அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர்.
நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில் பரணில் படுக்க வைக்கப்பட்ட மூதாட்டியும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளது.
அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி, ஐ.டி.பி.ஐ. காலனி, பரங்கிமலை, மணப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐ.டி.பி.ஐ. குவாட்டர்சில் வெள்ளம் புகுந்ததால் வீட்டுக்குள் சிக்கி 3 பேர் பலியாகினர். சுசீலா, 60 விஜயா 38, வெங்கடேசன் 33 ஆகிய மூவரும், செவ்வாய்கிழமையன்று பலத்த மழை பெய்த போது தங்களின் வீட்டுக்குள் இருந்தனர்.
புதன்கிழமையன்று அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் தங்களை காப்பாற்ற உதவி கேட்க முயற்சித்தனர். அப்போது செல்போன் சிக்னல் கட் ஆகிவிட்டது.
இதனால் மீட்பு பணியில் ஈடுபடுவோரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து வீட்டுக்குள் புகுந்த 12 அடி தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
அதேபோன்று டிபன்ஸ் காலனியில் வெங்கடேசன் 72, கீதா 60 என்ற வயதான தம்பதியும் வெள்ளம் புகுந்ததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மின்கசிவு பலி மணப்பாக்கம் காவியா கார்டனில் பன்னீர்செல்வம், 46 என்பவர் மின்சாரம் இல்லாததால் இன்வெட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
தி.நகரில் புகுந்த வெள்ளம் தி.நகர் தெற்கு போக் சாலையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த குடியிருப்புக்குள் கடந்த 2ம் திகதி வெள்ளம் புகுந்ததால், மக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலானோர் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தஞ்சமடைந்தனர். வீட்டிற்குள் வெள்ளம் அங்குள்ள 7வது பிளாக், 9ம் நம்பர் வீட்டில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது.
வீட்டை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் வராது என்று நினைத்து, அங்கு வசித்து வந்த கனா, 80 என்ற மூதாட்டியை அவரது உறவினர்கள் வீட்டின் பரணில் தூக்கி படுக்க வைத்தனர்.
ஆனால் நேரம், ஆக, ஆக நீர்வரத்து அதிகரித்ததால் பரணில் தண்ணீர் ஏறியது. இதையடுத்து, மூதாட்டி காப்பாற்றும்படி கதறினார். அவரது சத்தம், கூக்குரல் தப்பி ஓடும் மக்களுக்கு கேட்கவில்லை.
இதனால் யாராலும் பரணில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மூதாட்டி பலி ஒருகட்டத்தில் தண்ணீர் அதிகரிக்கவே அந்த மூதாட்டி பரணிலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
அவர் இறந்து 2 நாட்களாகியும் சடலத்தை மீட்க முடியவில்லை. நேற்று துர்நாற்றம் அடித்த பிறகுதான், மூதாட்டி இறந்தது தெரிந்தது. இதனால் மாடி வீடுகளில் இருந்தவர்கள் பாட்டியின் உடலை மீட்குமாறு தீயணைப்பு, பொலிஸ், மாநகராட்சி உள்ளிட்ட எல்லா மீட்புகுழுவினருக்கும் போன் செய்தனர்.
ஆனால், யாரும் வரவில்லை. துர்நாற்றம் வீசியது பின்னர், எம்எல்ஏ, கவுன்சிலருக்கும் போன் செய்தனர். ஆனாலும் யாரும் வரவில்லை. மக்கள் எப்படியோ போகட்டும் என்ற அலட்சியத்தில் அவர்கள் இருந்துவிட்டனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலரே மூதாட்டியின் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளத்துக்கு முன்னும் பின்னும் எச்சரிக்கை செய்யாமலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபடாமலும் இருக்கும் இந்த தமிழக அரசின் அலட்சியத்தால் செயலற்ற தன்மையால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளனவோ, வெள்ளம் வடிந்த பின்னரே வெளியே தெரியவரும்.