அவசரமாக பஸ் மற்றும் ரயில்களில் ஏறுகின்றமை , விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வீதியைக் கட த்தல் மற்றும் பயணிக்கின்றமை போன்றன ஆபத்தை விளைவிக்கக் கூடியன.
இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்கள் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஷெரின் ஜோசப் என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ராகமையை சேர்ந்த இவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என தெரியவருகின்றது.
இவர் மட்டக்குளிய பிரதேசத்தில் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினத்தன்று வேலையை முடித்து வீட்டுக்குச் செல்ல ரயிலில் ஏற முயன்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அவ் யுவதியின் தந்தையும் அதே ரயிலில் இருந்துள்ளார். அவர் பெண்ணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ள தகவலை கேள்விப்பட்டவுடன் மகளுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் அதன்போது பதில் கிடைக்காமையால் விபத்து நடந்த இடத்தை நோக்கிச் சென்றுள்ளார். இதன்போது தனது மகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இச்சம்பவம் அவர்களின் பிரதேசத்தையே சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.