பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் போய் நிப்போம்.
ஆனால் இத்தாலியைச் சார்ந்த கோல்கீப்பரான 16 வயதே நிரம்பிய கியான்லூகி டொன்னருமாவுடைய (Gianluigi Donnarumma) மதிப்பு இப்பொழுது 170 மில்லியன் யூராக்களாம் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1200 கோடி). இவரை இத்தாலி அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவருமான பஃப்னோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகின்றனர் இத்தாலி ரசிகர்கள்.
இத்தாலியின் சீரி-ஏ கால்பந்து தொடரில் விளையாடும் புகழ்பெற்ற அணியான ஏ.சி.மிலன் (AC Milan) அணியின் கோல்கீப்பர் தான் இந்த டொன்னருமா.
வயசு தான் 16,ஆனால் 196 செ.மீ (6அடி 5அங்குலம்) நீளத்தில் பார்ப்பவர்களையெல்லாம் பிரம்மிக்க வைக்கிறார் இவர். இவருடைய தாய் இவரது பிறப்பு சான்றிதழை எப்பொழுதும் கையிலேயே வைத்திருப்பாராம். ஏனெனில் யாரும் இவருக்கு 16 வயதென்று நம்ப மாட்டார்களாம்! ஏனென்றால் இவரது வளர்ச்சி அப்படி.
இவரது அண்ணன் ஆன்டனியோவும் கோல்கீப்பர் தான்.அவர் ஜெனோவா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை சீரி-ஏவில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள டொன்னருமா, இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளார். உயரம்தான் கோல்கீப்பர்களின் மிகப்பெரிய பலம் என்பதால்,அது இவருக்கு மிகவும் கை கொடுத்துள்ளது.
வளைத்துப் போட்ட ஏ.சி.மிலன்
கால்பந்தைப் பொருத்தவரையில் அணிகள் டீல் செய்வது எல்லாம் மில்லியன் டாலர்களில்தான். ஆனால் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் மட்டுமின்றி இளம் திறமைகளையும் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துகொள்வர்.
அப்படி ஒப்பந்தம் செய்யப்படும் இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு தர முடியாததால் பண பலம் இல்லாத இரண்டாம்,மூன்றாம் டிவிஷன் கிளப்புகளுக்கு லோனில் சிறிது காலம் விட்டுவிடுவார்கள்.
அங்கு அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அணிக்கு திரும்ப அழைத்துக் கொள்வார்கள். திருப்தியாக இல்லாத பட்சத்தில் விற்றும் விடுவார்கள்.
அப்படி சிறிது காலம் முன் பல அணிகளும் டொன்னருமாவை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அவர்களுல் இங்கிலாந்தின் மிகப்பெரிய அணிகளான மான்செஸ்டர் யுனைடடும் செல்சியும் கூட அடங்கும்.
இத்தாலியின் பெரிய அணிகளான ஜுவன்டஸ், ரோமா போன்ற அணிகள் இவரை அணியில் இணைத்துக்கொள்ள இவரது திறமையை பரிசோதித்தன.
அடிப்படையில் டொன்னருமா ஏ.சி.மிலன் அணியின் தீவிர ரசிகராம். இதைப் பயன்படுத்திய ஏ.சி.மிலன் அணி இவரது திறமையை அறிந்துகொண்டு இவரை ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஒரு காலத்தில் ரொனால்டினோ, ககா, பெக்கம் என நட்சத்திர வீரர்களைக் கொண்டு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய மிலன் அணி பின்னாட்களில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
மிலன் அணி இவரை ஒப்பந்தம் செய்தவுடன் லோனில் ஒரு சிறிய கிளப்பிற்கு அனுப்பிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிலன் அணியின் பயிற்சியாளர் மிஹாஜிலோவிக், அப்படி செய்யாமல் இவரை சீனியர் அணியில் இணைத்துக் கொண்டார்.
ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில் மாற்று கோல்கீப்பரான இறங்கிய டொன்னருமா, மிலன் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.
அணியின் ஆஸ்தான கீப்பரான டீயாகோ லோபஸ் தொடர்ந்து சொதப்பியதால் சீரி-ஏ தொடரில் நிரந்தர கோல்கீப்பரானார். இதன் மூலம் இத்தாலி கால்பந்து வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமானகோல்கீப்பர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவரது ஆட்டத்தை பில்லியன் டாலர்களை வைத்திருக்கும் ஒவ்வொரு கால்பந்து கிளப்பும் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
ஆண்டில் இரண்டு முறை (ஜூலை மற்றும் ஜனவரி) கால்பந்து அணிகள் புதிய வீரர்களை வாங்கவும், விற்கவும் அனுமதிக்கப் படுவார்கள். அந்தக் காலகட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரரின் மார்க்கெட் ஜிவ்வென உயரும். பலத்த போட்டிகளின் இடையே பல மில்லியன் யூரோக்கள் கைமாற வீரர்களின் ட்ரான்ஸ்பர் நடந்தேறும்.
இந்நிலையில் ஜனவரி மாதம் நெறுங்குவதால் இப்பொழுதே டொன்னருமாவை வாங்க பல அணிகள் போட்டி போடுகின்றன. முன்பு வாய்ப்பை தவறவிட்டமான்செஸ்டர் யுனைடட், செல்சி அணிகளும் இம்முறை டொன்னருமாவை வாங்க மும்முரமாய் உள்ளன.
இந்நிலையில் தான் உலகே வாயை பிளக்கும் வகையில், அறிக்கையை வெளியிட்டுள்ளார் டொன்னருமாவின் ஏஜென்டான மினா ரியோலா. “டொன்னருமாவை எந்த அணி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் அத்ற்காக அவர்கள் 170 மில்லியன் யூரோக்கள் தர வேண்டியிருக்கும்” என்று மிகப்பெரிய குண்டை வீசியுள்ளார்.
பொதுவாக கால்பந்து வீரர்கள் 34 வயதுக்கு மேல் அதிகம் விளையாட மாட்டர்கள்.அப்படி விளையாடினாலும் அவர்களால் அதே திறனோடு விளையாட முடியாது.
ஆனால் கோல்கீப்பர்களை பொருத்தமட்டில் 40வயது வரை திறம்பட செயலாற்றமுடியும்.எனவே டொன்னருமாவிற்கு இன்னும் சுமார் 25 ஆண்டுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் இந்தத் தொகை சரிதான் என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள். “மற்ற சிறுவர்கள்
கம்ப்யூட்டரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க டொன்னருமா அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.நான் டொன்னருமாவை இத்தாலியின் ஓவியர் மொடிகிலியானியைப் போல் பார்க்கிறேன்.
அவரைப் போல் இவரும் ஒரு அசாத்திய திறமைசாலி. உலக சாதனைத் தொகையை செலுத்தும் அணிக்கு அவர் விளையாடுவார்’ என்கிறார் ரியாலோ.
சரி இதற்கெல்லாம் டொன்னருமா என்னதான் சொல்கிறார்? “என்னால் இதை நம்பவே முடியவில்லை.தினமும் என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டே இருக்குறேன். களத்திற்குள் நுழையும் போதெல்லாம் என் சிறு வயது கனவு நனவான மகிழ்ச்சி. அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என் திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தாலி தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும். எனது ரோல் மாடலான பஃபனை போன்று இத்தாலி அணிக்காக பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்கிறார்.
அடுத்த பஃப்பன் ஆக டொன்னருமாக்கு வாழ்த்துக்கள் !
-மு.பிரதீப் கிருஷ்ணா