சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதால் தாவூத்துக்கு நிம்மதி இல்லை. கடந்த பத்து நாட்களில் தாவூத்தின் அண்டர் வேல்ட் பிசினஸ்கள், மும்பை பங்குச்சந்தை நிலவரத்தைப்போல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.
இந்த ஆண்டின் இறுதிக்குள் எப்படியும் தாவூத்தை பிடித்து விட வேண்டும் என்று இந்திய உளவுத்துறை பல்வேறு வேலைகளை கையில் எடுத்து செய்து வருகிறது. அதன் பின்னணிதான் சோட்டா ராஜன் டெல்லி கொண்டு வரப்பட்டதும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும்!
தாவூத்தை பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும் என்று உளவுத்துறை நினைப்பதைப்போலவே சோட்டா ராஜன் கதையையும் முடித்து விடவேண்டும் என்று தாவூத்தின் தரப்பு பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறது.
மும்பை, டெல்லி, பெங்களுரு, கொச்சின், விசாகப்பட்டினம், பீகார் என்று பல்வேறு இடங்களில் தாவூத்தின் ஆட்கள் கழுகுகளாய் வலம் வருகிறார்களாம் இந்திய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் சோட்டா ராஜனை தூக்குவதற்கு.
இதில் இரண்டு அரசியல் பேசப்பட்டு வருகிறது. ஒன்று தாவூத்திற்கு இது தன்மானப்பிரச்சனை, மற்றொன்று தாவூத்தின் மும்பை நிழல் உலகத்தை யார் நிர்வாகம் செய்வது என்பது போன்ற இரண்டு அரசியல் விசயங்கள் இருப்பதால், சோட்டா ராஜனின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல, தாவூத்தின் ஆட்களின் துப்பாக்கிகள் எப்பொழுதும் சோட்டா ராஜனின் நெற்றியினை குறிபார்த்து பார்த்துக்கொண்டே இருக்கிறது.
அதனால்தான் சோட்டா ராஜனுக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அவனது இருப்பிடம் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.
அங்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகளில் கூட ஒரு சிலரை தவிர, வேறு யாரும் சோட்டா ராஜனை நெருங்க முடியாது. இதற்கு இடையில் தாவூத்தின் இந்திய வழித்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.
அதோடு தாவூத்தின் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பது ஐ.எஸ் அமைப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு வளைகுடா நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் என்று பல்வேறு உலக நாடுகளில் தாவூத்தின் கட்டுமான தொழில்கள், ஷாப்பிங் மால்கள், எரிபொருள் நிறுவன முதலீடுகள், மற்றும் ஆயுதம் விற்பது போன்ற முக்கியமான அண்டர்கிரவுண்ட் வேலைகளின் பங்குகளை அந்நாட்டின் அரசுகளோடு பேசி, தாவூத்தை முடக்கும் வேலைகளை இந்திய உளவுத்துறை செய்து வருகிறது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருகிறதோ என்னவோ தாவூத் விசயத்தில் பயங்கரமாக வேலை செய்கிறது.
இதற்கெல்லாம் சோட்டா ராஜன்தான் காரணம் என்று சோட்டா ராஜனை காலி செய்யும் அனைத்து வேலைகளையும் கனக் கச்சிதமாக செய்து வருவதோடு, தனக்கு எதிராக விரிக்கப்பட்ட வலைகளை தன் ‘உலக’ அரசியல் செல்வாக்கால் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தெறிந்து விட்டு யாரும் தனக்கு தடை போட முடியாது என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது தாவூத்தின் ‘டி’ கம்பெனி.
இதற்கு இடையில் சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வந்தபோது அவனை தூக்கும் வேலையை, தாவூத்தின் தளபதியாக வலம் வரும் சோட்டா ஷகீலிடம் கொடுக்கப்பட்டது.
சோட்டா ஷகீல் பத்துக்கும் மேற்பட்ட குழுவிடம் வேலைகளை பிரித்து கொடுத்துவிட்டு காத்துக்கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அந்தக் குழுவின் சையத் நியாமத் என்கிற முக்கிய நபர் இப்பொழுது பெங்களூரில் போலீஸில் சிக்கி, விசாரணை நடந்து வருகிறது.
சையத் நியாமத் சோட்டா ராஜனை குறிவைத்து காத்திருந்த நபர்களுள் முக்கியமான நபர் என்று பேசப்பட்டு வருகிறது.
சோட்டா ஷகீலுக்கும் – சோட்டா ராஜனுக்கும் இடையேயான விரிசல், தாவூத்திடம் இருவரும் வேலை பார்த்த காலத்திலேயே தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் ஷகீலும்- ராஜனும் நல்ல நெருக்கத்தில்தான் இருந்தார்கள். தாவூத்தின் குரூப்பில் ராஜனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனே அதை ராஜனுக்கு தெரியப்படுத்துவது ஷகீல்தான்.
பின்னாளில் அந்த நெருக்கம் சௌத்யா என்பவனால் முறிவானது. சௌத்யாவும் தாவூத்தின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவன்தான். சோட்டா ராஜனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவன். ராஜனை காலி செய்து அந்த இடத்திற்கு சௌத்யா வருவதிற்கு ஷகீலை பயன்படுத்தினான்.
அதனால் சோட்டா ராஜனை பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தாவூத்திடம் போட்டுக் கொடுத்து வந்தான் சௌத்யா. சோட்டா ராஜன் அவனுக்காக ஆட்களை வளர்த்துக்கொண்டு, டி கம்பெனி நிழலில் செழிப்பாக வளர்வதாக புகார் கூறினான். தாவூத் நம்பவே இல்லை. ஆனால் தாவூத்தின் தங்கை கணவர் இப்ராஹிம் பார்க்கர் கொலைக்கு பழி வாங்காமல் காலம் கடத்தியதால் தாவூத், சோட்டா ராஜன் மீது முதல் முறையாக கோபப்பட்டான்.
பார்க்கரை கொலை செய்த அருண்காவ்லியின் ஆட்கள் நான்கு பேரில் ஷைலேஷ் ஹால்தான்கர், பிபின் ஷிரோ ஆகிய இருவரும் மும்பை ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸ் உயர் பாதுகாப்போடு இருந்தனர்.
அவர்களை அங்கு வைத்தே கொலை செய்ய சௌத்யா திட்டம் தீட்டி தாவூத்திடம் அனுமதி கேட்டான். முதல் முறையாக சோட்டா ராஜனுக்கு தெரியாமல் இந்த கொலைத்திட்டம் தீட்டப்பட்டதோடு, செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
சௌத்யாவும், சோட்டா ஷகீலும் இணைந்து இந்த வேலையை செய்ய ஆயத்தம் ஆனார்கள். இந்த வேலையை மட்டும் வெற்றிகரமாக முடித்து விட்டால் சோட்டா ராஜனை தாவூத்திடம் இருந்து எப்படியும் கழட்டி விடுவதோடு, சோட்டா ராஜனின் கதையை முடிக்கவும் பின்னாளில் பிளான் வைத்து இருந்தான் சௌத்யா. ஆனால் இந்த விஷயம் எல்லாம் ஷகீலுக்கு தெரியாது.
அவனை பொறுத்தவரை தாவூத்திற்கு மேலும் நெருக்கமாக வேண்டும், அதோடு தாவூத்தின் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்தவர்களை வெறி தீர கொல்லவேண்டும். அதை செய்தால் கண்டிப்பாக தாவூத்தின் குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் தீவிரமாக களத்தில் இறங்கினான்.
மும்பையின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஜேஜே மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வதுண்டு.
தவிர அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு இருந்ததால் அவர்களை மீறி கொலை செய்வது என்பது சவாலான விஷயம். தவிர பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவித்து, பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்று தாவூத் சொல்லி இருந்ததால், மூன்று நாட்கள் அந்த மருத்துவமனையை வட்டமடித்தனர் சௌத்யாவின் ஆட்கள்.
போலீஸ்காரர்கள் இரவு, பகல் என்று மாறி மாறி காவல் இருந்து வந்தனர். பகல் நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு தாக்கினால், பெரும் சலசலப்பு உண்டாக்கி மருத்துவமனையின் அமைதி கெட்டுவிடும் என்று அதிகாலை நேரத்தை தேர்வு செய்தனர்.
சொன்னபடியே அதிகாலை மூன்று மணிக்கு, பத்து பேர் கொண்டு குழு மருத்துவமனைக்குள் நுழைந்தது. அவர்கள் அனைவரின் கைகளிலும் AK 47 ரக துப்பாக்கிகள். அதிகாலை நேரம் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கத்தில் இருந்தனர்.
உள்ளே நுழைந்த நபர்கள் கட்டிலில் படுத்திருந்த ஹால்தான்கரை சுட்டனர். அவனது உடலை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து எடுத்து, எதிரே இருந்த சுவர்களில் ரத்தமும் சதையும் கலந்த கறித்துண்டுகள் தெறித்து ஒட்டியது.
அவனது உயிர் கொடூரமாக கொல்லப்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் பதுங்கிக்கொண்டு திருப்பி தாக்குதல் நடத்தினர்.
அங்கு நடந்த களேபரத்தில் பிபின் ஷிரோவை ஆளை காணவில்லை. அவனை பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்றி இருந்தனர். இந்த விஷயம் சௌத்யா ஆட்களுக்கு தெரியாது.
அதனால் அவனையும் கொல்லாமல் போகக் கூடாது என்பதால் அங்கு தேடுதல் வேட்டை நடந்தது. அதோடு அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரோடு துப்பாக்கிச் சண்டையும் நடந்தது.
அதில் பக்கத்தில் இருந்த நோயாளி, அவரின் உறவினர், நர்ஸ் என்று ஒரு சிலர் காயமடைந்தனர். அதோடு பாதுகாப்புக்கு இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் உயிரிழந்தனர். ஆனால் சௌத்யா குழுவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடைசி நேரத்தில் இடம் மாறியதால் பிபின் உயிர் பிழைத்தான். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாள்களில் இந்த சம்பவம் தலைப்பு செய்தியாக வந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு பொது மருத்துவமனையில் இவ்வளவு பெரிய துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் உண்டாக்கியது.
இது ஆளும் அரசுக்கு மிகப்பெரிய கெட்டபெயரை உண்டாக்கியது. ஆனால் தாவூத்தின் ஆட்கள் செய்த சம்பவத்தால் மும்பை மாநகரமே அதிர்ந்தது. தாவூத்தின் எதிராளிகளும் இந்த சம்பவத்தால் மிகவும் கலவரமானார்கள்.
இந்த சம்பவத்தால் குஷியான தாவூத், இந்த சம்பவத்தை முன்னின்று நடத்திய சௌத்யா-ஷிகீல் இருவரையும் பாராட்டும் விதமாக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த பார்ட்டியில் முளைத்தது சோட்டா ஷகீலுக்கும் – சோட்டா ராஜனுக்கும் ஆன நேரடி பகை. புகையும் – பகையும் யாரை விட்டது?
அடுத்து என்ன நடந்தது?
– சண்.சரவணக்குமார்