பிரபல கடத்தல் கும்பல் தலைவனும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியுமான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டதையடுத்து அவனை தங்களிடம் ஒப்ப்படைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.
1980-களில் மும்பையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், நடிகர், நடிகைகளிடம் பணம் கேட்டு மிரட்டல், கொலை, ஆட்கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் சோட்டா ராஜன்.
அப்போது மும்பையில் கொடி கட்டி பறந்த இவர் தனது சகோதரர் மூலம் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் மீது மும்பை போலீசில் 17 கொலை வழக்குகள் மற்றும் ஏராளமான கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியும் மும்பை நிழல் உலகத் தாதாவுமான தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாகவும், அவரது கும்பலின் துணைத் தலைவராகவும் சோட்டா ராஜன் செயல்பட்டு வந்தார்.
போலீசாரால் தீவிரமாக தேடப்படுவதை அறிந்த அவர் 1988-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு தப்பிச் சென்றார். அதன்பிறகு சோட்டா ராஜன் இந்தியா திரும்பவே இல்லை.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர், 1996-ல் தாவூத் இப்ராகிமிடம் இருந்து பிரிந்து மும்பையில் தனக்கென ஒரு கும்பலை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டார்.
இதனால் 2000-ம் ஆண்டில் தாவூத் இப்ராகிம் கும்பல் பாங்காக் நகரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவரை சுட்டுக் கொல்ல முயற்சித்தது. எனினும் அதில் இருந்து அவர் தப்பிவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்தவாறே மும்பையில் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த அவரை எவ்வளவோ முயன்றும் மும்பை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை கண்டுபிடிக்க சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை இந்தியா நாடியது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்டர்போல் போலீசாரால் சோட்டா ராஜன் தேடப்பட்டு வந்தார். அவரை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க ‘ரெட் கார்னர்’ நோட்டீசும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சோட்டா ராஜன் வருவதாகவும் அவரைக் கண்காணிக்கும்படியும் பாலித் தீவு போலீசாருக்கு ரகசிய தகவலை ஆஸ்திரேலியா அனுப்பியது.
இதைத்தொடர்ந்து பாலித்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை இந்தோனேஷிய போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் பாலித் தீவு விமான நிலையம் வந்திறங்கிய 55 வயது சோட்டா ராஜனை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி பாலித்தீவு போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹெரி வியாண்டோ கூறுகையில், “நேற்று முன்தினம், சோட்டா ராஜன் சிட்னி நகரில் இருந்து பாலித் தீவில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத் தலத்துக்கு வருவதாக கான்பெர்ரா போலீசிடம் இருந்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாலித் தீவின் பிரதான விமான நிலையம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. விமான நிலையம் வந்து இறங்கியவுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
இவர், இந்தியாவில் 15 முதல் 20 கொலைகள் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதான் அவரைப் பற்றி எங்களுக்கு தெரிந்த தகவல் ஆகும். சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது குறித்து இந்திய அரசுக்கும், சர்வதேச போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அவர் இந்த வாரம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். பாலித் தீவு மாகாணத் தலைநகர் டென்பாசரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் சோட்டா ராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் இந்தோனேஷிய அதிகாரிகள் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறோம்.” என்றார்.
இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘சோட்டா ராஜன் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதும், அவரை விசாரணைக்காக மத்திய அரசு எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சோட்டா ராஜன் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.