இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார்.

பிரமதருடனான இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், திலக் மாரப்பன ஆகியோரும் காவல்துறை தலைவர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிணை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக தேசியக் கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.

 151026160738_mano_ganesan_512x288_manoganesan_nocredit
தேசியக் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

இந்தக் கூட்டத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவில் தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போலிஸ் விசாரணைகள் முடிவின்றி நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன என பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Share.
Leave A Reply