கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பீப் சாங்’ பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த பாடலை சிம்புவும் அனிருத்தும் இணைந்தும் உருவாக்கியிருந்ததாக இணையதளத்தில் செய்தி பரவி வந்த நிலையில், தற்போது, இந்த பாடலுக்கு தனக்கும் சம்பந்தமில்லை என்று அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக டொராண்டோவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கான பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.
இந்நிலையில், ‘பீப் சாங்’ குறித்து என்னுடைய விளக்கத்தை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அந்த பாடல் நான் இசையமைத்தோ, நான் எழுதியோ, நான் பாடியோ உருவாகவில்லை.
எதிர்பாராத விதமாக இந்த சர்ச்சையில் என்னுடைய பெயரையும் இழுத்திருக்கிறார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.
எனக்கு பெண்கள் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. அது என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களில் தெளிவாக தெரியும். இந்த பீப் சாங் குறித்த தேவையற்ற பேச்சுக்களுக்கு இதன்மூலம் வருத்தத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.
நேற்று சிம்புகூட இந்த ‘பீப் சாங்’கை நானும் அனிருத்தும் சேர்ந்துதான் உருவாக்கினோம் என்று தெரிவித்திருந்தார். இன்று, அனிருத், அந்த பாடலுக்கும் தனக்கும் ஒருதுளியும் சம்பந்தமில்லை என்று கூறியிருப்பது இந்த பாடலுக்கான முழு பொறுப்பும் தற்போது சிம்பு தலையில் விழுந்துள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.