நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை.
குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த அத்தம்பதிக்கு இந்த தகவல் ஆனந்தத்தை அளித்துள்ளது. அதே சமயம், தற்போது 47 வயதாகி விட்டதால் முதுமை காரணமாகவே உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இத்தனை மாதங்கள் கருதி வந்துள்ளார் ஜூடி.
அதனால் தான் கர்ப்பம் என்றதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவர் கர்ப்பம் எனக் கூறிய அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜூடிக்கு மூன்றரைக் கிலோ எடையுடன் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு ஜூடி தம்பதியினர் கரோலின் ரோஸ் எனப் பெயரிட்டுள்ளனர். தன்னுடைய இந்தப் பிரசவம் ஏதோ கனவு போல அற்புதமாக நிகழ்ந்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜூட்.

Share.
Leave A Reply