எல்லூரு( ஆந்திரபிரதேசம்) 4 வயது சிறுமியை விளையாட்டு மைதானத்தில் வெயிலில் சூடாகி கிடந்த இரும்பு தகடில் அமர வைத்து ஆசிரியை தண்டித்த நெஞ்சை பதற வைக்கும் கொடுமையான சம்பவம், ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இப்படி தண்டிக்கும் அளவுக்கு அந்த சிறுமி செய்த ஒரே குற்றம் வகுப்பறையில் சிறுநீர் கழித்ததுதான். ஆந்திர மாநிலம் எல்லூரு என்ற இடத்தில் உள்ள ‘ஹோப்’ என்ற தனியார் பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வகுப்பறையில் சிறுமி சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதற்காக ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியை, அந்த சிறுமியை தண்டிக்கும் நோக்கத்தில் அந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு இழுத்து சென்று, மத்தியான வெயிலில் சூடேறிப்போய் கிடந்த இரும்பு தகடு ஒன்றில் அமர வைத்துள்ளார்.

ஆனால் அதில் அமர்ந்த அடுத்த நிமிடமே சூடு பொறுக்க முடியாமல் அந்த சிறுமி அழுது கதறி உள்ளாள். மேலும் அச்சிறுமியின் பிறப்புறுப்பிலும் இரும்பு தகட்டின் சூட்டினால் காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த சிறுமி வலி தாளாமல் அழுதுகொண்டே இருக்க, மாலையில் பெற்றோர் பள்ளிக்கு வந்த பின்னரே நடந்த கொடூரம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி முதல்வரையும், நிர்வாகத்தினரையும் கேட்டுள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தண்டித்த ஆசிரியை, பள்ளி முதல்வர் மற்றும் ஆயா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே நடந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

மேலும் மாநில குழந்தை உரிமைகள் அமைப்பும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தொடக்க பள்ளிக் கல்வியும் கூட முற்றிலும் வணிக மயமாகிவிட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. “குழந்தைகளையும், அவர்கள் தொடர்பான பிரச்னைகளையும் எப்படி கையாள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை.

இதுபோன்ற ஒரு சிறிய பிரச்னையை கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அந்த ஆசிரியைக்கு குழந்தைகளுடன் இருக்கும் தகுதியே கிடையாது   என்றுதான் சொல்ல வேண்டும்”  என்று கூறுகிறார் குழந்தைகளுக்கான உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் அச்சட் ராவ்.

Share.
Leave A Reply