புதுடில்லியில் விளக்கம்

இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார்.

1985 இல் எழுதப்பட்ட விமர்சனம் அது.

அந்த விமர்சனத்தின் மறுபகுதியையும் கவனித்துவிட்டு நாம் தொடர்ந்து செல்லாம்.

அதற்குமுன் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 1985 இல் போர் நிறுத்தம் முடிவடைந்தபோது இலங்கை அரசுதான் அந்த முடிவுக்குக் காரணம் என்பதை வலியுறுத்துவதில் தமிழ் இயக்கங்கள் வெற்றி பெற்றன.

இயக்கங்கள் மீது பழியைப் போட அரசு செய்த பிரசாரம் பயனளிக்கவில்லை. இயக்கங்களின் அரசியல் சாணக்கியத்துக்கு கிடைத்த வெற்றியே அது என்று கொள்ளலாம்.

puliklaஇனி விமர்சனத்தைக் கவனிக்கலாம். இந்தியாவின் தவறுகளை பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார் ஜீ.கே. ரெட்டி:

“புதுடில்லியில்  தீவிரவாத இயக்கங்கள் நடாத்திய நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் இயக்கங்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதன் எதிர்விளைவாகத் தான் இலங்கை இராணுவம் பதிலடியில் இறங்குகின்றது என்னும் தப்பெண்ணத்தை நீக்கும் வகையில் தலைவர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும் இராணுவத்தினர் தமிழ் மக்களின் உடமைகளை எரித்து அவர்களை வீடுகளை எரித்து அவர்களை வீடுகளை விட்டு ஓடவைப்பதில் முனைந்து விடுகின்றனர் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டது.

தமிழர்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் கொண்டுவந்து இலங்கை அரசாங்கம் குடியேற்றியது. இதற்கு முன்னர் இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும் தீவிரவாதத் தலைவர்களால் புதுடில்லிக்கு எடுத்து விளக்கப்பட்டது.

உதாரணமாக கேந்திர முக்கித்துவம் வாய்ந்த திருகோணமலையில் 1948 ஆண்டு 7,606 ஆக இருந்த சிங்கள மக்களின் தொகை, 1981 இல் 86,341 ஆக உயர்ந்துள்ளது.

1921 இல் திருகோணமலையில் 2.8 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை 1971 இல் 28.8 வீதமாகி 1981 இல் 33.8 வீதமாக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் அங்குள்ள தமிழர்களின் தொகை 54 வீதத்திலிருந்து 36 சதவீதமாக இறங்கியுள்ளது. 1921 இல் 37 வீதமாக இருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களின் தொகை 1981 இல் 29 சதவீதமாக இறங்கியது. இன விகிதாசார சமத்துவத்தன்மையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தவறு

மாறி மாறிவந்த இலங்கை அரசுகள் மேற்கொண்ட இந்த குடியேற்ற விவகாரத்திற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் போதிய கவனம் கொடுக்கவில்லை.

வடக்கையும், கிழக்கையும் இணைப்பது என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதோ அல்லது எல்லைகளை மீள வரைவதன் மூலம் தமிழ்  பிரதேசங்களை வரையறுப்பதோ பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பது இலங்கையின் வாதம்.

இந்த வாதத்தோடு ஒத்துப்போக இந்தியா தயாராக இருப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணிக் குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ள இலங்கை அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை கவனத்தில் எடுக்கத் தவறியமையாகும்.

உள்நாட்டில் (இந்தியாவில்) பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சிக்கலான வெளிநாட்டுப் பிரச்சினையைக் கையாள்வதில் நேர்மையான தரகரின் பங்குக்கும், அப்பாவி போன்று நடிக்கும் தீக்கோழிக்கும் இடையில் ஒரு சரியான வேறுபாடு வரையறுக்கப்படவேண்டும்.

தமிழ் தீவிரவாதிகள் மேலும் கோரிக்கைகளை தமது நிலைப்பாட்டின்பால் வற்புறுத்துவார்கள்.

ஆனால் மிதவாதிகள் தங்கள் நாட்டுப் பிரச்சினையை தீர்த்துவைக்க இந்தியாவே முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று முற்றிலும் விட்டுவிடுவார்கள்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தியா பணியாற்றி வருவதால் இப்பிரச்சினையில் விரைவான தீர்வொன்று காணப்பட வேண்டும்.

teloooராஜீவ் எதிர்ப்பு

அயல் நாடுகளுடன் உன்னத உறவுகளைளப் பேணுவது என்ற கொள்ளையை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பின்பற்றி வருகிறார்.

தமிழர்களின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கான தனது முற்று முழுதான எதிர்ப்பை எந்தவித இரகசியமுமின்றித் தெரிவித்துவிட்டார்.

சுதந்திர ஈழம் என்ற சிந்தனைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ராஜீவ், இலங்கையின் ஐக்கிய அமைப்பு வரையறைக்கு அப்பால் அமையக்கூடிய சமஷ்டி அமைப்பைக்கூட நிராகரித்துவிட்டார்.

திரு.காந்தியின் கருத்துப்படி இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளைப் பூரணப்படுத்துவதற்கு இந்தியாவின் மாநிலங்களில் உள்ள சுயாட்சி அமைப்பு போதுமானது.

இந்தியாவின் பெருந்தன்மையான பலவந்தம், சிநேகித பூர்வமான வழிநடத்தல் என்பவற்றின் மூலமாக தமிழ் தீவிரவாதப் பிரிவினரும், மிதவாதத் தலைவர்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் நிச்சயமற்ற தன்மை நீக்கப்படுவதற்கு திம்புப் பேச்சு மேடைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக இரு பிரிவினருக்கும் இடையிவான அணுகுமுறை வேறுபாடு தொடர்ந்தது.

இலங்கை ஆயுதப்படைகளின் அட்டூழியங்கள் மீது கவனத்தை திசை திருப்பியது மூலம் திம்புப் பேச்சுவார்த்தையின் முறிவானது தமிழ் முகாமுக்குள் இருந்த பாரிய கருத்து வேறுபாடுகள் வெளியில் தெரியாமல் செய்ய உதவிவிட்டது.

போர் நிறுத்தம்

தற்போது செய்யக்கூடியது யாதெனில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் தமக்கிடையில் நம்பிக்கையை வளர்க்க முனையும்வரை பேச்சுவார்த்தைகளை தொடர வைப்பதே.

யுத்த நிறுத்தம் என்பது வெறுமனே விரோத செயற்பாடுகளை நிறுத்துவது மட்டுமல்ல. மீண்டும் கூடிய சாதகமான நிலையில் இருந்து தாக்குதலைத் தொடுப்பதற்கு வசதியாக ஒவ்வொரு தரப்பும் தமது சக்தியையும் வளத்தையும் பெருக்காதிருப்பதுமாகும்.”

இதுதான் ஜீ.கே. ரெட்டி எழுதிய விமர்சனத்தின் முக்கிய பகுதிகள்ஃ

நீளமாக இருந்த போதும் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையின் மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தை தற்போதைய நிலையில் பலர் மறந்திருப்பர், வேறு பலர் தெரிந்திராது இருப்பர்.

இந்த அரசியல் தொடரைப் படித்துவரும் பல்லாயிரம் வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம் அதுவாகும் என்பதால் நீளம் அதிகமானாலும் அந்த விமர்சனத்தை தரவேண்டியிருந்தது. எனினும் சில பகுதிகளை நீளம் கருதி சுருக்கியே தந்தேன்.

பிரபா பேட்டி

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘ஜென்டில்மென்’ பத்திரிகை நிருபர் ஜஸ்விந்தர்சிங், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

திம்பு பேச்சுவார்த்தை முறிவு, போர் நிறுத்த முறிவு பற்றிய கேள்விகளைத் தொடுத்தார்.

கேள்வி:- ஆயுதமேந்துமளவுக்கு உங்களை நிர்பந்தித்த காரணிகள் எவை?

பிரபா:– ஈழத்தமிழ் மக்கள் அடைந்து வரும் அவலநிலை தான் துப்பாக்கி ஏந்த வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது. எமது மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்தேன். எனவேதான் நமது மக்களைப் பாதுகாத்து, எமது நாட்டின் விடுதலையை மீட்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்னும் முடிவுக்கு வந்தேன்.

கேள்வி:- சுதந்திரமாக இயங்கும் பத்திரிகைகள் மூலமாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாகவும் உங்கள் குறைகளை எடுத்து விளக்கி நிவாரணம் கண்டிருக்கலாம் என்று நீங்கள் எண்ணியதில்லையா?

பிரபா:- முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது குறைகளையும், கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் மூலம் எடுத்துக் கூறியாகிவிட்டது.

சிறீலங்காவின் பாராளுமன்றம் என்பது பெரும்பான்மை இனத்தின் கொடுமைகளது மொத்த வடிவமாகவே இருக்கின்றது. பத்திரிகைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் எழுதுபவர்கள் தீவிர இனவாதிகளான சிங்கள பத்திரிகை ஆசிரியர்கள். பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் எமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையில் எதுவிதமான வாய்ப்பும் இல்லை.

கேள்வி:- உங்கள் குடும்பப் பின்னணி என்ன? உங்கள் பெற்றோருடன் இன்னும் தொடர்புண்டா?

பிரபா:- நான் மிகச் சாமானியக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை சிறீலங்கா அரச ஊழியராக இருந்தவர். எனது மூத்த இரு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது.

சிறியவயதிலேயே போராட்டத்தில் இணைந்து தேடப்படுபவன் ஆகிவிட்டேன். 19 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டேன் . அன்றிலிருந்து பெற்றோருக்கும் எனக்குமிருந்த தொடர்பு அறுந்துவிட்டது.

கேள்வி:- தமிழீழ தீவிர வாதத்தின் அடையாளச் சின்னமாக நீங்கள் சித்தரித்துக் காட்டப்படுகின்றீர்கள். உங்கள் இயக்கமே உங்களை ஒரு பெரிய வீரனாக எடுத்துக் காட்டுகிறது. அழுத்தமான கொளகைப் பிடிப்பு உள்ளவர் என்ற முறையில் இந்தத் தனிநபர் வழிபாடு சரியான தென்று கூறுகிறீர்களா?

பிரபா:- இதுமாதிரி என்னை மக்கள் உருவகப்படுத்துவதற்கும், அப்படி ஒரு வீரப்பாத்திரமாக என்னைக் கருதுவதற்கும் நான் என்ன செய்ய முடியும்? எனது மக்களுக்கு நான் கொண்டுள்ள இலட்சியப்பற்று நன்கு தெரியும்.

சரியான பாதையில் அவர்களை வழி நடத்திச் செல்வேன் என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் என் மீது கொண்டுள்ள பாசத்தின் எடுத்துக்காட்டே இம்மாதிரியான புகழ்ச்சி மொழிகள்.

கேள்வி:- இலங்கையின் இன்றைய நிலை பற்றி எவ்வாறு கணிக்கிறீர்கள்?

பிரபா:- இன்றைய நிலை மிகவும் பயங்கரமானது. போர் நிறுத்தம் என்ற திரையின் பின்னால் சிறீலங்கா அரசு ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறைகள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றது.

இன்றைய அரசுக்கு சமாதானப் பேச்சுக்கள் மூலம் நியாயமும், நீதியுமுள்ள தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் அக்கறை கிடையாது.

இராணுவத் தீர்வையே சிறீலங்கா அரசு நம்பியுள்ளது.

பேச்சு பயனற்றது

கேள்வி:- தமிழர் பிரதிநிதிகளுக்கும், சிறீலங்கா அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து உங்கள் கருத்தென்ன?

பிரபா:- சமாதானப் பேச்சுக்கள் என்பது ஒரு பயனற்ற முயற்சி. இது உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு ஜயவர்த்தனா ஆடிவரும் கபட நாடகம்.

ஜயவர்த்தனா தன்னை ஒரு சமாதானப்பிரியர் போலக் காட்டிக்கொண்டாலும், அவருக்கு சமாதானத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் உள்ளுர ஆர்வம் கிடையாது. எமது மக்களின் அபிலாசைகளைஈ டுசெய்யக் கூடிய எந்தவொரு ஆலோசனையையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை.

கேள்வி:- போர்நிறுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஜயவர்த்தனா அரசு தமது இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்துவதாக நீங்கள் குற்றம் சாட்டி இருந்தீர்களே?

பிரபா:- அது உண்மைதான். போர் நிறுத்த உடன்படிக்கை என்ற திரைமறைவில் ஜயவர்த்தனா அரசு மிகவும் திட்டமிட்ட இராணுவக் கட்டமைப்பு முயற்சியிலீடுபட்டது.

தனது இராணுவ பலத்திதைப் பெருக்குவதற்கு சிறீலங்கா அரசு தனது பட்ஜெட்டில் பெருமளவு தொகையை ஒதுக்கியுள்ளது. எல்லாவகையான நவீனரக ஆயுதங்களும் பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முழுச் சிங்கள இனமும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டுக் கூலிப்படைகள் சிறீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கின்றன. இவாவறு இராணுவ மயப்படுத்தும் ஜயவர்த்தனாவின் போக்கு, சமாதானப் பேச்சு மூலம் உடன்படிக்கை காண்பதைவிட, இராணுவத் தீர்வு ஒன்றிலேயே அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்பதை தெளிவாக்குகிறது.

அதுதான் பிரபா வழங்கிய பேட்டி.

தலைவர்களின் படங்களும்  சுவாரிசியமான சில சர்ச்சைகளும்

c3-pirapaharan_in_1984_with_gunதனிநபர் வழிபாடு

பிரபாவின் பேட்டியில் தனிநபர் வழிபாடு பற்றிய விடயமும் வந்திருக்கிறதல்லவா?

இதுபற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் புலிகள் அமைப்புத்தான் தமது தலைவரது புகைப்படத்தை பத்திரிகை மூலமாக வெளிவரச் செய்தது.

இந்திய ஆங்கில சஞ்சிகை ஒன்றில் ‘சண்டே’ இதழ் என்று நினைவு-பிரபாவின் புகைப்படம் முகப்பில் இடம்பெற்றிருந்தது. சப்-மெஷின்கன் துப்பாக்கியுடன் பிரபாகரன்  தோன்றியிருந்தார்.

அதனைப் பார்த்து ஏனைய இயக்கத்தினர் கேலி செய்தனர். “பிரபா ஒரு நடிகராகி விட்டார்போஸ் கொடுத்திருக்கிறார்” என்றெல்லாம் விமர்சித்தனர்.

அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பின்னர் ஏனைய தலைவர்களுக்கும் தங்கள் முகங்களைக் காட்டும் ஆசை வநடதுவிட்டது.

heroes_sri_sabaratnamரெலோ இயக்கம் சிறீசபாரெத்தினத்தின் புகைப்படத்தை வெளியிட்டது.

‘ரை’கட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் சிறீசபாரெத்தினம். புளொட தவைர் உமா மகேஸ்வரனின் படமும் வெளியானது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் மட்டும் படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டது.

யாழ்-பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்கள் படம் வெளியிடப்படுவதை விரும்பவில்லை. “ஒரு தனிநபரை முக்கியப்படுத்துவது சரியல்ல, நாம் ஒரு புரட்சிகர அமைப்பினர்” என்று கூறிக் கொண்டிருந்தனர்.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அரசியல் பிரசார வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்த ரமேஷ் ‘செந்தணல்’ என்னும் பெண்கள் அமைப்புக்கான பத்திரிகையில் பத்மநாபாவின் பேட்டியை வெளியிட்டதோடு, பத்மநாபாவின் புகைப்படத்தையும் பிரசுரித்தார்.

அதுவரை தோழர் ரஞ்சன் என்றே இயக்க உறுப்பினர்களால் அழைக்கப்பட்டு வந்த பத்மநாபா, முதன் முதலில் தனது சொந்தப் பெயரில் அறிமுகமானார்.pulikla

‘செந்தணல்’ சஞ்சிகை தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சஞ்சிகையினை விரித்துப் பார்த்தார்கள் யாழ்-பிராந்தியக் கமிட்டியினர். பொத்துக் கொண்டு வந்தது கோபம்.

‘செந்தணலின்’ ஐயாயிரம் பிரதிகளையும் கொண்டுபோய் ஒரு குழிவெட்டிப் புதைத்து விட்டார்கள்.

தனிநபர் வழிபாடு உருவானால் கூட்டுத் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்பதுதான் யாழ்-பிராந்தியக் கமிட்டியின் வாதம்.

யார் தலைவர் என்பதை மக்கள் அறிய விரும்புவார்கள். செயலாளர் நாயகத்தை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவரால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படாத வகையில் உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பது மறுதரப்பு வாதம்.

அதற்கே ஆதரவு கிடைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் தமது செயலாளர் நாயகத்தின் படத்தை வெளியிட ஆரம்பித்தது.

எனினும் சகல புகைப்படங்களிலும் எளிமையாகவே தோன்றியிருந்தார் பத்மநாபா.

1984ம் ஆண்டு ஜுன் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் முதலாவது காங்கிரஸ் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடைபெற்றது.

செயலாளர் நாயகத்தின் புகைப்படத்தை வெளியிடலாமா, கூடாதா என்பது பற்றியே ஒருநாள் பூராவும் விவாதம் நடந்தது.

விவாதத்தின் முடிவில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

உளவுப்பிரிவு

அந்தக் காங்கிரசில் நீண்டநேர விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மற்றொரு விடயம் உளவுப் பிரிவு சம்பந்தமானது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கு மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்னும் உளவுப் பிரிவு  இருந்தது.

பத்மநாபா, மணி, ரமேஷ், வெற்றி, ஜேம்ஸ் ஆகியோர் அதன் தலைமைக் குழுவில் இருந்தனர்.

இயக்கத்திற்குள்ளும் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இயக்க உறுப்பினர்களை உளவுப்பிரிவு கண்காணிக்கக் கூடாது என்று காங்கிரசில் கலந்து கொண்ட ஒரு சாரார் வலியுறுத்தினார்கள்.

செழியன், கண்ணன், கபூர் ஆகியோர் உளவுப் பிரிவு தொடர்பாக அச்சம் தெரிவித்தனர்.

உளவுப்பிரிவு தலைமைக் குழுவில் இருந்த ரமேஷால் ஒரு இரகசியக் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தலைமைக்கு விரோதமானமானவர்களை தீர்த்துக்கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட முயன்றனர்.

உளவுப்பிரிவு அவசியம். இயக்கத்திற்குள்  கண்காணிப்பும் அவசியம் என்று காங்கிரசில் வாதிட்டவர்களில் ரமேஷ், யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் தளபதி  சுபத்திரன், தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட தளபதி சிவா ஆகியோர் முன்னனியில்  நின்றனர்.

இறுதியில் அவர்களின் கருத்து காங்கிரசால் ஏற்கப்பட்டது.

1985 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.

(தொடர்ந்து வரும்…….)
எழுதுவது அற்புதன்..

 

லெறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 52)

 

Share.
Leave A Reply