தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட விவகாரத்தில், ஒரு தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 217 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், ஆறாவது நாளை எட்டியிருந்த போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியின் பேரில் வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மூலம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைப் பயன்படுத்தி, அரசியல் கைதிகளிடம் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார் ஜனாதிபதி.

அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என்றே கோரியிருந்தனர்.

ஆனால், அவர்களின் அந்தக் கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படவில்லை. வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில், மூன்று வகையானோர் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

முதலாவது, நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு அதனை அனுபவித்து வருபவர்கள்.

இரண்டாவது, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள கைதிகள்.

மூன்றாவது, இன்னமும் வழக்குகள் ஏதும் தொடுக்கப்படாமல், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் வெறும் சந்தேகநபர்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்.

இந்த மூன்று வகையினரையும், ஒரேயடியாக பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய முடியாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிப்பதற்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன, அதனைத் தாண்டுவதற்கும் குறிப்பிட்ட காலஅவகாசம் தேவை. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க முடியாது.

அவர்களின் வழக்குகளை விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களைப் பிணையில் விடுவிக்க வேண்டும்.

எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மட்டும் தான், அரசாங்கத்தினால் உடனடியாக விடுவிக்க முடியும். ஆனால், அவர்களை விடுவிக்கவும் அரசாங்கத்துக்குத் தயக்கம் இருக்கிறது.

காரணம், அவர்களை விடுவித்தால் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிப்பதாக பிரச்சினை எழுப்புவார்கள் என்ற கலக்கமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இவ்வாறு அரசியல் கைதிகள் அனைவரையும், பொதுமன்னிப்பு அளித்து விடுவிப்பதிலோ அல்லது வேறு வழிகளில் விடுவிப்பதிலோ அரசாங்கம் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குவது உண்மையே.

ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருந்தால், இந்தளவு காலப்பகுதிக்குள்ளும் அரசியல் கைதிகளின் கணிசமான பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தீர்வு கண்டிருக்க முடியும்.

அரசாங்கம் இழுத்தடித்து வந்ததால், குறுகிய காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.


வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்தக் காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு வாரங்கள் தான் இருக்கின்றன.

இதற்குள் அரசாங்கம் 217 அரசியல் கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் அதனைச் செய்யப் போவதும் இல்லை.

அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வைத் தருவதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அது எத்தகைய தீர்வு, எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று தமக்குக் கூறப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை எந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற திட்டம், இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துக்கும், அரசியல் கைதிகளுக்கும் இடையில் சமரசப் பேச்சு நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கோ, சுமந்திரனுக்கோ, செல்வம் அடைக்கலநாதனுக்கோ கூடத் தெரியாது.

ஏன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ கூட இதுவரை ஏதாவது திட்டம் உதித்திருக்குமோ தெரியவில்லை.

சிலரை விடுவிக்கலாம். சிலருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்படலாம். வேறு சிலர் புனர்வாழ்வு என்ற பெயரின் இன்னும் சில மாதங்களோ, ஓரிரு வருடங்களோ, திறந்தவெளிச் சிறைக்கு மாற்றப்படலாம். இவற்றைத் தான் அரசாங்கம் செய்யப் போகிறதே, தவிர, பொதுமன்னிப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.

விஜயகலா மகேஸ்வரன்,

யாழ்ப்பாணச் சிறையில் இருந்த அரசியல் கைதியின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எல்லாவற்றையும் அரசாங்கம் நேரடியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுமன்னிப்பு வழக்க முடியாதவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு தாம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து, கணிசமான அரசியல் கைதிகளை, புனர்வாழ்வு என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைக்கு மாற்றப்படுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது என்பதைத் தான் சுட்டி நிற்கிறது.

இந்தக் கட்டத்தில் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, முடிவு எவ்வாறு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அவர்களின் குடும்பத்தினரையும் தாண்டி தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாம் பிடித்து அடைத்து வைத்திருந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்யப் போகிறார்கள், அவர்களை படையினருக்கு எதிரான போர்க்குற்ற சாட்சிகளாக முன்னிறுத்தப் போகிறார்கள் என்றெல்லாம் கூறி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், சிங்கள மக்களை ஏற்கெனவே உசுப்பத் தொடங்கி விட்டனர்.

எனவே தான், இந்த விவகாரம் சிங்கள மக்களின் ஆர்வத்தையும் ஈர்த்திருக்கிறது. அதேவேளை, அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி, அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு காலஅவகாசத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்தக் காலஅவகாசத்தையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

அரசியல் கைதிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்துக்கு அரசாங்கம் பொருத்தமானதொரு தீர்வைத் தரத் தவறினால், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என்று எச்சரித்துள்ளனர் அரசியல் கைதிகள்.

அதுபோலவே, அரசாங்கம் தீர்வைத் தராது போனாலும் தாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்த நேரிடும் என்று கூட்டமைப்பும் கூறியிருக்கிறது.

இந்தக்கட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், தமிழ் அரசியல் சக்திகளின் குரல் ஒருமித்து வெளிப்படுத்தப்படவில்லை என்பது தான் தமிழ் மக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

ஆறு நாட்கள் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண அவைத் தலைவர் தலைமையில் நல்லூரில் ஓர் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சில நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த அடையாள உண்ணாவிரதம், காலை 8 மணிக்குத் தொடங்கி 12 மணிக்கு முடிந்தது. காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்தவர்கள், மதிய உணவுக்கு வீடு சென்றார்கள். இதற்குப் பெயர் தான் அடையாள உண்ணாவிரதம்.

இப்படியான அவசரகாலப் போராட்டங்களினால் உண்ணாவிரதப் போராட்டங்கள் இன்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கமும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போகிறது. இதற்குப் பின்னர் யாழ். முனிப்பர் கோவிலடியில் இன்னொரு உண்ணாவிரதம் காலை தொடக்கம் மாலை வரை நடந்தது. அதுபோல கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு. திருகோணமலை என்று உண்ணாவிரதப் போராட்டங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டம், ஓரளவுக்கு மக்கள் மயப்படுத்தப்படத் தொடங்கிய- அதற்கான புறச்சூழல்கள் உருவாகத் தொடங்கிய போது தான், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இருதரப்பிலும் பேச்சுக்களை நடத்தி போராட்டங்களை இடைநிறுத்தினார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை நிபந்தனையின்றி, விடுவிக்கப்பட வேண்டும் என்பதே, எல்லாத் தமிழ்க் கட்சிகளினதும், ஒருமித்த கருத்தாக உள்ளது. இதற்கு ஆதரவாக கணிசமான சிங்களத் தலைவர்களும் கூட கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், அரசாங்கம் மீது வலுவானதொரு அழுத்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பை தமிழ் அரசியல் தரப்புகள் தவறவிட்டுள்ளன.

எல்லாத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து நின்றிருக்க வேண்டும். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அதனை தமிழர் தரப்பு தவறவிட்டது துரதிர்ஷ்டமே.

வெண்ணெய் திரளும் போது, தாழி உடைக்கப்பட்டது போல, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இடைநிறுத்த வைக்கப்பட்டது. இனிமேலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய தேவையில்லாதளவுக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வருமாக இருந்தால், இரா.சம்பந்தனின் அந்தத் தலையீடு வெற்றிகரமானதாகவே பார்க்கப்படும்.

மாறாக, மீண்டும் போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்தினால், தமிழர் தரப்பின் வலுவான அழுத்தங்களை ஒன்றிணைக்கத் தவறிய குற்றச்சாட்டையும், பழியையும் அவர் சுமக்க நேரிடும். இதில் எது நடக்கப் போகிறது என்பது இன்னும் இரண்டு வாரங்களில் தெரிந்து விடும்.

-சஞ்சயன்-

Share.
Leave A Reply