யுத்தம் முடிவடைந்த பின்னரும் விடுதலை செய்யப்படாது எந்தவித விசாரணைகளலுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் 14 சிறைச்சாலைகளிலும் இருந்த 200க்கு மேற்பட்ட கைதிகள் 6 நாட்களாக போராடிய நிலையில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் சாதகமான முடிவு எட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தற்போது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடாது என தென்பகுதி இனவாதிகள் கூறுகின்றனர். பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் தனது நல்லாட்சி உறுதிமொழியை உறுதிசெய்யும் வகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வார் என்றே பல அரசியல் கைதிகளும், அவர்களது குடும்பங்களும் நம்பியுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதியின் சொல்மேல் நம்பிக்கை வைத்து தனது மகனும் நவம்பர் 7 ஆம் திகதி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வாழும் ஒரு குடும்பமே சுப்பிரமணியம் தங்கமணியின் குடும்பம்.

பிள்ளை அரசியல் கைதியாக இருக்கும் நிலையில் முழு குடும்பமுமே அதன் தண்டனையை அனுபவித்து வருகிறது. இதற்கு பல அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கண்முன்னே சாட்சியங்களாகவுள்ளன.

அவ்வாறான ஒரு குடும்பமே சுப்பிரமணியம் தங்கமணியின் குடும்பம். வவுனியா, நாகர்இலுப்பைக்குளத்தில் வசிக்கின்றனர்.

ஒரு பெண் பிள்ளை, இரு ஆண்பிள்ளைகள் என அழகான குடும்பம் அது. 2006 ஆம் ஆண்டு இவர்களின் சந்தோச வாழ்க்கையில் விதி விளையாடியது. வீட்டு முதல் பிள்ளையாகிய மகன் (வயது 20) வழமை போல் வேலைக்காக சென்றான்.

பெயின்ரிங் மற்றும் சாரதி வேலை செய்து வந்த மகன் செட்டிகுளம் பொலிசாரால் 2006 ஜனவரி கைது செய்யப்பட்டதாக வீட்டுக்கு தகவல் கிடைத்தது. அதன் அந்த குடும்பம் கைது செய்யப்பட்ட மகனைத் தேடி தினமும் அலைந்த போதும் கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னரே அவனை சந்திக்க முடிந்தது.

Thangamani-1

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பெயரில் மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த தந்தை சுகவீனமுற்று இன்று வரை பராமரிக்கப்பட வேண்டியவராகவே உள்ளார்.

தந்தை மற்றும் மூத்த மகனின் உழைப்பை நம்பியிருந்த குடும்பம் இன்று தங்கமணியின் நாளாந்த கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப பணத்திலேயே சீவியத்தைப் போக்குகிறது.

மழைக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓட்டை வீடு. நோய் வாய்ப்பட்ட கணவன். வயது முதிர்ந்த தாய், வயசுக்கு வந்த பெண் பிள்ளை, எந்தப்பொறுப்பும் அறியாச் சிறுவன் என அனைவரையும் பராமரிக்கிறார் தங்கமணி.

50 வயதான தங்கமணி தனது மகன் இருந்தால் தனக்கு ஏன் இந்த நிலை என தினமும் கண்ணீர் விட்டு அழுதவண்ணமே இந்த சுமையை சுமக்கிறார்.

மாதத்தில் இரண்டு தடவையாவது சிறையில் சென்று அழுது தனது சோகத்தை தீர்த்தும் வருகிறார். இது தொடர்பில் தங்கமணியிடம் கேட்ட போது,

யுத்தம் எமது வாழ்க்கையுடன் விளையாடி விட்டது. யுத்த காலத்தில் நாம் பல அச்சுறுத்தல்களை எதிர் கொண்டோம். நான் கண் மூட முன்பு என்றாலும் எனது மகன் வீட்டிற்கு வரவேண்டும்.

அதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டு முழுக் குடும்பமும் போராடிக் கொண்டிருக்கின்றோம். எனது மகனை வெளியில் எடுப்பதற்காக இருந்த நகைகள் எல்லாம் விற்று செவளித்திட்டேன்.

அவனை வெளியில் எடுக்க மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தேன். தற்போது பணப்பெறுமதி கொண்ட பிணையில் விட நீதிமன்றம் சம்மதித்துள்ளது.

ஆனால் பிணைபக்கு பணம் இல்லாமையால் அவன் இப்பவும் சிறையிலேயே இருக்கிறான். நல்லாட்சிக்காக ஜனவரி 8 ஆம் திகதி நம்பிக்கையுடன் வாக்களித்தோம்.

ஆனால் 10 மாதங்கள் கடந்தும் எமது பிள்ளைகள் வீடு வந்து சேரவில்லை. தற்போது நவம்பர் 7 ஆம் திகதி மட்டும் ஜனாதிபதி அவகாசம் கோரியுள்ளதாக அறிகிறோம். நவம்பர் 7 ஆம் திகதி என்றாலும் என்ர மகன் பொது மன்னிப்பின் கீழ் வந்துடுவானா என்ற ஏக்கத்துடனேயே இருக்கின்றேன் என்றார்.

இந்த குடும்பத்தின் ஏக்கத்தையும் துயரத்தையும் துடைக்க ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தை எவ்வாறு கையாளப்போகிறார். பொறுத்திருப்போம் நவம்பர் 7 வரை.​

.

-கே. வாசு

Share.
Leave A Reply