திரிபோலி: படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 40 அகதிகளின் சடலங்கள் லிபியா நாட்டு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. எனவே, அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர்.

அவ்வாறு அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் மாயமானார்கள்.

உயிரிழந்த அகதிகளின் உடல்கள் லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் முஹம்மது அல்-மஸ்ரிதி தெரிவித்துள்ளார். மாயமான 30 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Share.
Leave A Reply