இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (16) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கைதிகளின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘எனது கணவனைக் கைது செய்து கொண்டு செல்லும் போது, எனது வயிற்றில் பிள்ளையிருந்தது. தற்போது எனது பிள்ளைக்கு 5 வயதாகின்றது. இன்னமும் எனது கணவனை விடுதலை செய்யவில்லை.
எங்களிடம் அழுவதற்கு கண்ணீர் இல்லை. எனது கணவரையும் மற்றவர்களையும் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் மன்றாடிக் கேட்கின்றோன்’ என போராட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவர் அழுதமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
35 பேரின் உடல்நிலை மோசம் உண்ணாவிரதம் தொடர்கிறது
35 பேரின் உடல்நிலை மோசம் உண்ணா விரதம் தொடர்கிறது.. “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்”
எமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ளபோதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது விடுதலை தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உத்தியோக பூர்வமான முடிவொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு தோல்வியில் நிறைவடையுமாயின் தமது விடுதலை வலியுறுத்தும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு
உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது.
நீண்டகாலமாக விசாரணைகளின்றி நாடாளவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 217பேர் நல்லாட்சி அரசாங்கம் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஐந்தாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
கைதிகளின் உடல் நிலை மோசமடைந்தது நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவர் அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது பலரின் நிலைமை மோசமைடந்து வருகின்றமை தொடர்பில் மருத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் மகசின் நிறைச்சாலையில் 12பேரின் உடல் நிலை மோசமடைந்து நண்பகலளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்றிரவு மகசின் சிறைச்சாலையில் உடல் நிலை மோசமடைந்த நிலையில் எண்மரும் அநுராதபுர சிறைச்சாலையில் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதற்கு முன்னதாக 12பேர் குறித்த இரு சிறைச்சாலைகளிலிருந்தும் உடல்நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
சிறைச்சாலைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள், மதகுமார்கள் விஜயம்
அதேவேளை நேற்றைய தினமும் மகசின் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விஜயம் செய்து கைதிகளுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை, அருட்தந்தை சக்திவேல், வட்ரக்க விஜித தேரர் உள்ளிட்டோரும் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவையும் வெளியிட்டனர்.
மேலும் அவர்களின் விடுதலைக்காக தம்மாலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இதேநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நண்பகலளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் மற்றம் சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆகியோர் நேரில் சென்று கைதிகளை பார்வையிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருநதயநாதன் கைதிகள் விடுதலை குறித்து கூட்டமைப்பின் தலைவரிடம் விரைந்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளின் நிலைப்பாடு
நேற்றுக் காலையில் நீதிஅமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்த போது நவம்பர் ஏழாம் திகதிக்கு முன்னதாக இவ்விடயத்திற்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டபோதும் அது தொடர்பாக உத்தியோக பூர்வமான அறிவித்தல்கள் எவையுமே எமக்கு விடுக்கப்படாததன் காரணமாக நாம் தொடர்ந்தும் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
எமக்கு ஜனாதிபதியிடமிருந்து உத்தியோக பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம்.
கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை
எமது விடுதலையை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் வெளிட்ட விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. அதனையும் கருத்திற்கொண்டே வடக்கு கிழக்கு மக்கள் ஆணைவழங்கியுள்ளனர்.
அவ்வாறான நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவை கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சந்தித்து வலியுறுத்தவேண்டும். அதன் மூலம் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுத்து ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்தித்த பின்னரும் கூட இணக்கப்பாடு எட்டப்படாதிருக்குமாயின் அனைவரும் ஒன்றுபட்டு எமது போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.
இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தமிழ் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால்..பாரிய அனர்தம் ஏற்படலாம்!!: தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்வு கூறல்!! -(வீடியோ)