தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், தமிழ் கட்சியொன்றின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட தான் முன்பிருந்தே எதிர்பார்த்திருந்ததாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக தான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட போதில்லை என தான் ஏற்கனவே மக்களுக்கு கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தான் அதனை விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.

தான் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலப் பகுதியில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்த போதிலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் இன்றும் உயர்வு ஏற்படவில்லை என விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தமிழ் கட்சிகளில் சிறந்ததொரு கட்சியை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை தமக்கு காணப்படுவதாகவும், அதன் நிமிர்த்தமே தான் தமிழர் விடுதலை கூட்டணியை தெரிவு செய்துள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிரகாரம், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டவில்லை என்பதுடன், இதுவரை தாம் இணைந்து செயற்பட ஆரம்பிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதன் பின்னர் தான் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் இணைந்து செயற்படவில்லை என விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையானினால், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் தான் வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும், தான் நாட்டிற்கு வந்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பிள்ளையான், நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் வரை அவர் குற்றவாளி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் இடம்பெறும் காலப் பகுதியின் தான் இந்தியாவில் வசித்து வந்ததாக கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

அத்துடன், ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான செய்தியை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் பல கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

அதன்படி, கிங்ஸிலி இராஜநாயகம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி சில காலத்திலேயே கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், அதன் பிரதியீடாகவே அரியநேத்திரன் பாராளுமன்ற பிரவேசத்தை பெற்றுக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறாயின், அரியநேத்திரனிடமும் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தான் அரசாங்கத்துடன் இணைந்திருந்தமையினாலேயே மக்களின் பிரச்சினைகளை குறைக்க முடிந்ததாகவும், கைதுகளை குறைக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

12 ஆயிரம் போராளிகள் சரணடைந்த போது, தான் ஜனாதிபதியிடம் சென்று அவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியிலுள்ள அகதிகள் முகாமை அகற்றி, அந்த மக்களை வீடுகளுக்கு திரும்பி அனுப்புவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு தானே வழங்கியதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

அதன்பிரகாரம், அரசாங்கத்தை தான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அரசாங்கம் தன்னை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை தான் வழங்கவில்லை எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தத்தின் கொடூரத்திற்குள் வாழ்ந்தமையினால், இனியும் யுத்தம் வேண்டாம் என விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் சந்ததியினருக்கு யுத்தத்தின் வடுக்களை கொண்டுச் செல்ல இடமளிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சிறந்ததொரு ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் (விசேட நேர்காணல்)

Share.
Leave A Reply