நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்து, நீண்ட நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுக்காலை 10 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் செயலகத்தில் ஆரம்பமானது.

75சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், உறுப்பினர்களான சர்வேஸ்வரன், இரா.துரைரட்ணம், புளொட் சார்பில் சித்தார்த்தன், ஆர்.ராகவன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), ஸ்ரீகாந்தா ஆகியோர் பங்கு பற்றினர்.

TNA-co-meeting-2

இந்தக் கூட்டத்தில் ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கூட்டம் ஆரம்பித்தவுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா.தீர்மானம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து ஐ.நா.தீர்மானம் தொடர்பாக பங்காளிக்கட்சிகள் தமது நிலைப்பாட்டை முன்வைத்தன.

குறிப்பாக நாம், மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணையையே கோரியிருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அதனையே முன்வைத்திருந்தோம். அதற்கும் சேர்த்தே மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை தேவை என்று கூறப்படாது விட்டாலும் கலப்பு விசேட நீதிமன்றம் என்ற பொறிமுறை முன்மொழியப்பட்டிருந்தது.

இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அந்த விடயம் நீக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையாக மாற்றப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சுட்டிக்காட்டின.

74

இதன்போது ஐ.நா.தீர்மானத்தில் கலப்பு பொறிமுறையொன்றே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நேரடியாக குறிப்பிடப்படவில்லையெனவும் கூறி இரா.சம்பந்தன் அதற்குரிய காரணங்களை முன்வைக்க முனைந்த வேளையில், பங்காளிக்கட்சிகள் அதனை நிராகரித்தன.

மேலும் இவ்வாறான முக்கியமான விடயமொன்றில் கூட்டமைப்பு எவ்வாறான முடிவுகளை எடுப்பது. எந்தெந்த தரப்புக்களை சந்திப்பது என்பது குறித்து கூடிய ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்கிறது என்ற விடயத்தை நாம் அறிந்திருந்தோம் எனவும் குறிப்பிட்டன.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனிவா செல்வதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்றும் மாறாக அவருடன் யார் சென்றார்கள். அங்கு அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பு எடுத்த முடிவா என்தே பெரும் பிரச்சினையாகவுள்ளது என்றும் குறிப்பிட்டன.

இதன் காரணத்தாலேயே குறித்த தீர்மானம் தொடர்பில் எம்முள் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் பொதுமக்களிடத்தில் செல்ல வேண்டியதாயிற்று. ஓரிருவர் எடுத்த முடிவுகள் எவ்வாறு ஒட்டுமொத்த கூட்டமைப்பின் முடிவாக அமையும் எனவும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கேள்வியெழுப்பினர்.

எமக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதும் இந்த விடயம் மக்கள் சார்ந்ததொன்று. ஆகவே கருத்தொற்றுமையில் செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

இவ்விடயம் தொடர்பில் அனைத்துலகத்தை எதிர்த்து எம்மால் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்ற வினா இருந்தாலும் கூட, அனைத்துலக நாடுகளிடம் எமது மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்கும் பட்சத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.

இது தேசிய இனப்பிரச்சினைக்கான கதவை திறப்பதற்கான ஆரம்பமாக அமையும் முக்கிய விடயமொன்றாகின்றது. அவ்வாறிருக்கையில் தீர்க்கமான விடயங்கள் குறித்து எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இத்தீர்மானத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு எவ்வாறு கூட்டமைப்பு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் பங்காளி கட்சிகள் கேள்வியெழுப்பின.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை எவ்வாறு நிறைவேற்றுவதென பங்காளிக்கட்சிகள் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினா எழுப்பின.

அப்போது வரும் 31ஆம் நாளில் இருந்து பாரிய குற்றங்கள் இழைத்தவர்களாக இனங்காணப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை விடுப்பதாகவும் அல்லது புணர்வாழ்வுக்கு உட்டுத்துவதாகவும் எமக்கு அரசாங்கத் தரப்பினர் உறுதிமொழி வழங்கியுள்ளார்கள் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பு என்ற கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கும் அவ்வாறான முடிவொன்றை வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுமென்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே முதலில் உறுதிமொழி அளிக்கப்பட்டதன் பிரகாரம் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், வழக்குகள் தொடுக்கப்பட்டு காலதாமதத்துடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவோர், தண்டனை அனுபவித்து வருவோர் தொடர்பாக நடவடிக்கைகள் முன்னெடுப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏனையோர் தொடர்பாக சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

index

இதன்போது சட்ட நுணுக்கங்களை பார்ப்பதை விடவும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது யதார்த்தமானது. ஜே.வி.பினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய- சிறிலங்கா உடன்பாட்டு காலப்பகுதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இது புதியதொரு விடயமல்ல. தற்போதுள்ள சூழலில் இவர்களை விடுவிப்பதே நல்லெணத்தை கட்டியெழுப்புவதற்கான முதற்கட்டமாக இருக்குமென பங்காளிக் கட்சிகள் சுட்டிக்காட்டின.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டமைப்பாக செயற்பட வேண்டியதற்கான தற்போது ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஓருபுறத்தில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள அதேசமயத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறானதொரு நிலைமையில் கூட்டமைப்பிலிருந்து வெவ்வேறு பட்ட கருத்துக்கள் மக்களிடத்தில் செல்வதாலோ அல்லது ஒருவர் இருவர் முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவுகள் என அறிவிப்பதாலே முரண்பாட்டானதொரு சூழல் ஏற்படுவதுடன் மக்களை குழப்பத்திற்குள் கொண்டு செல்வற்கே வழிசமைக்கும்.

TNA-co-meeting-1

தமிழரசுக் கட்சி தனியாக முடிவுகளை எடுப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. அவ்வாறு எடுக்கப்பட்டால் அது தமிழரசுக் கட்சியின் முடிவென்றே பகிரங்கப்படுத்துங்கள் அதில் தவறில்லை.ஆனால் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் முடிவாக திணிப்பதற்கான முயற்சிகளை கைவிடுங்கள்.

கூட்டமைப்பை உறுதியான கட்டமைப்பாக மாற்றுவதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை அனைத்துமே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதுதொடர்பில் உரிய நடவடிக்கைள் அவசியமென பங்காளிக்கட்சிகள் குறிப்பிட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சில தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன எனக் குறிப்பிட்டதுடன் நாம் கூட்டமைப்பாகவே செயற்படுகின்றோம். தனியாக செயற்படுவதாக கருதாதீர்கள். அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் அவசியம்.

இவ்விடயங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா இல்லாததன் காரணத்தால் முடிவொன்றை எடுக்கமுடியாதுள்ளது. ஆகவே அவர் நாடு திரும்பியதும் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வோம் என்றார்.

இத்துடன் நீண்டகாலத்திற்கு பின்னர் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தீர்மானங்களின்றி நிறைவடைந்தது.

Share.
Leave A Reply