சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது சர்வதேச ஆதரவுடன் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என சபையில் சூளூரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா ஐ.நா. அறிக்கை எமக்கு முழுமையாக நம்பிக்கை தராவிடடாலும் ‘கலப்பு’ உள்ளக விசாரணை என வலியுறுத்தப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்க தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 20 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியில்,
விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன எம்.பி. க்கள் உட்பட இடதுசாரிகள் இணைந்து நடத்திய பொதுக் கூட்டமொன்றில், தனிச்சிங்கள தேசத்தை உருவாக்குவோம். அதற்காக சிங்கள கொடிகளுடன் அணிதிரள்வோம் எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு இக் குழுவினர் இலங்கை முழுவதையும் சிங்கள ராஜ்ஜியத்தை உருவாக்கினால், அது தனித் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமையும்.
அவ்வாறு சிங்கள ராஜ்ஜியம் உருவானால் நாம் தனித் தமிழீழ ராஜ்ஜியத்தை சர்வதேசத்தின் ஆதரவுடன் உருவாக்குவோம்.