காஞ்சிபுரம்: ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் செய்யூரில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா, கட்டளை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகள் கௌசல்யா (17). இவர், செய்யூரை அடுத்த தேவனூர் பகுதியில் உள்ள தனது பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மகளிர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கெளசல்யா நேற்று காலை 7.30 மணி அளவில் பள்ளிக்கு செல்ல தயாரானபோது, அவருக்கு செல்போனில் அழைப்பு வந்திருக்கிறது.
அதில் பேசி முடித்ததும் அவர் அழுதபடி வீட்டுக்குள் ஓடி இருக்கிறார். ஏன் அழுகிறாய் என்று பாட்டி கேட்டபோது எதுவும் சொல்ல தனது அறைக்குள் சென்றிருக்கிறார்.
அதன்பின் கெளசல்யா வெளியே வராததால், அவரது பாட்டியும் அக்கம் பக்கத்தினரும் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.
அப்போது, அங்கு அறையில் கெளசல்யா தற்கொலை செய்துகொண்டு தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மேலும், அவர் கையில் ஒரு கடிதம் இருந்துள்ளது.
அந்தக் கடிதத்தை எடுத்து படித்தபோது, கெளசல்யாவின் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றும் வடக்கு செய்யூரைச் சேர்ந்த ரமேஷ் (40) கவுசல்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனால் கெளசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், கெளசல்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஆசிரியர் ரமேஷ் அவருடன் பேசி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
அந்த கடிதத்தில் கெளசல்யா, ”தலைமை ஆசிரியர் அவர்களுக்கு… உங்கள் பள்ளி மாணவி கெளசல்யா எழுதிக் கொண்டது.
நான் சொல்வது அனைத்தும் பைபிள் மீது சத்தியம், உண்மை. இந்த கடிதம் நானே சொந்தமாக என் கைப்பட எழுதியது.
நான் இந்த உலகத்தைவிட்டே போகப்போகிறேன். அதாவது சாகப்போறேன். என் சாவுக்கு முக்கியமான காரணம் ஆசிரியர் ரமேஷ் சார்தான்.
அவர் நல்லவர் கிடையாது. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அவர் என்னிடம் தப்பாக நடந்தார். என் மேல் கை வைத்தார். தயவுசெய்து அவருக்கு இதற்கான தண்டனையைக் கொடுக்க வேண்டும். பசங்க எல்லோரிடமும் கேட்டுப்பாருங்கள்.
அவர் என்னிடம் மட்டுமல்ல… இதற்கு முன் நிறைய பொண்ணுங்ககிட்ட தப்பாக நடந்திருக்கிறார். தயவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள். தயவுசெய்து அவர் நல்லவர் என்று சொல்லிவிடாதீர்கள். நான் சொல்வது முழுவதும் உண்மை.
நான் உயிரோடு இருந்து சொன்னால் நீங்கள் நம்புவீங்களா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் ஒரே முடிவு நான் சாவுறதுதான். இதற்காக நான் ரொம்ப வருந்துகிறேன்.
இது அனைத்தும் உண்மை. ஏசுநாதர் மீது சத்தியம், என்னை படைத்த கடவுள் மீது சத்தியம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள் மீது சத்தியம். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை.” என்று எழுதி இருக்கிறார்.
தன்னை சீரழித்ததாக மாணவி கெளசல்யா உருக்கமாக எழுதிய கடிதம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே கெளசல்யாவின் உடலை மீட்டு, அந்தக் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு அவரது உறவினர்களும், அந்தக் கிராமத்தினரும் செய்யூர்-மதுராந்தகம் நல்லூர் கூட்டுசாலையில் மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த மதுராந்தகம் டி.எஸ்.பி. சிவசங்கர், சித்தாமூர் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் ஏ.எஸ்.பி. செந்தமிழ்ச்செல்வன் வந்து, மாணவி கெளசல்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்பிறகு அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாணவி கெளசல்யாவின் தற்கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆசிரியர் ரமேஷை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
– பா.ஜெயவேல்