யுத்தத்தின் இறுதி நாட்களில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட பொதுமக்கள் பலர் முன்னிலையில் வட்டுவாகலில் வைத்து அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.
எனது கணவர் சுந்தரம் பரமநாதனும் இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவராவார். தற்போதுவரை அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது.
இராணுவத்திடம் நேரடியாகஒப்படைக்கப்பட்ட எனது கணவர் நிச்சயம் உயிருடன்தான் இருக்க வேண் டும்.
அவர் தொடர்பான முழுமையான பொறுப்பையும் இராணுவமே ஏற்று பதிலளிக்கவேண்டும். எனது கணவரை எவ்வாறாவது என்னிடத்தில் ஒப்படையுங்கள் என திருமதி பரமநாதன் கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் கோரிநின்றார்.
வடக்குக்கு விஜயம் செய்துள்ள மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழு மூன்றாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அமர்வுகளை நடத்தியது. இதன்போது சாட்சியமளிக்கையிலேயே அப்பெண்மணி மேற்கண்டவாறு மன்றாட்டமாக கோரினார்.
அவர் தெடர்ந்தும் சாட்சியமளிக்கையில்
முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த எனது கணவர் 1990 ஆம் ஆண்டு அவ்வமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருந்தார்.
அதன் பின்னர் என்னை திருமணம் செய்தார். எமது இல்லறவாழ்கை தொடர்ந்துகொண்டிருந்தபோது 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீளவும் இணைத்துக்கொள்ளும் அறிவிப்பு விடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பிரகாரம் எனது கணவர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்த காலங்களில் இறுதி யுத்தம் ஆரம்பமானது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமடைந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எனது கணவர் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டார்.
இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் கடல்நீரேரியைக் கடந்து பொதுமக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருந்தனர். அதற்கமைவாக நாமும் அவ்வழி ஊடாக வெளியேறுவதற்கு சென்றுகொண்டிருந்தோம்.
இரணைப்பாலைப் பிரதேசத்தை நாம் 17 ஆம் திகதி அடைந்தபோது அங்கு இராணுவத்தினர் இருந்தனர். எம்மை அங்குள்ள உள்ள பாடசாலைக்கு அழைத்துச்சென்றவர்கள் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் பெற்றுத்தந்தனர்.
அதன் பின்னர் எம்மை அழைத்துக்கொண்டு சென்று இருபுறமும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்த வயல்பகுதி ஒன்றுக்குள் வெளிக்குள் அடைத்து வைத்தனர்.
முட்கம்பி வேலிக்குள் நாங்கள் அமர்ந்திருந்தபோதுதான் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பைக் கண்டோம். அவருடன் உரையாடினோம்.
அன்றைய பொழுது நிறைவடைந்துவிட மறுநாள் 18 ஆம் திகதி காலை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம்வகித்த அனைவரும் சரணடையுங்கள்.
நீங்கள் ஒரு நாள் அல்லது ஒரு மாதம் அவ்வமைப்பில் இருந்தாலும் சரணடையவேண்டியது கட்டாயம். உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் ஒலிபெருக்கி ஊடாக அறிவித்தனர்.
இராணுவத்தின் இந்த பகிரங்க அறிவிப்பினை அடுத்து வயல் வெளிக்குள் முட்கம்பிகளுக்கு மத்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பிடம் என்ன செய்வது என கேட்டோம்.
அதன்போது விடுதலைப்புலி போராளிகள் உள்ளிட்ட அனைவருக்குமாக தான் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு வருவதாக கூறி அருட்தந்தை சென்றார்.
இராணுவத்தினரிடம் சில மணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு திரும்பி வந்த அருட்தந்தை விடுதலை புலி போராளிகளுடைய பெயர்கள் அடங்கிய விபரங்களை தருமாறு இராணுவம் கோருகின்றது. வழங்குவோமா என எம்மிடத்தில் கேட்டார்.
அதன்போது அவர்கள் பொதுமன்னிப்பு அளிப்பதாக கூறுவதால் பட்டியலை வழங்குவோம் என நாம் தீர்மானித்துடன் பெயர் விபரங்களை அருட்தந்தை ஊடாக இராணுவத்திற்கு வழங்கினோம்.
அதனையடுத்து பெயர் விபரப் பட்டியலின் பிரகாரம் போராளிகள் அனைவரையும் இராணுவம் அழைத்துச்சென்றது. எனினும் சிறிது நேரத்தில் அவர்களை மீண்டும் அந்த முட்கம்பி பிரதேசத்துக்குள் அனுப்பியது.
திரும்பி வந்தவர்கள் இராணுவம் எங்களுடைய குடும்பங்களை அழைத்துவருமாறு கோருகின்றது. ஆகவே எல்லோரும் வாருங்கள் என்று அவரவர் குடும்பங்களை கூட்டிக்கொண்டு இராணுவத்தினரிடம் சென்றார்கள் .
அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமது சிறு கைக்குழந்தைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அதே போன்று குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாது அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி போராளிகளும் இராணுவத்திடம் சரணடடைந்தார்கள்.
எனக்கு பெண் பிள்ளைகள் இருந்த காரணத்தினால் எனது கணவர் என்னை அழைத்துச்செல்ல விரும்பவில்லை. இதனால் நான் முட்கம்பி பிரதேசத்திற்குள்ளேயே நின்றிருந்தேன்.
எனினும் கணவர் இராணுவத்திடம் சரணடைவதாக கூறினார். நான் விசாரணை முடிந்து வந்துவிடுகிறேன் நீங்கள் உங்கள் அம்மா விட்டிற்கு சென்று தங்கியிருங்கள் எனக் கூறிவிட்டு சென்றார்.
அதன்போது அவருடைய தேசிய அடையாள அட்டையினையும்இ ஒரு தொகை பணத்தினையும் நான் வழங்கினேன். மறுநாள் காலை 9 மணியளவில் சரணடைந்த அனைவரையும் இராணுவம் பஸ் வண்டிகளில் ஏற்றியது.
சுமார் 12 மணியளவில் அப்பகுதியிலிருந்து அனைத்து பஸ்களும் புறப்பட்டுச் சென்றன. அதிகளவான பஸ் வண்டிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் எனது கணவர் எந்த பஸ்ஸில் ஏற்றப்பட்டார் என்பதை என்னால் அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.
இதன்போது இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்ட போது தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்.மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளாராக செயற்பட்ட இளம்பருதியின் தாயார் திடீரென புறப்பட்ட பஸ் ஒன்றிலிருந்து இறங்கி வந்தார்.
அவர் நாங்கள் இருந்த முட்கம்பி பகுதிக்குள் நேராக வந்து எங்களுடன் அமர்ந்துவிட்டார். அதேபோன்று எனது கணவருடன் ஒன்றாகச் சென்ற ஆனந்த குமாரசாமி என்பவர் தனது மனைவியின் தொலைபேசி இலக்கத்தினை என்னிடத்தில் வழங்கி தான் சரணடைந்த தகவலை மனைவியிடம் அறிவிக்குமாறு கேட்டுச்சென்றிருந்தார்.
அதன் பின்னர் நாங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுவிட்டோம். அன்றைய தினம் எனது கணவருடன் இராணுவத்திடம் சரணடைந்த எந்தவொரு நபரினதும் தகவல்கள் இதுவரையில் தெரியாதுள்ளன.
அருட்தந்தை மற்றும் பெரும் தொகையான பொது மக்கள் முன்னிலையிலேயே எனது கணவர் உள்ளிட்ட பெரும்தொகையானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.
இதற்கு அவர்களே நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர். சரணடைந்த எனது கணவர் உயிருடன்தான் இருக்க வேண்டும். என்ற நம்பிக்கை எனக்கு தற்போதும் உள்ளது .எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமே கூறவேண்டும்.
அவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். தயவுசெய்து அவரை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள். என கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.