குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி கோட்பாட்டுக் கொள்கையை கடைப்பிடிக்கும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்து வருகின்றது.

இவ்முன்மொழிவு மக்கள் அங்கீகரமளித்து வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று சட்டரீதியாக அமுலாக்கப்படும்போது சுவிசில் வாழும் தமிழ்மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

எதிர்வரும் 28 பெப்ரவரி 2016 அன்று மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் சட்டஅங்கீகாரத்துக்கான மக்கள்வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் கீழ்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். அவை-

* ஓர் வெளிநாட்டவர் சிறிய குற்றச்செயலில் ஈடுபட்டாலும் இனவாத ரீதியாக குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம்.

* சுவிஸ் நாட்டின் வதிவிடஉரிமைபெற்ற ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் இச்சட்டமூலத்தினூடாக நேரடியாக பாதிக்கப்படுவதோடு அவரது முழுக்குடும்பமும் தண்டனையை பெறும் ஓர் துர்ப்பாக்கியம் ஏற்படும்.

உதாரணமாக வதிவிட அனுமதியுடன் வாழும் கணவன் குற்றம்சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் சுவிஸ் குடியுரிமையுடன் வாழும் மனைவியும் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நிற்பந்திக்கப்படுவார்.

* நீதிமன்ற அனுமதியின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும் அதிகாரத்தை இச்சட்டம் அமுலாக்கவுள்ளது.

* பெற்றோர்கள் வதிவிட அனுமதியுடனும், பிள்ளைகள் சுவிஸ் குடியுரிமையுடனும் இருப்பின் பெற்றோர்கள் குற்றம்சுமத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டால் ஏதும்அறியாத குழந்தைகளும் சேர்த்து நாடுகடத்தப்படும் மனிதஅவலம் நடைபெறும்.

காரணம் சுவிஸ் சட்டத்தின் சமூகவாழ்வியல் மற்றும் குடும்ப உறவுமுறைக்கான 21 வது சட்டப்பிரிவின் 41வது அறிவுறுத்தலின்படி 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் பெற்றோருடனேயே இருக்கவேண்டும் என்பது நியதி.

இருப்பினும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சட்டம் ஐரோப்பிய மனிதஉரிமை உடன்படிக்கையை கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்புச்சட்டத்தை இப்புதிய வரைபு நிராகரிக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.

அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் சாசனத்தையும் இச்சட்ட அங்கீகாரம் நிரகரித்துள்ளது..

இனத்துவேசத்தின் எண்ணக்கருவில் முளைத்த இச்சட்ட அமுலாக்கங்களை எதிர்த்து வெளிநாட்டவர்களின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை தேசியரீதியாக முன்னெடுக்கவுள்ளது.

இதற்கான தார்மீக ஆதரவை சுவிஸ் தமிழ் சமூகக் கட்டமைப்புக்கள் கவனத்தில் எடுத்து செயற்படுதல் அவசியமாகின்றது

வாழ்விட வதிவுரிமை பெற்ற ஒவ்வொருவருடைய வாக்குகளும் இச்சட்ட அமுலாக்கத்தை எதிர்த்து Nein என்று வாக்களிப்பதன் மூலம் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க முடியும்.

Share.
Leave A Reply