நாட்டிலுள்ள சிறைகளில் 12 சிங்கள அரசியல் கைதிகள் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாட்டிலுள்ள சிறைகளில் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அரசியல் கைதிகளாக 12 சிங்களக் கைதிகள் மாத்திரம் உள்ளனர். மகஸின் சிறையில் யூட் சுரேஷ் , அஜித் , பந்துல, கஜதீர, ரஞ்சித் பெரேரா ஆகியோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ரிரோன் பெர்னாண்டோ , லக்ஷ்மன் குரேயும் வெலிக்கடை பெண்கள் பிரிவில் திருமதி கஜதீர சகலருமாக சிறையிலுள்ளனர்.
கண்டி போகம்பரையில் விக்கிரம சிங்கவும் யாழ்ப்பாணத்தில் இந்திக சஞ்சீவவும் அநுராதபுரம் சிறையில் கொப்பேகடுவவும் வவுனியாவில் சூரிய ஆராச்சிலாகே செல்டனும் அரசியல் கைதிகளாகவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த புதன்கிழமை பிணையில் விடப்பட்ட 4 சிங்கள கைதிகளும் அரசியல் கைதிகள் இல்லை. குற்றவியல் குற்றத்துக்காக நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதை வஸ்து மற்றும் பாதாள செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுவித்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்ததாகக் கூறி மக்களை முட்டாளாக்கக் கூடாதெனவும் அவர் குறிப்பிட்டார்.