எவன்கார்ட் விவகாரத்தில் மோசடிகள் இருப்பதன் காரணத்தினாலேயே அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.
குற்றம் இல்லாவிடின் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி, எவன்கார்ட் மோசடிகள் தொடர்பில் நீதி அமைச்சருக்கும் இதே குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் என்ன செய்யப்போகின்றார் எனவும் கேள்வி எழுப்பியது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது எவன்கார்ட் விவகாரம் தொட ர்பில் வினவியபோதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் உண்மைகளை மூடி மறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதற்காகவே கடந்த கால வருமான விபரங்கள் முதற்கொண்டு சகல விடயங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எவன்கார்ட் விவகாரத்தில் இலங்கைக்கு எத்தனை கோடி ரூபாய் வருமானம் வந்தது என்பதல்ல இப்போதிருக்கும் பிரச்சினை.
இந்த ஆயுதக் கப்பல் எவ்வாறு எமது பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டது என்பதே மிகப்பெரிய சிக்கலாகும். அதேபோல் சட்டவிரோதமாக ஆயுத ஊழலை மேற்கொண்டு அதன்மூலம் நாட்டிற்கு பணத்தை கொண்டுவந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்த ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அந்த ஆயுதங்கள் தொடர்பில் அரசாங்கம் தகவல்களை வெளிப்படுத்தவில்லை.
அவ்வாறான நிலையில் அந்த ஆயுதங்களை சர்வதேச தீவிரவாதிகளுக்கு விற்று பணம் பெற்றிருக்க முடியுமல்லவா. அவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன.
ஆகவே இந்த விவகாரத்தில் பலரது தனிப்பட்ட தலையீடுகளை அறிந்துகொள்ள முடிகின்றது. அவ்வாறான ஒரு தலையீடு காரணமாகவே அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்துகொள்ள நேரிட்டிருக் கும்.
தமது தரப்பில் எவ்வித குற்றங்களும் இல்லையென்றால், இப்போது முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய காரணங்களை முன்வைக்க முடியுமாயின் ஏன் அவர் பதவி விலகவேண்டும்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது இவர் தொடர்பில் எவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோ அதேபோல் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மீதும் பலமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே அவர் என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வியும் உள்ளது. யார் பதவி விலகுகின்றனர், யார் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்கின்றனர் என்ற காரணம் அவசியமற்றது.
எவன்கார்ட் விவகாரத்தில் உண்மைகளை கண்டறிந்து அதற்கேற்ற உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை அரசாங்கம் சரியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.