சென்னை: இந்திய சினிமாவின் கவனம் தற்போது சரித்திரப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது ஜோதா அக்பர் போன்று ஒரு சில படங்களைக் கொடுத்த இந்திய சினிமா தற்போது ஏராளமான படங்களைக் கையில் எடுத்திருக்கிறது.
பாகுபலியின் மூலம் இதற்கு விதைபோட்ட ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் 2 வது பாகத்தை எடுத்து வருகிறார்.
பாகுபலி தொடங்கி, புலி, பாஜிரோ மஸ்தானி(ஹிந்தி) ருத்ரமாதேவி போன்ற படங்கள் சரித்திரப் படங்களாக உருவாகி இருக்கிறது. அந்த வகையில் அனுஷ்காவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ருத்ரமாதேவி படத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ருத்ரமாதேவி உண்மைக் கதை
ருத்ரமாதேவி வரலாற்றில் நடந்த ஒரு உண்மைக்கதை. காக்கத்திய வம்சத்தை ஆண்ட ராணி ருத்ரமாதேவி (1285 – 1289) சாளுக்கிய அரசன் வீரபத்ரனை மணந்து தனது எதிரிநாட்டு அரசர்களை தோற்கடித்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கினார் என்று சரித்திரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசத்தை ஆட்சி புரிந்து வரலாற்றில் தனது பெயரை நிலைக்கச் செய்தவர் ராணி ருத்ரமாதேவி.
ருத்ரமாதேவி கதை
காக்கத்திய நாட்டை ஆளும் அரசர் கணபதி தேவுடுவுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பெண் குழந்தை பிறந்தால் அரசரைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற அவரின் சகோதரர்கள் சுமன் மற்றும் ஆதித்ய மேனன் காத்திருக்கின்றனர்.
மற்றொருபுறம் எதிரி நாட்டு அரசனும் பெண் குழந்தை பிறந்தால் நாட்டின் மீது படையெடுத்து வர திட்டமிடுகிறான்.
இந்த சூழ்நிலையில் பெண் குழந்தையை மகராணி பெற்றெடுக்கிறார். பெண் குழந்தை பிறந்த செய்தி அறிந்த அரசரும், முதன்மை மந்திரி சிவ தேவையாவும் சேர்ந்து பிறந்த குழந்தை ஆண்தான் என்று வெளியுலகத்திற்கு அறிவித்து விடுகின்றனர்.
பிறந்த குழந்தையை 14 ஆண்டுகள் காட்டுக்குள் வைத்து வளர்த்து வருகின்றனர்.தான் பெண் என்று தெரிந்தாலும் தனது தாய் நாட்டிற்காக தான் அப்பா பொய் சொல்லியிருக்கிறார் என்று அறியும் அனுஷ்கா, ஆண் வேடத்தையே தொடர்கிறார்.
ஒருநாள் ஊர்மக்கள் மற்றும் எதிரிநாட்டு மன்னன் ஆகியோருக்கு அனுஷ்கா ஆண் அல்ல பெண் என்று தெரிய வருகிறது இந்த சூழ்நிலையில் அனுஷ்கா எதிரிகளை வென்று நாட்டு மக்களை காப்பாற்றினாரா? இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்
அனுஷ்கா
படம் மொத்தத்தையும் தனது தோள்களில் தூக்கி சுமந்திருக்கிறார் அனுஷ்கா. மேக்கப் போடாத ருத்ரதேவன் மற்றும் அழகான ருத்ரமாதேவி என 2 வேடங்களில் அசத்தியிருக்கிறார். முக்கியமாக சண்டைக் காட்சிகள்,
போர்க்களக் காட்சிகள் ஆகியவற்றில் அனுஷ்காவின் உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. எந்த வேடத்திலும் பொருந்திப் போகும் தன்மை அனுஷ்காவிற்கு இந்தப் படத்திலும் கை கொடுத்திருக்கிறது.
நித்யாமேனன், கேத்தரின் தெரசா என்று நிறைய நட்சத்திரங்கள் படத்தில் இருந்தும் கூட அனுஷ்காவின் நடிப்பிற்கு முன்னால் அவர்களின் நடிப்பு எடுபடவில்லை.
அல்லு அர்ஜுன்
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் கொள்ளைக்காரன் சண்டி வீரனாக நடித்திருக்கிறார். குதிரையில் அட்டகாசமாக என்ட்ரி கொடுக்கும் அவரது ஆரம்ப காட்சியே அசத்தல் ரகம். தனது நடிப்பால் படத்தைத் தாங்கினாலும் இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பொருந்தாததால் ருத்ரமாதேவியில் சற்று அந்நியப்பட்டு தெரிகிறார் அல்லு அர்ஜுன்
ராணா டகுபதி
சாளுக்கிய இளவரசன் வீரபத்திரனாக நடித்திருக்கும் ராணா படத்தில் அழகாக காட்சியளிக்கிறார், ருத்ரமாதேவிக்கு உதவி புரிகிறார். ஆனால் பாகுபலியில் அப்படியொரு வில்லத்தனம் செய்தவரை இந்தப் படத்தில் இயக்குநர் குணசேகர் பயன்படுத்தாமல் விட்டிருப்பது படத்தின் பலவீனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
பிரகாஷ் ராஜ்
அனுஷ்கா, அல்லு அர்ஜுன் இருவருக்கும் அடுத்து படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது பிரகாஷ்ராஜ்தான். மதியூக மந்திரியாக படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் தனது பங்கை நிறைவாக செய்திருக்கிறார், எதிரிகள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்ததும் அவர் மயங்கி விழும் காட்சி ஒன்றே போதும் அவரின் நடிப்புத் திறமையை பறை சாற்றுவதற்கு.
முன்னணிக் கலைஞர்கள்
பா.விஜயின் வசனங்கள்,தோட்டாதரணியின் கலையமைப்புகள், அஜயன்வின்சென்டின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை, பீட்டர்ஹெயினின் சண்டைப்பயிற்சி, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் இத்தனை இருந்தும் ருத்ரமாதேவிக்கு பலம் சேர்க்கவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.
குணசேகர்
ஒரு இயக்குனராக இந்த மாதிரி உண்மைக் கதையை கையில் எடுத்த குணசேகர் அதனை மக்களிடம் சொல்லத் தவறிய விதத்தில் சோடை போயிருக்கிறார்.
திரைக்கதையில் ஏராளமான ஓட்டைகள், தொடர்பில்லாத காட்சிகள், சொதப்பிய எடிட்டிங் போன்ற காரணங்களால் ருத்ரமாதேவி மக்கள் மனதைக் கவருவது சற்று சிரமம்தான். எனினும் அனுஷ்காவின் அசாதாரணமான நடிப்பிற்காக ருத்ரமாதேவியை ஒருமுறை தரிசிக்கலாம்….