பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, அண்மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்கப்பட்ட இருவர் மட்டக்களப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட போது, அவர்களை முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றே பொலிஸ் தரப்பு அடையாளப்படுத்தியிருந்தது.
அதுபோலவே, சிங்கள, ஆங்கில ஊடகங்களும், அவர்களை முன்னாள் விடுதலைப் புலிகளாகவே அடையாளப்படுத்தி செய்திகளை வெளியிட்டன.
ஆனால், பிரதீப் மாஸ்டர், புலிகள் இயக்கத்தில் இருந்து, கருணாவோடு பிரிந்து சென்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்தவர்.
அந்தக் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
பின்னர் அங்கிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டவர்.
அவையெல்லாம் மறைக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற அடையாளமே பெரிதுபடுத்தப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வவுனியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட போதும், முன்னாள் விடுதலைப் புலிகள் என்றே பொலிஸ் தரப்பும் அடையாளப்படுத்தியது, சிங்கள, ஆங்கில ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபரான- தற்போது சுவிஸில் இருக்கும் சேரனும் கூட, முன்னாள் விடுதலைப் புலி என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த மூன்று படுகொலைகள் தொடர்பான விசாரணைகளும் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படலாம், அல்லது குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்படவும் கூடும். அதுவல்ல விவகாரம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக, கடந்தவாரம் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர். அவர் கைது செய்யப்பட்ட போது, சர்வதேச ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நெருக்கமானவர் என்றே குறிப்பிட்டன.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு, தமிழர் தரப்பில் இருந்தே ஆட்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தான் முக்கியமான விடயம்.
இது அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு தந்திரமான சூழ்ச்சி.
2004ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவை அப்போதைய அரசாங்கங்கள், எந்தளவுக்குத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பை வகித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தனியாகப் பிரிந்து சென்ற போது, அரசாங்கமும், இராணுவமும் தமக்குச் சாதகமாக அவரைப் பயன்படுத்திக் கொண்டன.
இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டும் அவர்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஒரு துணை ஆயுதக் குழுவாக- கூலிப்படையாகவும் அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது என்பது படிப்படியாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஐ.நா. விசாரணை அறிக்கைகளில் கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கிழக்கில் கருணா குழுவின் படுகொலைகள், மற்றும் மீறல்கள், சிறார் படைச்சேர்ப்பு என்பன குறித்து ஐ.நா. விசாரணை அறிக்கை குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது.
கிழக்கில் கருணா குழு சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொண்ட போது அதனைப் படையினர் வேடிக்கை பார்த்ததாகவும், அதன் மூலம், அரசாங்கமும் அதன் படைகளும் கூட சிறார் படைச் சேர்ப்புக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் ஐ.நா. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போது நடக்கின்ற விசாரணைகள், துணை ஆயுதக்குழுக்களாக- கூலிப்படைகளாப் பயன்படுத்தப்பட்டவர்களை மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
கொலைகள், மீறல்கள் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்துக் கட்டளையிட்டவர்களை நோக்கி, இந்த விசாரணைகள் இன்னமும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? என்ற கேள்வி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள், விடுதலைப் புலிகளின் பக்கம் நின்றவர்கள் என்பதற்காக நிகழ்த்தப்பட்டவையல்ல.
தமிழ் மக்களின் பக்கம் நின்றதால், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகிற்கு எடுத்துக் கூறியதால் தான் அவர்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.
அவர்களின் வாயை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கொலைகள் நிகழ்த்தப்பட்டன.
பிரகீத் எக்னெலிகொட
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவும் கூட, இறுதிக்கட்டப் போரில் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது பற்றிய தகவல்களை அறிந்திருந்த காரணத்தினால் தான், கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட கூறியிருக்கிறார்.
போர்க்குற்றங்களை மறைப்பதற்காகவே அவர் காணாமற்போகச் செய்யப்பட்டாரா என்பதை நீதிமன்ற விசாரணை தான் உறுதிப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும், முன்னைய அரசாங்கமும், இராணுவமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவை தமக்குச் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
இந்த வரிசையில் கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும், கைது செய்யப்பட்டால் கூட ஆச்சரியமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கிறார்.
அவர்கள் தொடர்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தியிருக்கிறார்.
எனினும், பிள்ளையானின் கைதுக்குப் பின்னர், கருணா அளித்திருக்கின்ற பேட்டி ஒன்றில், தாம் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை என்றும் தம்மை யாராலும் கைது செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
தனது பெயரைப் பயன்படுத்தி சிலர் குற்றங்களை இழைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் காலகட்டங்களில் தாம் இந்தியாவிலேயே தங்கியிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை தொடர்பாக, கருணாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விசாரணைகள் நடத்தப்படும் என்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தில் இருந்து, பிரிந்து சென்ற பின்னர் தாம் இந்தியாவில் தங்கியிருந்ததாக கருணா முன்னரும் இந்தியத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவுமே தம்மை கொழும்புக்கு அழைத்து வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்ததாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
அதைவிட, தாம், எந்த தகவல்களையும் இராணுவத்துக்கு வழங்கவில்லை என்றும் அவர் அந்த தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதற்குப் பின்னர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு பேட்டியில், தாம் பதவியேற்ற போது, கருணா கொழும்பில் தனியான இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்னும், அவரிடம் இருந்து பிரபாகரனின் மறைவிடம் பற்றிய தகவல்களை தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தாம் புலிகள் இயக்கம் பற்றிய தகவல்களை இராணுவத்துக்கு வழங்கவில்லை என்று கருணா கூறியிருப்பதை யாராலும் நம்ப முடியாது.
புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கருணாவை, எந்த ஆதாயமும் இல்லாமல், இலங்கை அரசாங்கமும், இந்தியாவும், பாதுகாப்பாக மறைத்து வைத்திருக்கும் என்று யாரையும் நம்பவைக்க முடியாது.
கருணா இந்தியாவில் மறைந்திருந்தார் என்பதானது அவரை இந்தியாவும் கூடப் பயன்படுத்தியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, கருணா கிழக்கில் இருந்து தப்பிக் கொழும்பு சென்ற போது எடுத்துச் சென்ற பிரீவ்கேஸ் முழுவதும் புலிகளின் முகாம்கள் தொடர்பான வரைபடங்களே இருந்தாகவும், அவர் அதனைத் தனக்குத் திறந்து காட்டியதாகவும், தகவல் வெளியிட்டிருக்கிறார் அலிசாஹிர் மௌலானா.
கருணாவின் நண்பரான இவரே, கிழக்கில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்.
இவர் மூலமே, கருணாவை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தமது பக்கத்துக்கு இழுத்தது.
இதனை அலிசாஹிர் மௌலானாவின் செவ்வி வெளிப்படுத்தியிருக்கிறது.
தாம் இராணுவத்தினருக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று கருணா கூறுகின்ற நிலையில், எதற்காக புலிகளின் முகாம்கள் பற்றிய வரைபடங்களுடன் தப்பிச் சென்றார் என்ற கேள்வி எழுவது இயல்பு.
எவ்வாறாயினும், புலிகள் இயக்கத்துக்குள் தோன்றிய அல்லது திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட பிளவை, அரசாங்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காக மட்டுமன்றி, அரசியல் ரீதியாக தமிழர்களின் குரலை அடக்கவும், இந்தப் பிளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்போதும் கூட, இத்தகைய குற்றங்களை திட்டமிட்டு செயற்படுத்தியவர்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவில்லை.
இந்த விசாரணைகளின் இறுதியில், புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே குற்றவாளிகளாக தீர்ப்பிடப்படக் கூடும். அதனை எதிர்பார்த்தே, அரசாங்கங்கள், தந்திரமாகத் திட்டமிட்டு, செயலாற்றியிருக்கின்றன.
தமிழரின் போராட்டம், எவ்வாறு சதிகளுக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை, இப்போது நடக்கின்ற விசாரணைகள் மட்டுமன்றி இனி நடக்கும் விசாரணைகளும் கூட வெளிப்படுத்தக் கூடும்.