பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணமானது சுய நினைவிழந்தமை, உடல் உறுப்புக்களின் தொழிற்பாடுகள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவாசித்ததன் விளைவாக ஏற்பட்டது என முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த சமர சேகர நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தனது இறுதி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வழக்கானது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட திகதிப் படி நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்ட வாதி டிலான் ரத்நாயக்க மன்றில் ஆஜராகியிருந்தார்.
இந் நிலையில் நேற்றைய தினம் ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்படது போன்று கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் கலா நிதி ஆனந்த சமர சேகரவின் இறுதி சட்ட வைத்திய அறிக்கை நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டது.
நீதிவானுக்கு சமர்பிக்கப்பட்ட அவ்வறிக்கையில் தாஜுதீனின் காரில் தீ பரவல் ஏற்படும் போதும் அவர் உயிருடனேயே இருந்ததாகவும், எனினும் அப்போதும் அவர் சுய நினைவிழந்து, இறுதி மூச்சினை விட்டுக்கொண்டு மரணத்தின் விளிம்பில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வஸீமின் இரத்ததில் எத்தனோல் அதிகமாக கலந்திருந்ததாகவும், சம்பவம் இடம்பெற சுமார் இரு மணி நேரத்துக்கு முன்னர் அவர் மது அருந்தியிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விட தாஜுதீனின் தலையில் தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட காயம் உள்ளது. இந்த காயம் காருக்கு உள்ளே வைத்தோ அல்லது வெளியில் வைத்தோ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
அத்துடன் தாஜுதீன் காருக்குள் இருக்கும் போது யாரோ ஒருவரால் அவர் வெளியே இழுத்து வீசப்பட்டிருக்கலாம். அல்லது அவர் கீழே விழுந்திருக்கலாம்.
அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் அவரது அவயவங்கள் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அவரது மார்புப் பகுதியில் வட்ட வடிவமான காயம் ஒன்று உள்ளது. வட்ட வடிவான முனையைக் கொண்ட ஆயுதம் ஒன்றினால் குத்தியதில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம்.
அந்த காயம் விபத்தால் ஏற்பட்டதல்ல. மரணத்துக்கான பிரதான காரணம் காபன் மொனக்சைட் வாயுவை சுவாசித்ததன் பலனாக அந்த வாயு உடலெங்கும் பரவியமையாகும் என அந்த அறிக்கையில் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலாநிதி ஆனந்த சமரசேகர சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அரசின் சிரேஷ்ட சட்ட வாதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் கருத்துக்களை முன் வைத்தார்.
இதன் போது தாஜுதீனின் உறவினர் ஒருவரைத் தேடி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விசாரணை செய்துள்ளதாகவும், தாஜுதீனின் மரண விசாரணை தொடர்பிலான வழக்கின் பிரதான சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட சட்ட வாதி டிலான் ரத்நாயக்க நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அத்துடன் தாஜுதீன் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை புலனாய்வுப் பிரிவினர் நுவரெலியா, அக்கரபத்தனை பிரதேசத்தில் இருந்து மீட்டதாகவும் அதில் தகவல்கள் உள்ளதாக தாம் நம்புவதாகவும் அதனை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சட்ட வாதி டிலான் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர தற்போதைய சட்ட வைத்திய அதிகாரி தனது சோதனைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள கருத்துக்கள் இந்த விசாரணையை பாதிக்கக் கூடியவை எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் சட்ட வாதி தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கின் புத்தகம் மற்றும் ஆவணத்தை பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் வைக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இந் நிலையில் அரசின் பிரதான சட்டவாதியின் வாதத்துக்கு பின்னர் திறந்த மன்றை அழைத்த நீதிவான் நிஸாந்த பீரிஸ், சட்டவாதியின் சில கோரிக்கைகளை நிராகரித்தார்.
தகவல் அறியும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ள நிலையில் வழக்கின் புத்தகம் மற்றும் ஆவணங்களை பெட்டகத்தில் வைத்து பூட்டுவது முறையல்ல என சுட்டிக்காட்டிய நீதிவான் சட்டவாதியின் கோரிக்கையை நிராகரித்ததுடன் இவ்விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்கும் போது ஊடகவியலாளர்கள் தமது ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் கருத்துக்கள் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பின் அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவருமாறு நீதிவான் தெரிவித்தார்.
அதனை விட பிரதான சாட்சியாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து புலனாய்வுப் பிரிவு தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அச்சுறுத்தல் விடுத்தோரை உடன் கைது செய்யுமாறு நீதிவான் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணணி மற்றும் விஞ்ஞான பிரிவில் ஒப்படைந்து பூரண அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனை விட வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் இரண்டாம் பிரேத பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டு வரும் தற்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட குழுவுக்கு அதன் அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி கட்டாயமாக நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும் என நீதிவான் நிஸாந்த பீரிஸ் அறிவித்தல் விடுத்ததுடன் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.