சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதற்காக அவர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். நேப்பியர் பாலம் அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் சென்ற அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோட்டூர்புரம், அடையார், வேளச்சேரி, பெரும்பாக்கம், ஊரம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், விமானநிலையம், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், திருவொற்றியூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

jaya-a-1

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் சடையான்குப்பம், மணலி புதுநகர், ரெட்டை ஏரி, புழல், கொசஸ்தலை ஆறு, பூண்டி ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏர் ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப்பணிகள் குறித்தும் ஆலோசித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply