யாழ். ஊர்காவற்துறை – வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த யுவதியின் முன்னாள் காதலனும் அவரது நண்பரும் இணைந்தே கணவரை அடித்து காயப்படுத்திய பின்னர் அருகில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் கணவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம், விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், வேலணை கடற்கரைப் பகுதியில் வைத்து இன்று இரு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.