ரியாத்: சவுதி அரேபியாவில் பொது இடத்தில் தனது கன்னத்தில் அறைந்த நபருடன் சமரசம் செய்துகொள்ள, வெளிநாட்டை சேர்ந்த நர்ஸ் ஒருவர், 50 ஆயிரம் ரியால்களை இழப்பீடாக கோரி உள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜஸான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், வெளிநாட்டில் இருந்து வந்து நர்ஸாக வேலை செய்துவருகிறார் ஒரு பெண்.

சமீபத்தில், அவர் கன்னத்தில் அங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு நபர் அறைந்துவிட்டதாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பொது இடத்தில் பெண்ணை அறைந்த குற்றச்சாட்டின் கீழ் அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் அந்த நர்ஸை, அவர் அடித்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

குற்றம் நிரூபணம் ஆனால் தனக்கு இரண்டாண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அறிந்த அந்நபர், பாதிக்கப்பட்ட நர்ஸுக்கு பணம் கொடுத்து, இந்த வழக்கில் சமரசம் செய்துகொள்ள தனது வழக்கறிஞர் மூலம் முயன்றார்.

இதை தொடர்ந்து வழக்கறிஞரும் அந்த பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கு அந்தப் பெண் நர்ஸ் ஒப்புக் கொண்டதால், அடித்தவரிடம் இருந்து 50 ஆயிரம் ரியால்களை (இந்திய மதிப்புக்கு சுமார் எட்டரை லட்சம் ரூபாய்) இழப்பீடாக பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நர்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

Share.
Leave A Reply