மேலும் 5 அமைச்சர்கள், 45 பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாயன்று பதவியேற்பு Sep 06, 2015 | 1:15 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தில் மேலும் 5 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களை நியமிக்க சிறிலங்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் 42 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 அமைச்சர்கள் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் இன்னமும் பதவியேற்க வேண்டியுள்ளனர்.

ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட 5 புதிய அமைச்சர்களும், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளனர்.

45 பேரைக் கொண்ட பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளில், 27 அமைச்சர் பதவிகள் ஐதேகவுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனையவற்றுக்கு சுதந்திரக் கட்சியினர் நியமிக்கப்படுவர்.

Share.
Leave A Reply