தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஆறு தினங்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதம் நேற்றுக் காலையுடன் முடிவுக்கு வந்ததது.
அரசியல் கைதிகளை எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்றுக் காலை தெரிவித்தார்.
இதனையடுத்தே உண்ணாவிரதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுக் காலை மெகஸின் சிறைச்சாலைக் குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பார் வையிட்டதுடன் அவர்களிடம் ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்தையும் தெரிவித் தார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
முன்னதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
பொலநறுவையிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கைதிகளின் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் தாம் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
எதிர்ககட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் நடவடிக்கையையடுத்து ஜனாதிபதி மேற்படி உத்தரவாதத்தை வழங்கியுள்ளதுடன் கைதிகளின் உண்ணாவிரதமும் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளை நேற்றுக் காலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ ஆகியோருடன் பேச்சுவார்ததை நடத்தினேன்.
அரசியல் கைதிகள் தாமதமில்லாமல் விடுதலை செய்யப்ட வேண்டும். இந்த மாதம் முடிவடைவதற்குள் அவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்டவேண்டும். அடுத்த மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் அந்தக் கருமம் நிறைவடைய வேண்டும் என்கின்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்.
ஜனாதிபதி எவ்வித தயக்கமுமின்றி எமது கோரிக்கையினை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அத்துடன் குறித்த விடயத்தை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இது தொடர்பான கட்டளையொன்றை தான் நீதியமைச்சருக்கு அனுப்பிவைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஜனாதிபதி தன்னுடன் பேசி அவ்விதமான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அதன்படி நடவடிக்கை எடுப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார்.
எனவே, அரசியல் கைதிகளின் விடுதலை இம்மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் கைதிகளின் விடுதலை முடிவடைய வேண்டும்.
எனினும் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது. அதாவது பாராதூரமான வழக்குகளுடன் தொடர்புடையவர்களின் விடயம் இரண்டாம் கட்டமாகக் கருதப்படும்.
அவ்வாறான பாராதூரமான வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சுமார் 30 பேர் வரையில் இருக்கலாம். எனவே அவர்கள் தவிர்ந்த ஏனைய அரசியல் கைதிகள் எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுவர்.
ஆகவே, குறித்த விடயத்தை சிறைக் கைதிகளுக்கு எடுத்துக்கூற வேண்டிய கடப்பாடு எமக்கிருந்தது.
ஆனால் இன்று காலை (நேற்று காலை) இங்கு வந்து இந்தச் சிறையிலுள்ள நூற்றுக்கும் அதிகமான கைதிகளைச் சந்தித்து நிலைமையினை விளக்கினோம்.
அப்போது, ஜனாதிபதி வழங்கியிருக்கும் வாக்குறுதியை ஏற்று அதனை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் தமது உண்ணாவிரதத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு கைதிகள் இணங்கினர்.
எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலிருந்தால் அடுத்த மாதம் ஏழாம் திகதிக்குப் பின்னர் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அரசாங்கம் நிச்சயமாக தனது வாக்குறுதியை நிறைவேற்றும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர்மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
எனினும், அரசாங்கம் வழங்கியிருக்கும் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த மாதம் ஏழாம் திகதிக்குப்பின்னர் கைதிகள் தொடங்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில் , உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளில் 32 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இந்நிலையில் எவரும் மரணிக்க நேர்ந்தால் அது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி இது, தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதியமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களிடமிருந்தே உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் உங்கள் வார்த்தையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எனவே அதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன் ஏலவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் தொடர்து புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்றார்.