தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்படுகிறது. இந்த வெள்ள அனர்த்தம் என்பது கணக்கிடமுடியாத நஷ்டத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையுமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை சாட்டி சில கொள்கையர்கள் மோசடியில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்ததை தமக்கு சாதகமாக சில மோசடி கும்பல்கள் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன என்ற எச்சரிக்கையை மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்.
லண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி என ஐரோப்பிய நாடுகள் எங்கும் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு என நிதி சேகரிப்பதில் பல அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, இளையோர் அமைப்பு உட்பட பல தமிழ் அமைப்புக்கள் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த உடனடி உதவிகளை தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இந்தியாவில் உள்ள தொண்டுநிறுவனங்களுமே உடனடியாக செய்ய முடியும். வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் நிதி சேகரித்து அவற்றை அங்கு அனுப்பி உரியவர்களுக்கு வழங்கும் போது அவை உடனடி தேவைக்களுக்குரிய உதவியாக இருக்காது.
ஆனால் காலம் பிந்தியாவது ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்படும் நிவாரண உதவிகள் அந்த மக்களை சென்றடையுமா என்பதுதான் இங்கு எழும் முக்கியமான கேள்வியாகும்.
கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது, அவை உரிய இடங்களுக்கு சென்று சேர்ந்தனவா என்பது பற்றி பல கேள்விகள் உள்ளன.
இதற்கு சில உதாரணங்களை இங்கே குறிப்பிடலாம்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கியிருந்த மக்களுக்கு நிதிகளும் நிவாரண பொருள்களும் சேகரித்து அனுப்புவதற்காக ஐரோப்பிய நாடுகளில் வணங்கா மண் என்ற திட்டம் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகளுக்காக வேலை செய்த அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் வணங்கா மண் என்ற நிவாரண உதவிகள் சேர்க்கும் திட்டம் ஐரோப்பிய நாடுகள் எங்கும் அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவிலிருந்து ஓரு கப்பலில் பொருள்களை ஏற்றி யுத்தம் நடைபெறும் முல்லைத்தீவுக்கு ( முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ) அனுப்பி வைக்கப்போவதாகவும் வணங்காமண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கி செல்ல போகிறது, உங்களின் உதவிகளை தமிழீழ மக்களுக்கு வழங்குங்கள் என உணர்வுபூர்வமான அறிவிப்புக்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்டனர்.
இதற்காக அப்போது ஐரோப்பாவிலிருந்து ஒளிப்பரப்பான தமிழ் தொலைக்காட்சியில் விளம்பரங்களும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
வணங்காமண் என்ற தமிழீழ கப்பல் முல்லைத்தீவிற்கு ( தமிழீழத்திற்கு ) செல்கிறது, இப்போது உதவவில்லை என்றால் எப்போதும் உதவ முடியாது, அடங்கா மண்ணிற்கு வணங்காமண் கப்பல் செல்கிறது, தமிழீழ மக்களை காப்பாற்றுவதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.
இறுதி யுத்தம் நடைபெற்ற அந்நேரம் அழிவுகளையும் இழப்புக்களையும் தமிழ் தொலைக்காட்சிகள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. தங்கள் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் பணமாகவும் பொருளாகவும் அள்ளிக்கொடுத்தனர்.
அனுப்பபட்ட நிவாரணப்பொருள்களின் பெறுமதியை விட நூறு மடங்கு அதிகமான தொகை இதற்காக சேகரிக்கப்பட்டது.
மக்கள் நிவாரண பொருள்களாக கொடுத்ததை விட பணமாக பெருமளவு நிதியை அள்ளி வழங்கினர்.
ஐரோப்பாவிலிருந்து ஈழத்தமிழர்கள் முக்கியமாக விடுதலைப்புலிகளின் அமைப்பு வன்னிக்கு அனுப்பும் கப்பலை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்குமா என கேட்டால் சிறுபிள்ளைகூட அதற்கு தெளிவான பதிலை வழங்கும். இந்நிலையில் தாங்கள் அனுப்பும் நிவாரணப்பொருள்களும் அக்கப்பலும் முல்லைத்தீவை சென்றடையாது என நன்றாக தெரிந்து கொண்டும் தமக்கு இத்திட்டத்தால் இலாபம் என்பதற்காக மக்களிடமிருந்து உதவிகளை பெற்றனர்.
கப்டன் அலி என்ற கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு சென்று உடைப்பதற்காக பிரான்ஸ் துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்தது. அந்த கப்பலை வாடகைக்கு அமர்த்திய வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் பொருள்களை இலங்கைக்கு கொண்டு செல்வது, கொண்டு செல்ல முடியாவிட்டால் கொச்சி துறைமுகத்தில் கப்பலையும் பொருள்களையும் அழித்து விடுவது என்ற ஒப்பந்தத்தையும் கப்டன் அலி என்ற கப்பல் நிறுவனத்துடன் செய்து கொண்டனர்.
இங்கு நிவாரணத்தை சேர்த்தவர்களின் நோக்கம் அந்நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதல்ல. இந்நிவாரணத்தை சொல்லி பெருமளவு பணத்தை தாங்கள் பதுக்கி கொள்ள முடியும் என்பதுதான்.
யுத்தம் மிக கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நிவாரண உதவிகள் சேர்க்கப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்தில் வணங்காமண் கப்பல் புறப்படுகிறது என பெருமளவில் பிரசாரப்படுத்தப்பட்டு அக்கப்பல் புறப்பட்டது.
அக்கப்பலில் 880 தொன் பொருள்கள் அனுப்பபட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
அனுப்பபட்ட பொருள்கள் பற்றி இன்னுமொரு செய்தி கசிந்திருந்தது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடைகளில் காலாவதியான பருப்பு அரிசி உட்பட பல பொருள்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அக்கப்பலில் அனுப்பபட்டதாகவம் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது இன்னொருவகையில் நனைத்து சுமக்கும் வேலை என்றும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருள்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் வேடிக்கையான நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது.
கப்டன் அலி என்ற வணங்காமண் கப்பலில் 880 தொன் பொருள்கள் அனுப்பபட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கப்பல் புறப்பட்டு சென்ற வேளையில் மே 19ஆம் திகதி யுத்தம் முடிவடைந்து மக்கள் சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா அகதிமுகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
யூன் முதலாம் திகதியளவில் இலங்கை கடல் எல்லையை அண்மித்திருந்த அக்கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்கமாட்டோம் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தபோது, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி, கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு நாட்டைவிட்டுத் திருப்பியனுப்பப்பட்டது.
இதன் பின்னர் சில தினங்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்கப்பலை இந்திய மத்திய அரசு சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியது.
இதன் பின்னர் பெரும் இழுபறிகளின் பின் சென்னை துறைமுகத்தில் பொருள்களை இறக்கி விட்டு வணங்காமண் என்ற பெயரிடப்பட்ட கப்டன் அலி கப்பல் உடைப்பதற்காக கொச்சின் துறைமுகத்திற்கு சென்றது
இதன் பின்னர் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசின் தலையீடு காரணமாக அப்பொருள்களை கொழும்புக்கு அனுப்பி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது
நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி யூன் 7ஆம் திகதி புறப்பட்டது.
யூன் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த இந்நிவாரணப்பொருள்கள் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போதிலும் அதனை சோதனையிட வேண்டும் என ஓருமாத காலம் முறைமுக களஞ்சியத்தில் தேங்கி கிடந்தன.
880 தொன் பொருள்கள் அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் சென்னையிலிருந்து 660 தொன் பொருள்களே கொலராடோ கப்பலில் அனுப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது
880 தொன் எப்படி 660 தொன்னாக மாறியது என்பதுபற்றியோ 220 தொன் பொருள்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றியோ யாருக்கும் தெரியாது.
இந்த பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் ஓரு மாதகாலம் தேங்கி கிடந்தது
பின்னர் அதனை தரம் மற்றும் பாவனைக்கு உகந்தநிலை என்பன குறித்து பரிசோதித்த போது நான்கில் மூன்று பகுதி பொருள்கள் பாவனைக்கு உதவாதவை என கண்டறியப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது
துறைமுகத்தில் இப்பொருள்கள் ஒருமாத காலம் வைக்கப்பட்டிருந்ததால் 15 இலட்சம் ரூபாவை இலங்கை செஞ்சிலுவை சங்கம் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்த வேண்டியும் ஏற்பட்டது
இறுதியாக வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்நிவாரணப்பொருள்கள் சென்றடையவில்லை. நிவாரணங்களை திரட்டி அனுப்பியவர்களுக்கும் அம்மக்களை அவை சென்றடையாது என தெரியும். அவர்களின் நோக்கம் இதன் மூலம் பெருமளவு இலாபம் ஈட்டுவதுதான். ஆனால் ஏமாற்றம் அடைந்தது உதவிகளை வழங்கிய மக்கள் தான்.
வணங்காமண் திட்டத்திற்கு எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டது எவ்வளவு பொருள்கள் சேகரிக்கப்பட்டது என்ற வரவு செலவு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதுபோன்று விடுதலைப்போராட்டத்திற்கு என ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு வந்தது இறுதி யுத்தம் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலரும் இலட்சக்கணக்கான பவுண்களையும் ஈரோக்களையும் பிறாங்குகளையும் கடன் எடுத்து கொடுத்தனர்.
முக்கியமாக இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் தலா ஓரு இலட்சம் பிறாங்குகளை வங்கிகளிலிருந்து கடன்பெற்று கொடுத்தனர்.
யுத்தம் முடிவடைந்த மே மாதத்தில் தான் அதிகமானவர்கள் வங்கிகளிலிருந்து கடன்பெற்று கொடுத்தனர். மே 19ஆம் திகதி கூட சில வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்தனர். இந்நிதிகள் எவையும் வன்னியில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு அனுப்பபடவில்லை. ஏனெனில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் வன்னிக்கு பணம் அனுப்ப கூடிய நிலையோ அல்லது ஆயுத கப்பலை அனுப்ப கூடிய நிலையோ காணப்படவில்லை.
வன்னியில் விடுதலைப்புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய நாடுகளில் சேகரித்த நிதிகளை சம்பந்தப்பட்டவர்கள் பதுக்கி கொண்டனர். வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் தனிநபர்களின் பெயர்களில் இருந்தன. இவைகளையும் சிலர் பதுக்கி கொண்டனர்.
ஆனால் சுவிஸ் போன்ற நாடுகளில் வங்கிகளில் கடன் எடுத்து கொடுத்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வங்கி கடன்களை திருப்பி கட்டமுடியாது பல குடும்பங்கள் பிரிந்த சம்பவங்களும் உண்டு. பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் சுவிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விடுதலைப்புலிகளின் செயல்பாட்டாளர்களும் வங்கிகளில் பணம் பெற்றுக்கொடுத்த நிதி முகவர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.
சேகரிக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற விபரம் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலத்திலும் சரி தற்போதும் சரி விடுதலைப்புலிகளுக்காக ஐரோப்பிய நாடுகளில் நிதி சேகரித்தவர்கள் வெளியிட்ட வரலாறு கிடையாது.
ஐரோப்பிய நாடுகளில் தமிழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கு கணக்கு வழக்கு காட்டும் வழக்கம் நிதி சேரிப்பவர்களுக்கு என்றும் இருந்ததில்லை.
உதாரணமாக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரிப்புக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு வழக்கை கேட்ட போது தலைவர் பிரபாகரன் நேரில் வந்து தன்னிடம் கேட்டால் அவரிடம் ஒப்படைப்பேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் பெருமளவு நிதிகளை வழங்கினர். தமிழர்கள் மட்டுமல்ல சுவிட்சர்லாந்து மக்களும் நிறுவனங்களும் கூட தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட நிதி சேகரிப்பாளர்களிடம் பெருமளவு நிதியை வழங்கினார்கள். இவற்றில் எத்தனை வீதம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்தது என்பது யாருக்கும் தெரியாது.
தமிழக அரசும் இந்திய அரசும் வெளிநாடுகளிலிருந்து எவரின் உதவியையும் ஏற்கப்போவதில்லை என அறிவித்திருக்கின்றன. அப்படியானால் ஐரோப்பிய நாடுகளில் தமிழக வெள்ளத்தை காட்டி நிதி சேகரிப்பதேன்?
ஒரு விடயம் தெளிவாகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிலரின் உண்டியல்களை நிரப்ப வழி ஏற்பட்டுள்ளது.