கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி அவர்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கும் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச பெண்கள் ஆவேசத்துடன் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர்.
முழங்காவில் பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவித்து பெண் ஒருவர் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் இணைந்து செயற்படுகின்றது. கடந்த 2012முதல் கிளிநொச்சி முழங்காவிலில் வீடமைக்கும் பணியில் அவ் அமைப்பு ஈடுபடுகிறது.
இலங்கை செஞ்சிலுவை சங்க நிதி விடுவிப்பு பணியாற்றும் கொழும்பு அதிகாரிகள் இருவர்மீதே குறித்த பெண்ணால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கொழுமபு அலுவலகமும் கிளிநொச்சி அலுவலகமும் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பாலியல் இலஞ்சம் கோரும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளதாக இனம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளபோதும் கணவனை இழந்த பெண் ஒருவரே முதலில் துணிந்து முறைப்பாடு செய்துள்ளார்.
விடுமறை நாளில் அவர் குறிப்பிடும் இடத்திற்குச் சென்று மேலதிகாரியை சந்தித்தால் இலகுவில் நிதியை விடுவித்து விடலாம் என்று அலுவலரை் ஒருவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.
வீட்டுத்திட்டத்திற்கான பணத்தை வழங்குவதில் இழுபறி நிலமை காணப்பட்டுள்ளதுடன் பணத்தை வழங்காமல் மனிதாபிமானமற்ற முறையில் மிரட்டியதாகவும் எதிர்த்தால் வீட்டுத்திட்டம் பறிபோகும் என எச்சரித்து உள்ளதாகவும் தெரிய வருகிறது.
பாலியல் இலஞ்சம் கோரியமை உள்ளிட்ட 25இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில்விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர் நிமால் குமார் கூறியுள்ளார்.
மிகவும் கீழ்தரமான இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்டவேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அநீதிகள் நடைபெறாது மக்களுக்கு வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச பெண்கள் தெரிவித்தனர்.