வைபர் (viber) தொலைபேசி அழைப்புகளின் மூலமே, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான சக்திகளை ஒன்று திரட்டியதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் புலனாய்வு அமைப்பான ரோ மற்றும் மேற்குலகப் புலனாய்வு அமைப்புகளின் சதியினாலேயே தாம் அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதாக, மகிந்த ராஜபக்ச கூறுவதில் உண்மையில்லை.

அதில் வெளிச்சக்திகள் எந்தவகையிலும் தொடர்புபடவில்லை. மகிந்த ராஜபக்சவை அகற்றுவதற்கு, என்னை ஏன் மீண்டும் அரசியலுக்கு வரக் கூடாது என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

அதைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. நாமே எமது விவகாரங்களைக் கையாண்டோம்.

ஏனென்றால் அவர், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார். தோல்வியுற்றபோது அதிர்ச்சியடைந்தார். அதற்குப் பலியாடுகளைத் தேட முனைந்தார்.

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக, மைத்திரிபால சிறிசேனவைப் பொதுவேட்பாளராக ஒருங்கிணைப்பதற்கு, இந்தியப் புலனாய்வுப் பிரிவான ரோ வழங்கிய, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தினால் தயாரிக்கப்பட்ட செய்மதி தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.

நாம் “வைபர்” தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தினோம். வைபர் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிந்திருக்கவில்லை.

எங்கிருந்து யார் அழைக்கிறார் என்று சிலரால் அடையாளம் காண முடிந்தாலும், எந்தவொரு புலனாய்வு அமைப்பினாலும், வைபர் அழைப்புகளை ஒட்டுக்கேட்பது கடினமானது.

சிறிலங்காவில் அந்த தொழில்நுட்பம் இருக்கவில்லை. இல்லாவிட்டால் நாம் எல்லோரும் இறந்திருப்போம்.

இதற்காக நான் ஒன்றும் மிகப் பெரிய பணியகத்தை் வைத்திருக்கவில்லை. எனது பணியகத்தை ராஜபக்ச மூடிய பின்னர், என்னால் இரண்டு பேரை மட்டுமே பணிக்கு அமர்த்திக் கொள்ள முடிந்தது. ஆனாலும் நாம் எப்படியாவது செயற்படத் தலைப்பட்டோம்.

சிவில் சமூகத்தின் எழுச்சியேஎமது வெற்றிக்கான பிரதான காரணம். அவர்கள் ஐதேகவுடன் இணைந்திருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க என்னைச் சந்திக்கப் பயப்படவில்லை. எமது நாட்டில் எதிர்க்கட்சி பலவீனப்பட்டிருந்த நிலையில், நாம் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

எனவே அவர்கள் எல்லோருடனும் கைகோர்த்தேன். அது தான் நடந்தது. இறுதியில் பொது எதிரியைத் தோற்கடித்தோம்.” என்று தெரிவித்துள்ளார் சந்திரிகா குமாரதுங்க.
| Edit

Share.
Leave A Reply