2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தrajapaksha ltteில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது தொடர்பாக ஒரு விசாரணையை ஆரம்பிப்பது என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு நாட்டின் அனைத்துப் பகுதியினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக கூறுவதின்படி, இந்த விசாரணை முடிவடைந்த பின்னர் தங்களை தேசப்பற்றாளர்கள் என்று பறைசாற்றும் ராஜபக்ஸக்கள் எவ்வாறு பில்லியன் கணக்கான வரியிறுப்பாளர்களின் பணத்தை எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வழங்கி அவர்களைப் பலப்படுத்தினார்கள் என்று கூறப்படுவதை முழநாடுமே அறியவேண்டி நேரும்.
சமீபத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஐதேக வின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு குழுவினர் ஆகியோர், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகிய ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைவதற்கு வழிவகுத்த இந்த பணப்பரிமாற்றம் சம்பந்தாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் காரணமாக, எவ்வாறு ராஜபக்ஸ ஆட்சியினர் எல்.ரீ.ரீ.ஈ க்கு பணம் வழங்கினார்கள் என்கிற விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்க உள்ளது.
இந்த இரகசிய பணப்பரிமாற்றம் தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு 2005 ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார முகாமையாளராக பணியாற்றிய காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிபதி சூரியாராச்சி.
இந்த பல கோடி ரூபா பெறுமதியான பணப்பரிமாற்றம் பற்றிக் கூறப்படுவதை அவர் ஜூலை 26, 2007ல் பாராளுமன்றத்தில் விபரமாக வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் அவர்களும்கூட தான் எவ்வாறு தன்னுடைய வியாபாரப் பங்காளர்களில் ஒருவரான எமில் காந்தன் என்பவரை எவ்வாறு 2005 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதற்காக அழைத்து வந்தார் என்பதை பகிரங்கமாக வெளிப் படுத்தினார்.
அலஸ் இதை வெளிப்படுத்தியது அவரது வீடு குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய பின்னரே. எனினும் ஸ்ரீ.ல.சு.க வில் இருந்து பிரிந்துபோன சூரியாராச்சி, ராஜபக்ஸ – எல்.ரீ.ரீ.ஈ ஒப்பந்தம் பற்றி வெளிப்படுத்திய சிறிது காலத்திற்குள் பெப்ரவரி 9, 2008ல் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரும் வழியில் அசாதரணமான ஒரு விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.
சூரியாராச்சியின் கூற்றின்படி, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெற்றதின் பின்னர், அவரது போட்டியாளரான ஐதேக வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு வடக்கில் நல்ல ஆதரவு இருப்பதினால், வட மாகாணத்தில் தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈயின் ஆதரவைக் கோரும்படி அவரது விசுவாசிகள் சிலரிடத்தில் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.
அதனால் சூரியாராச்சி மற்றும் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஸ ஆகியோரும் மற்றும் முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க என்பவர்களுடன் ஒன்றிணைந்து ரிரான் அலசுக்கு மிகவும் நெருக்கமானவரான எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி பிரமுகரான எமில் காந்தனை அலசின் றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் வைத்து ராஜபக்ஸவை 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈ எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது பற்றி ஆராய்வதற்காக சந்தித்ததாக கூறப்பட்டது.
இதன் விளைவாக ஐதேக வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கா மகிந்த ராஜபக்ஸவினால் மிகச் சிறிய பெரும்பான்மையாகிய 186,000 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.
சூரியாராச்சியினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி, ராஜபக்ஸவின் பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தமிழர்களை வாக்களிப்பில் இருந்து தடுப்பதற்கு எமில் காந்தன் சம்மதம் தெரிவித்த அதேவேளை அதற்குப் பிரதியுபகாரமாக எமில் காந்தன் ஏதாவது உதவிகளை கோரும்படி பசில் ராஜபக்ஸ விரும்பியதாகச் சொல்லப்படுகிறது,
அதற்கு எமில் காந்தன் தனது அமைப்புக்கு படகுகளை வாங்குவதற்கு 180 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு பசில் ராஜபக்ஸ உடனடியாக பணம் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி 180 மில்லியன் ரூபாவின் முதல் தவணைப் பணம் பல சூட்கேஸ்களில் நிரப்பப்பட்டு தேர்தலுக்கு முன்பாக ஒப்படைத்து ராஜபக்ஸவின் வெற்றிக்குப் பின்னர் முழு ஒப்பந்தத்தையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
மிகுதிப்பணம் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின்(ராடா) வடக்கிலுள்ள இரண்டு கட்டுமான நிறுவனங்கள் மூலமாக எல்.ரீ.ரீ.ஈக்கு கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, அந்த இரண்டு நிறுவனங்களும் எல்.ரீ.ரீ.ஈயின் விசுவாசிகளுக்குச் சொந்தமானது.
இதேவேளை கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்தை சேர்ந்த, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத முன்னாள் கணக்காய்வு அலுவலர் ஒருவர், 2007ல் ராடா நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த தணிக்கை குழுவில் அவரும் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார், சுனாமி மற்றும் யுத்தம் காரணமாக தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு 1,200 வீடுகளைக் கட்டுவதற்காக மேற்குறித்த இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கும் ராடா நிறுவனம் நிதியை விடுவித்ததில் பல நிதி முரண்பாடுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்ததாக அந்த கணக்காய்வு அலுவலர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தது, முன்னாள் கணக்காய்வு நாயகமாக பதில் கடமையாற்றிவர் குற்றவியல் புலனாய்வுத் துறையினரிடம் (சி.ஐ.டி) இந்த வருடம் ஜூலையில் கணக்காய்வு நாயகத் திணைக்களம் ராடா நிறுவனம் சம்பந்தமாக எந்த தணிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அறிவித்தது எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது தெரியுமா என்று.
“இந்த வழக்கு வந்தபோது,2005 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் இடம்பெற்ற ஊழல்களைக் கண்டறிவதற்காக சி.ஐ.டியினர் கணக்காய்வு நாயகத் திணைக்களத்திடம் அரசாங்க தணிக்கை அறிக்கைகளை தங்களிடம் சமர்ப்பிக்கும்படி வேண்டிக்கொண்டனர்.
எங்களுக்கு முழுதான ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் பதில் கடமையாற்றிய முன்னாள் கணக்காய்வு நாயகம் ராஜபக்ஸவை பாதுகாப்பதற்காக தமது திணைக்களம் எதுவித கணக்காய்வையும் ராடா நிறுவனத்தில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்” என அந்த அலுவலர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தது, அது உண்மையில்லை மற்றும் ஒரு முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டால் ராடா நிறுவனத்தின் தணிக்கை கோப்புகள் அனைத்தையும் சி.ஐ.டியினரால் பெற்றுக்கொள்ள முடியும், அதில் கணக்காய்வு கேள்விகள், அந்த கேள்விகளுக்கு அனுப்பப்பட்ட பதில்கள் மற்றும் இறுதி கணக்காய்வு தணிக்கை அறிக்கைகளையும் கண்டுபிடிக்கலாம்.
“அரசாங்கத்தினால் ராடா நிறுவனத்தில் கணக்காய்வு தணிக்கைகள் நடத்தப்படவில்லை என்று ஒரு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் விளைவாக பல கேள்விகள் எழலாம். ஒன்றில் பதில் கடமையாற்றிய முன்னாள் கணக்காய்வு நாயகம் அந்த கோப்புகளை அழித்திருக்கலாம், அது சட்ட விரோதம் அல்லது அவைகளை எங்காவது மறைத்து வைத்திருக்கலாம்” என்றும் தகவல் வழங்கிய அந்த வட்டாரம் தெரிவித்தது.
அவர் தெரிவிப்பதின்படி, அந்த இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கும் கொடுப்பனவு வழங்கியதற்கான விபரங்கள் இருந்தபோதிலும், எந்த நோக்கத்திற்காக அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது என்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.
“பெரும்பாலான கொடுப்பனவுகளுக்கான விபரங்களைப் பெறுவதற்காக நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், ராடா முகாமைத்துவம் எங்களுடன் ஒத்துழைக்காததால் வீணாயின.
ஒரு இறுதி முயற்சியாக அந் திட்டத்துக்கு நாங்கள் நேரடியாக விஜயம் செய்து எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டுமானச் செலவாக எவ்வளவு பணம் செலவழிக்கப் பட்டுள்ளது என்கிற ஒரு மதிப்பீடடு யோசனையை பெற விரும்பினோம்.
எனவே பௌதீக முன்னேற்றங்களை சரிபார்ப்பதற்காக நாங்கள் வடக்கிற்கு விஜயம் செய்வதற்கான வேண்டுகோளை முன்வைத்தபோது, பாதுகாப்பு அமைச்சு எவரையும் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்காது எனக்கூறி எங்களைத் நிறுத்தியதுடன் எங்கள் கடமையை செய்யவிடாது நாங்கள் தடுக்கவும் பட்டோம்” என தகவலறிந்த அந்த வட்டாரம் தெரிவித்தது.
அவர் மேற்கொண்டு தெரிவிக்கையில், அரசாங்க கணக்காய்வு அலுவலர்கள் வடக்கிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டால், ஒரு ஒற்றை வீடு கூடக் கட்டப் படவில்லை, இருந்தபோதும் வரியிறுப்பாளர்களின் பணம் முழுவதும் இனந்தெரியாத ஒரு பகுதியினருக்கு கடத்தப்பட்டுள்ளது என்கிற விபரம் வெளியாகிவிடும் என்பதை ராடா அறிந்திருந்தது.
தனது பெயரை வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையில் ராடா நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ராடா நிறுவனம் 2004 டிசம்பர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆழிப் பேரலையினால் தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டது.
“வடக்கில் வீடுகளைக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்டம் – ஜயலங்கா வீட்டுத்திட்டம் என அழைக்கப்பட்டது மற்றும் இரண்டு நிறுவனங்களான வவுனியாவில் உள்ள ‘பி அன்ட் கே ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம்’ மற்றும் வவுனியாவை சேர்ந்த ‘எவரஸ்ட் சிவில் பொறியல் சேவை’ என்பனவற்றுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எல்.ரீ.ரீ.ஈ க்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டபோது அவை கட்டுமான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுனத்தில் (ஐ.சி.ரி.ஏ.டி) பதிவுகூடச் செய்யப்பட்டிருக்கவில்லை,
100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது, அவற்றை பெறும் நிறுவனங்கள் ஐ.சி.ரி.ஏ.டி யில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒரு நிபந்தனை, இதைக்கண்டு ராடா உத்தியோகத்தர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள் எனத் தெரிவித்தார்.
“இந்த திட்டத்துக்கு அமைச்சரவையின் கொள்முதல் குழுவின் அனுமதியோ அல்லது ஐ.சி.ரி.ஏ.டி யின் பதிவோ இருக்கவில்லை, 2005ல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்த சில வாரங்களின் பின் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த ஒப்பந்தம் ஏன் இந்த போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்பதற்காக எங்களுக்கு சொல்லப்பட்ட காரணம் அவர்கள் வழங்கிய ஒப்பந்தப் புள்ளிதான் மிகவும் மலிவானது என்று. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு வீட்டுக்கு ஒரே விலையை குறிப்பிட்டிருப்பதாக பேசிக்கொண்டது எனக்கு ஏதோவகையில் நினைவில் உள்ளது.
பி அன்ட் கே ஹோல்டிங்ஸ் மற்றும் எவரஸ்ட் சிவில் பொறியியல் சேவை ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 400 வீடுகளை கட்டுவதற்கான பணி ஒப்படைக்கப்பட்ட அதேவேளை வேறு 400 வீடுகள் வட மாகாணத்தில் இனந்தெரியாத ஓரிடத்தில் கட்டப்பட இருந்தன” என அவர் தெரிவித்தார்.
2005ல் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த சதிமுயற்சியின் விளைவாக 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா தோற்கடிக்கப் பட்டது பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் கருத்தை அறிய ‘த சண்டே லீடர்’ மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
நன்றி-
-தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்-