சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழையினால், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்கள் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன.
நேற்றுக்காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், யாழ் மாவட்டத்தில் 163 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அச்சுவேலியில் 166.6 மி.மீ மழை பதிவானதாக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்து திருகோணமலையில், 79.8 மி.மீ, மட்டக்களப்பில் 54.7 மி.மீ, மன்னாரில் 24.4 மி.மீ, வவுனியாவில் 45.மி மீ மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பகலிலும், இரவிலும் மிக கடுமையான மழை பெய்ததால், வடக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை வெளியிட்ட தகவலின் படி, 27,844 குடும்பங்களைச் சேர்ந்த 94,885 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நேற்று மாலை நிலவரப்படி, வடக்கு மாகாணத்தில் 22,541 குடும்பங்களைச் சேர்ந்த 75,066 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 597 குடும்பங்களைச் சேர்ந்த 1765 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 18,036 குடும்பங்களைச் சேர்ந்த 59,526 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,336 குடும்பங்களைச் சேர்ந்த 3,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 361 குடும்பங்களைச் சேர்ந்த 976 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3,139 குடும்பங்களைச் சேர்ந்த 11,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 இடைத்தங்கல் முகாம்களில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 765 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் 1,717 குடும்பங்களைச் சேர்ந்த 6,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 270 குடும்பங்களைச் சேர்ந்த 815 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு 24 அடி வரை நீரைத் தேக்கத் திட்டமிட்டிருந்த இரணைமடுக் குளத்தில் நேற்றுக்காலை நீர்மட்டம் 32 அடியைத் தொட்டதால், அனைத்து வான்கதவுகளும், 6 அடி வரை உயர்த்தப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டு குளத்தில் இருந்து வெளியேறி வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாலும், இன்று வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கச்சேரி, நல்லூர் வீதி, மானிப்பாய் , பருத்தித்துறை, போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியேரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.