன.
மறுநாட் காலை நாமும் அங்கு சென்றிருந்தோம். அப்போதைய கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மாஅதிபர் அங்கு வந்தார். சம்பந்தன் நிலைமைகளை விளக்கிக் கூறினார். இவற்றினை அமைதியாகக் கேட்டறிந்த பின்னர், அவ்வதிகாரி சொன்னார்:
ஐயா! யாழ்ப்பாணத்தில் சில தமிழ்த் தலைவர்களின் வீடுகள் தாக்குண்ட போது, நான் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தேன்.
அவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஆனால், நீங்கள் எவ்வித பதற்றமும் இன்றி, நிதானமாகக் காணப்படுகிறீர்கள். இது எப்படி என்றார்.
சிறுவயதில் எனது தந்தையார் கூறிய கூற்றைத்தான் நினைத்துப் பார்க்கிறேன். எமது குலதெய்வம் வில்லூன்றிக் கந்தன் எம்மை எத்தருணத்திலும் காப்பான்.
இடையூறுகள் ஒன்றும் செய்யா. என்பதே எனது தகப்பனாரின் கூற்றாகும். இதுவே எனது துணையாகும்..இப்படிச் சொன்னார் சம்பந்தன். ஆம் சம்பந்தன் வில்லூன்றி முருக பக்தன். திருகோணமலை காவல் தெய்வமாம் காளி பக்தன்.
இரும்பு மனிதன் நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரிடம் காணப்பட்ட அசாதாரண துணிச்சலை இவரிடம் காண்கிறேன்.
ஆனால் ஒரு வித்தியாசம். மிதவாத அடிப்படையில், யதார்த்தைப் புரிந்து கொண்ட, விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்கும் துணிச்சல், இவர் தம் துணிச்சல். இதுவே ஒரு தலைவரிடம் நாம் எதிர்பார்க்கும் இராஜதந்திரம் சார்ந்த துணிச்சல்.
இன்னொரு சம்பவம். மாவட்ட சபைத் தேர்தலில் பங்கு பெறுவதில்லை என்று சுதந்திரக் கட்சி தீர்மானிக்கிறது. சம்பந்தன் சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ அம்மையாரோடு தொடர்பு கொண்டார்.
திருகோணமலையில் மாவட்ட சபைத்தேர்தலில், தங்கத்துரையை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்க சுதந்திரக் கட்சி முன்வந்தது. ஈற்றில் தங்கத்துரை வெற்றி பெறுகிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், இரவோடிரவாக ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் திருகோணமலை சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சிங்கள மக்களின் வீடுகள் தாக்கப்படுகின்றன.
சம்பந்தன் சிங்கள சகோதரர்களின் வீடுகளுக்கு விரைந்து சென்று ஆறுதல் கூறி, பாதுகாப்புக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
நான் மாணவப் பருவத்தில் கொழும்பு சென்றால், பாராளுமன்ற பொதுமக்கள் கலரியில் அமர்ந்து, அக்கால அமர்வுகளை அவதானித்துள்ளேன்.
பணடாரநாயக்கா, ஜி.ஜி பொன்னம்பலம், கொல்வின் ஆர். டீ .சில்வா, ஜயவர்த்தனா, பீட்டர் கெனமன், என்.எம். பெரேரா, பிலிப் குணவர்த்தன, சுந்தரலிங்கம் இன்னோரன்ன பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதங்களை செவிமடுத்துள்ளேன்.
அந்த பரம்பரையினரின் வாதத் திறனை, சொல்லாற்றலை, எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களிடம் யான் கண்ட இங்கிதத்தை, இன்று சம்பந்தனிடம் காண்கிறேன்.
அண்மைக் காலங்களில் ஆரோக்கியமற்ற பாராளுமன்ற அமர்வுகளைப் பார்த்திருக்கிறோம். வாசுதேவ நாணயக்காரா போன்ற பாராளுமன்ற அனுபவஸ்தர்கள் கூட இங்கிதமற்ற வார்த்தைகளைக் கூச்சமின்றி பிரஸ்தாபித்துள்ளனர். சபாநாயகர் பொதுமக்கள் கலரியில் இளைஞர்கள், மாணவர்கள் அமர்ந்துள்ளனர் என்று எச்சரித்தார்.
இப்படியான சூழ்நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகிறார். இங்கிதம் அறிந்த, பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கறிந்த, இடித்துரைக்க வல்ல இரா .சம்பந்தனின் ஆற்றுப்படுத்தலில் பாராளுமன்றம் ஏறுநடை போடும் என்று நம்புகிறோம்.
-வே.வரதசுந்தரம்-