மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் வௌ்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயல கத்தில் நடைபெற்றபோது…

கடைக்­குச்­சென்ற மகன் திரும்­ப­வேயில்லை அதி­கா­லையில் வெள்ளைவானே வந்தது

கஸ்­தூ­ரியார் வீதி யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த சோதி­லிங்கம் சார­தாம்பாள் என்ற தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மகன் ஜனார்த்தனன் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திக­தி­யன்று மாலை கடைக்குச் செல்­வ­தற்­காக வீட்­டி­லி­ருந்து வெளியே சென்றிருந்தார். அதன்­பின்னர் நீண்ட நேர­மா­கியும் அவர் வீட்­டுக்குத் திரும்­ப­வில்லை.

நாங்கள் என்­ன­செய்­வ­தென   தெரி­யாது பத­றிக்­கொண்­டி­ருந்த சமயம் நள்­ளி­ர­வைத்­தாண்டி அதி­காலை ஒரு­ம­ணி­யி­ருக்கும். எமது வீட்டுக்கு வெள்ளைவானில் வரு­கை­தந்­த­வர்கள் திடீ­ரென வீட்­டுக்குள் நுழைந்­தார்கள்.

15 பேர­ளவில் கறுப்பு உடை­த­ரித்­தி­ருந்­தார்கள். கையில் துப்­பாக்­கிகள் வைத்­தி­ருந்­தார்கள். வீட்­டைச்­சோ­தனை செய்­ய­வேண்­டு­மெனக் கூறி­னார்கள்.

எம்மை ஒரு­ இ­டத்தில் அமர்த்தி வைத்­து­விட்டு வீட்டின் அனைத்­துப்­ப­கு­தி­க­ளையும் சோத­னை­யிட்­டார்கள். கொச்­சைத்­த­மி­ழி­லேயே பேசினார்கள்.

அதன்­பின்னர் எம்மை அச்­சு­றுத்­தி­விட்டு சென்­று­விட்­டார்கள். நாம் மக­னைத்­தேடி அரு­கி­லுள்ள இரா­ணுவ முகாமுக்குச்­சென்றோம். இருப்­பினும் அங்கு எவ­ருமே எமக்கு பதி­ல­ளிக்­க­வில்லை. எமது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள மனோ­க­ராச்­சந்­தியில் இரா­ணுவ முகாம் காணப்பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது என்றார்.

paranakaமக்ஸ்வெல் பரணகம

அண்ணா வருவார் அண்ணா வருவார் ..மன­நோ­யா­ளி­யா­கினார் தங்கை

யாழ்ப்­பா­ணத்­தைச்­சோந்த முரு­கேசு வசந்­த­கு­மாரி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது அண்­ண­னான அருச்­சு­னராஜா ஜெயக்­குமார் (அப்­போது வயது 31) என்­பவர் மேசன் வேலை முடித்து வீடு திரும்பும் வேளை 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ஈச்சமோட்டை குளத்­த­டியில் வைத்து கடத்­தப்­பட்டார்.

கடத்­தப்­பட்­டவர் யாழ்.அசோஹா ஹோட்­டலில் தடுத்து வைக்­கப்­பட்டு இருக்­கின்றார் என்ற தகவல் அறிந்தோம். அங்கு சென்று பார்வையிட்டோம்.

அண்­ண­னுடன் கதைத்தோம். மறுநாள் சென்ற போது அங்கே அண்ணா இல்லை. அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் கேட்­ட­போது அண்ணா இல்லை என கூறி எம்மை அனுப்பி விட்­டார்கள்.

அதன் பிறகு எனது தங்கை ஒருவர் அண்ணா வருவார் அண்ணா வருவார் என அடிக்­கடி கூறிக்­கொண்­டி­ருப்பார். நாள­டைவில் அவர் மன நோயா­ளி­யா­கி­விட்டார். தற்­போதும் அண்ணா வருவார் அண்ணா வருவார் என்றே கூறிக்­கொண்டு இருக்­கின்றார்.

இதே­போன்றே எனது மூத்த சகோ­த­ர­னான உத­ய­குமார் சைக்கிள் கடை வைத்து இருந்தார். 1987ஆம் ஆண்டு அவ­ரது கடைக்கு சென்ற இந்திய இரா­ணு­வத்­தினர் கடை­யையும் அடித்து நொருக்கி அண்ணன் மீதும் தாக்­குதல் நடத்­தி­னார்கள்.

அதனால் அண்­ண­னுக்கு மாறாட்டம் ஏற்­பட்டு தற்­போது அவரும் மன நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். மன­நோயால் பாதிக்­கப்­பட்ட இரு சகோ­தரர்­க­ளையும் நானே பார்த்து வரு­கின்றேன் என்றார்.

பஸ்ஸை நிறுத்தி கண­வனை கடத்திச் சென்­றுள்­ளனர்

அரி­யாலை கிழக்கைச் சேர்ந்த பிர­தீபன் ஜெனனி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது கணவர் பிர­தீபன். இவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் பேருந்து சார­தி­யாக கட­மை­பு­ரிந்து வந்­தவர்.

2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி புங்­கு­டு­தீ­வுப்­ப­கு­தியில் பஸ்ஸை செலுத்­திக்­கொண்டு வரும்­போது அங்கு வருகை தந்­தி­ருந்த சில நபர்கள் பஸ்ஸை நிறுத்தி எனது கண­வனைக் கடத்­திக்­கொண்டு சென்­றுள்ளனர்.

எனினும் அங்கு வந்­த­வர்கள் யார் என்­பதை எவ­ராலும் அடை­யாளம் கண்­டி­ருக்க முடி­ய­வில்லை.

நீண்­ட­நே­ர­மா­கியும் கணவர் வீடு­தி­ரும்­பா­த­தை­ய­டுத்து விசா­ரித்­த­போது எனக்கு இந்த விடயம் தெரி­ய­வந்­தது. நாம் அங்கு சென்று பலருடன் பேசினோம்.

எனினும் யாருக்­குமே எது­வுமே தெரி­ய­வில்லை. இன்­று­வ­ரையில் எனது கணவன் தொடர்­பான எந்தத் தகவலும் கிடைக்­க­வில்லை. இருப்­பினும் அவர் உயி­ருடன் இருப்பார் என்ற நம்­பிக்­கையில் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன் என்றார்.

கையொப்­பத்­திற்­காகச் சென்­ற­போது பொலிஸார் பேசிக்­க­லைத்­தனர்

நல்லூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த லோக­நாதன் பேரின்­ப­ராணி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­ல், எனது மகன் லோக­நாதன் பிர­தீ­பனை (அப்போது வயது 20) கச்­சே­ரிக்கு அருகில் வைத்து 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி 4 மோட்டார் சைக்­கிளில் வந்த இராணுவத்­தினர் கடத்­திச்­சென்­றனர்.

மகனை தேடி நல்­லூ­ர­டியில் உள்ள இரா­ணுவ முகா­முக்கு சென்றேன். அங்கு ரஞ்சித் என்ற இரா­ணு­வத்­தைச் ­சேர்ந்­தவர் என்­னுடன் கதைத்தார்.

எனது மகன் தொடர்­பான விப­ரங்­களை விசா­ர­ணை­ செய்தார். தாம் அவ்­வாறு யாரையும் கைது செய்­ய­வில்லை எனக் கூறி என்னை அனுப்­பி­வைத்தார்.

நான் என்­ன­செய்­வ­தென்­ற­றி­யாது வீடு திரும்ப முற்­ப­டு­கையில் இரா­ணுவ முகா­மினுள் இருந்து வெளியே மோட்டார் சைக்­கி­ளொன்று வந்­தது. அதில் இரண்டு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இடையில் எனது மகனின் இரு கைகளும் பின் புற­மாக கட்­டப்­பட்ட நிலையில் இருத்திக் கொண்டு வேக­மாகச் சென்­றதைக் கண்டேன்.

கூச்­ச­லிட்டுக் கத்­தினேன். இருப்­பினும் அவர்கள் எனது மகனை வேக­மாகக் கொண்டு சென்­றனர். அதன் பின்னர் எனது மகனை காணவேயில்லை.

கொழும்பில் எனது மகனை தடுத்து வைத்­துள்­ளார்­க­ளென அறிந்து கொழும்பு பூசா சிறைச்­சா­லைக்கு சென்றேன். சிறைச்­சா­லையில் எனது மகனின் விப­ரத்தை கூறி மகனின் புகைப்­ப­டத்­தினை காண்­பித்தேன்.

சிறிது நேரத்தின் பின்னர் என்னை அழைத்த சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் எனது குடும்ப விபரம் அனைத்­தையும் கூறி­னார்கள். உங்க­ளது மகன் எல்.ரி.ரி.ஈ தானே எனக் கேட்­டனர். நான் இல்லை என்­ற­தோடு அவ­ருக்கு அவ்­வா­றான எந்­தவெ­ாரு அமைப்­பு­டனும் தொடர்­பில்­லை­யென மறுத்தேன்.

அத­னை­ய­டுத்து என்னை உள்ளே அழைத்து சென்­றனர். அங்­கி­ருந்த ஒரு­வரைக் காட்டி இது தானே உங்கள் மகன் எனக் கேட்­டனர். நான் இல்லை என கூறி எனது மகனின் விப­ரத்தை கூறினேன்.

அப்­போது அவர்கள் அழைத்து வந்­­தி­ருந்த அந்த நபர் அம்மா உங்கள் மகன் எங்­க­ளுடன் தான் இருக்­கின்றார் என சத்­த­மாகக் கூறினார். அப்போது அங்­கி­ருந்த உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ரு­டைய தலையின் பின்­பு­ற­மாக அடித்து அவரை பேச­வி­டாது இழுத்துச் சென்­றனர்.

அத்­துடன் என்­னையும் கடு­மை­யான வார்த்­தை­களை பிர­யோ­கித்து பேசி கலைத்து விட்­டனர்.

2010ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கொழும்பு நாலாம் மாடியில் இருந்து கடிதம் ஒன்று எமது வீட்­டுக்கு அனுப்­பப்­பட்டு இருந்­தது.

அக்­க­டி­தத்­துடன் அங்கு சென்ற போது காலையில் இருந்து மாலை வரை என்னை மறித்து வைத்­தி­ருந்­தனர். சாப்­பாடு தண்ணீர் இல்­லாமல் மயங்கி வீழ்ந்தேன்.

பின்னர் எனக்கு அங்­கி­ருந்­த­வர்கள் முத­லு­தவி செய்து மகனை பற்­றிய தக­வல்­களை கேட்ட பின்னர் உங்கள் மகன் தொடர்பில் காங்கேசன்­துறை இரா­ணுவ முகாமில் சென்று விசா­ரி­யுங்கள் என்று கூறி­ய­தோடு கடிதம் தந்­தனர்.

அந்த கடி­தத்தை வாங்­கி­க்கொண்டு காங்­கே­சன்­துறை இரா­ணுவ முகா­முக்கு சென்றபோது அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­காரி யாரைக்­கேட்டு கொழும்பு போனீர்கள் யார் அங்கே போகச் சொன்­னது என கோப­மாகக் கத்­தினார்.

நான்­கொண்டு சென்ற கடி­தத்தை பெற்று வாசித்­தவர் அதனைக் கொண்­டு­சென்று தெல்­லிப்­பழை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கையொப்­ப­மொன்றை வாங்கி வாருங்­க­ளென கூறி அனுப்­பி­னார்கள்.

தெல்­லிப்­பழை பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று கடி­தத்தை கொடுத்தால் அவர்கள் அதனை வாங்கி வைத்­து­விட்டு என்னை அங்­கி­ருந்து செல்­லு­மாறு கடும்­வார்த்­தை­களை பிர­யோ­கித்து பேசிக் கலைத்து விட்­டனர் என்றார்.

எனது மகனைக் கைது செய்­தவர் ஜனா­தி­பதி பாது­காப்­பு­ப் பி­ரி­வி­லுள்ளார்

யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தா­யொ­ருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், சமா­தான காலப்­பகு தியில் முக­மாலை இரா­ணுவ முகாமில் உள்ள இராணு­வத்­தினர் 2003ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 22ஆம் திகதி எனது மகனை கைத்­துப்­பாக்கி வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டில் கைதுசெய்­தனர்.

மகனை கைது செய்த இரா­ணு­வத்­தினர் எமது வீட்­டுக்கு மக­னுடன் வந்­தனர். அவரை எம்­மி­டத்தில் அழைத்து வந்து உங்கள் மகனை கைத்துப்­பாக்கி வைத்­தி­ருந்­ததால் கைது செய்­துள்ளோம் எனக் கூறி­ய­துடன் எனது கண­வ­ரையும் வரு­மாறு அழைத்து சென்­றனர்.

முக­மாலை இரா­ணுவ முகா­மிற்கு அழைத்து சென்­ற­வர்கள் அங்கு எனது கண­வ­ரிடம் வாக்கு மூலம் பதிவு செய்­தனர். அதன்­பின்னர் மகனை விடு­விப்­ப­தாக கூறி எனது கண­வனை அனுப்பி வைத்­தனர்.

மகன் பற்­றிய எந்த தக­வலும் இல்லை. இந்­நி­லையில் கடந்த மார்ச் மாதம் யாழ்ப்­பாணம் வளலாய் பிர­தே­சத்தில் காணப்­பட்ட உயர் பாது­காப்பு வல­யத்­தி­லி­ருந்த காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் மீள கைய­ளிக்கும் நிகழ்வு ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்­றது. நாமும் அங்கு சென்­றி­ருந்தோம்.

ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவு சீரு­டையுடன் அங்கு கட­மையில் இருந்­தவர் எனது மகனை கைது செய்து வீட்­டுக்கு அழைத்து வந்த இராணுவத்தில் ஒரு­வ­ராவார்.

அவரை அடை­யாளம் கண்டு அவ­ரிடம் சென்று எனது மகன் எங்­கே­யெனக் கேட்ட போது எம்மை கடு­மை­யாக மிரட்டி அது பற்றி எதுவும் தனக்கு தெரி­யா­தெனக் கூறினார்.

எம்மால் அந்­த­வி­டத்தில் எது­வுமே செய்­தி­ருக்க முடி­ய­வில்லை. அமை­தி­யாக அழு­த­வாறே அங்­கி­ருந்து வந்­து­விட்டோம். தற்­போதும் கூட வீட்­டுக்கு வந்த இரா­ணு­வத்­தி­னரை என்னால் நன்கு அடை­யாளம் காட்ட முடியும். தயவு செய்து ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவில் அன்றிருந்­த­வரை விசா­ரித்து எனது மக­னுக்கு என்­ன ­ந­டந்­த­தென்­பதைக் கூறுங்கள் என்றார்.

நெஞ்சில் காயம்­பட்­டி­ருந்த மகனை இரா­ணு­வமே கொண்டு சென்­றது

நாக­லட்­சு­மி­யென்ற தாயார் சாட்­சி­யம­ளிக்­கையில், எனது மகன் சிவ­கு­மாரன். அவர் ஊட­க­வி­ய­லாளர் ஆவார். நாங்கள் இடம்­ பெ­யர்ந்து புதுக்­கு­டி­யி­ருப்பில் தங்­கி­யி­ருந்தோம்.

யுத்தம் உக்­கி­ர­ம­டைந்­தது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் திகதி எனது மகன் வலை­ஞர்­ம­டத்­தி­லி­ருந்து குடி­யி­ருப்­புக்­குச்­சென்றுள்ளார்.

அதன்­போது அவ­ருக்கு நெஞ்­சுப்­ப­கு­தியில் காயம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு செல்­லப்­பட்டு அதன் பின்னர் இரா­ணு­வத்­தி­னரே அவரை அழைத்துச் சென்­றனர்.

அதன் பின்னர் செட்­டி­குளம் ஆயுள்­வேத வைத்­தியசாலையில் சிகிச்­சை­க­ளுக்­காக எனது மகன் அனு­திக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அங்­கேயே சில நாட்­க­ளாக சிகிச்­சை­பெற்­று­ வந்த­தா­கவும் உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

எனினும் சிகிச்சை நிறை­வ­டைந்­ததா? எனது மகன் எங்கே சென்றார் என்­பது குறித்து இன்­று­வ­ரையில் தெரி­யா­துள்­ளது. தற்­போதும் அவ­ரைத்­தே­டிக் ­கொண்­டேதான் இருக்­கின்றேன் என்றார்.

இரத்தம் ஒழுக ஒழுக அண்ணாவை இரா­ணுவம் இழுத்­துச்­சென்­றுள்­ளது

தனது மூத்த சகோ­த­ரரை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் பறி­கொ­டுத்த குண­சீலன் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது அண்­ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி தர்­ம­சீலன்.

2008 ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி ஊர­டங்கு சட்டம் போடப்­பட்­டி­ருந்­தது. அன்று இரவு 9.30 மணி­ய­ளவில் இரா­ணுவப் புலனாய்­வுத்­து­றையில் இருந்து வரு­வ­தாக கூறிய சிலர் எனது அண்­ணாவை அழைத்து சென்று எமது வீட்­டிற்கு அண்­மையில் உள்ள தனி­மை­யான வீட்டில் வைத்­தனர். அங்கு அவரை கடு­மை­யாக அடித்து சித்­தி­ர­வதை செய்­த­துடன் இரத்தம் ஒழுக ஒழுக தான் அவரை இழுத்துச் சென்­றார்கள்.

தனது கணவன் இழுத்­துச்­செல்­லப்­ப­டு­வதைக் கண்ட எனது அண்­ணி­யாரும் பிள்­ளை­க­ளும் அவர்கள் பின்னால் ஓடிச்­சென்று தடுத்­தார்கள். இரா­ணு­வத்­தினர் அவர்­களை விட்டு வைக்­க­வில்லை.

அவர்கள் மீது ஈவி­ரக்­க­மின்றி பூட்­ஸாலும் துவக்கு பிடி­யாலும் அடித்­தனர். இதனால் ஏற்­பட்ட காயம் தற்­போதும் உட்­காயக் கண்டல்களுடன் காணப்­ப­டு­கின்­றன.

எனது அண்­ணாவை பிடிக்க வந்த போது சிலர் இராணுவ உடை­யிலும் சிலர் சிவில் உடை­யிலும் காணப்­பட்­டி­ருந்­த­துடன் அவர்கள் கொச்சை தமி­ழிலும் பேசி­யி­ருந்­தார்கள். அத்­துடன் வீட்­டைச்­சுற்­றி­வர பல இரா­ணு­வத்­தினர் நின்றுகொண்­டி­ருந்­தனர்.

அதன்­பின்னர் அண்­ணனை ஊரெழு இரா­ணுவ முகாமில் வைத்­தி­ருப்­ப­தாக சொன்­னார்கள். இருப்­பினும் அங்கு விசா­ரித்­த­போது இல்லையென்றே கூறி­னார்கள். அவர் தொடர்­பாக எந்தவித­மான தொடர்பும் இல்­லாமல் போய்­விட்­டது.

இப்­ப­டி­யான நிலையில் இவர்­களை எல்லாம் கடத்தி கொண்டு சென்று காட­ழிக்க வைத்­தி­ருக்­கி­றார்­க­ளென சிலர் கூறு­கின்­றார்கள். முதலைக்கு உண­வாக போடு­கி­றார்கள் என்றும் கூறு­கின்­றார்கள். அவ்­வாறு பல­வாறு பேசிக்கொள்­கி­றர்கள். உண்­மை­யி­லேயே எனது அண்­ண­னுக்கு என்ன நடந்­த­தென்று தெரிய­வில்லை.

அத்­துடன் கடந்த காலத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் நாங்கள் சுதந்­தி­ர­மாக தெரிவிக்க முடி­யாத ஒரு நிலையே காணப்பட்டது.

ஏனெனில் காணாமல் போன­வர்­களை தேடிப் போன­வர்­களே காணாமல் போன சம்­ப­வங்­களே அதிகம் இடம்­பெற்­றுள்­ளது. அண்­ணாவை கடத்­தி­னவர்கள் ஏன் என்று எனக்கு தெரிய­வில்லை.

அவ­ருக்கு தொழில் ரீதி­யாக போட்­டி­யி­ருந்­தது. அந்­த­வ­கையில் யாரா­வது வேண்­டு­மென்றே இப்­படி செய்ய சொல்­லி­யி­ருக்­கலாம்.

முக்­கி­ய­மாக விடு­தலைப் புலிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்­து­வந்து இரா­ணு­வத்­துடன் இணைந்­தி­ருந்து புல­னாய்வுப் பணி­களில் ஈடு­பட்டு வந்த யாழ்.­பல்­க­லையில் மருத்­துவ பீடத்தல் கல்­வி­கற்ற இரண்டாம் வருட மாணவன் சுகந்த தீபன் என்­பவர் ஊரெழு இரா­ணுவ முகாமிற்கு பொறுப்­பாக இருந்­த­துடன் பலரை காட்டிக் கொடுத்­துக்­கொண்­டி­ருந்தார். அந்த வகையில் இவர் மூலமும் ஏதா­வது தகவல் வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் எனக்­குள்­ளது என்றார்.

அப்­பாவை காலில் சுட்­டு­விட்டு அண்­ணாவை வெள்ளை வானில் கொண்டு சென்றனர்

காணா­மல்­போன அண்ணா தொடர்­பாக கொக்­கு­வி­லைச்­சேர்ந்த அவ­ரு­டைய தங்கை சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

எனது அண்­ணாவின் பெயர் ரஜிந்தன். அவர் வாகன சார­தி­யாக பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­போது 2007ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இரண்டாம் திகதி இரவு வெள்ளை வானில் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்­கொண்டு துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயுதம் தாங்­கி­ய­வாறு எமது வீட்­டுக்கு வந்த இரு­ப­துக்கும் மேற்­பட்டோர் எனது இரண்­டா­வது சகோ­த­ரரான மோகனை மோகன் மோகன் எனப் பெயர் கூறி அழைத்தனர்.

இதன்­போது அறை­யி­லி­ருந்து வெளியே வந்த எனது மூத்த சகோ­தரர் ரஜிந்தன் அவர் வீட்டில் இல்லை எனக் கூறினார். சென்­ற­வர்கள் மீண்டும் வந்து இரண்­டா­வது சகோ­த­ரனை பெயர் கூறி அழைத்­தனர். இதன் போது எனது மூத்த சகோ­தரர் அவர் இல்­லை­யென்றே சொன்னார். உடனே எனது மூத்த அண்ணனை இழுத்து சென்­றனர்.

எனது தந்தை அவர்­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக முற்­பட்ட போது வந்­த­வர்கள் அவரை கீழே தள்ளி விட்டு அவ­ரது காலில் துப்பாக்கியால் சுட்­டனர்.

அண்­ணாவை இழுத்து சென்­றனர். அண்­ணணை விட்டு விடும்­படி கத்­தி­ய­படி வாக­னத்தின் பின் நாங்கள் ஓடினோம். இருந்­த­போதும் அவர்கள் அத­னையும் பொருட்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

இச்­சம்­ப­வத்தின் போது வந்­தி­ருந்­த­வர்­களில் சிலர் எமது வீட்­டினை சுற்றி வர ஆயு­தங்­க­ளுடன் நின்­றி­ருந்­தனர். அவர்கள் சிங்­களம் கலந்த கொச்சை தமி­ழி­லேயே உரை­யா­டி­யதை நான் கேட்டேன்.

நாங்கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­டமும், பொலி­ஸா ­ரி­டமும், செஞ்­சி­லுவைச் சங்கம் எனப் பல­ரி­டமும் முறை­யிட்டும், வெலிக்­கடை, பூசா போன்ற சிறைச்­சா­லை­களில் தேடினோம்.

இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களை உங்­களால் அடை­யாளம் காட்ட முடி­யு­மா­வென விசா­ர­ணை­யா­ளர்கள் கேட்டபோது கடத்தி செல்ல வந்­த­வர்கள் தங்­க­ளது முகத்தை துணி­யினால் கட்டி மறைத்­தி­ருந்­தனர். எனவே அவர்­க­ளது முகத்தை எம்மால் சரி­யாக அடையாளம் கண்டு கொள்ள முடி­ய­வில்லை என்றார்.

இரண்டு மணித்­தி­யா­லத்தில் விடு­விப்­ப­தாக கூறி­னார்கள்

மீசா­லையைச் ­சேர்ந்த ரி.உத­ய­நாதன் என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எஸ்.அருணன். எனது அண்­ணாவின் மகன். மீசாலைச் சந்­தியில் நின்­றி­ருந்த இரா­ணு­வத்­தினர் 1996ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி வீதியால் சென்­று­கொண்­டி­ருந்­த­போது அவரை இடைமறித்துள்ளனர்.

விசா­ர­ணை­செய்­ய­வேண்­டு­மெனக் கூறி அழைத்­துச்­செல்ல முற்­பட்­டனர். அதன்­போது அவ­ரு­டைய தந்தை நேரில் கண்டார். அவர் அவரை எங்கே அழைத்துச் செல்­கின்­றீர்கள் என வின­வினார்.

அதன்­போது உங்கள் மகனை விசா­ரணை செய்­து­விட்டு இரண்டு மணித்­தி­யா­லங்­களில் விடு­தலை செய்­து­வி­டுவோம் நீங்கள் வீட்­டுக்குச் செல்­லுங்­க­ளெனக் கூறி­னார்கள். தற்­போ­து­வ­ரையில் அவ­ருக்கு என்­ன­ ந­டந்­த­தென்­று தெரி­யாது என்றார்.

யாழ். சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த தாயார் சாட்சியமளிக்கையில்,

எனது மகன் இராஜன் அலெக்சாண் டர். யாழ்.பொதுநூலகத்தின் மேற்பார் வையாளராக கடமையாற்றி வந்தவர் 2007பெப்ரவரி ஏழாம் திகதியன்று இராணுவத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார்.

வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தவர். பின்னர் சோமசுந்தரம் வீதி யில் இருந்து இராசாவின் தோட்டம் வீதி யிலுள்ள கடைக்குச் சென்றார். அப்போது, இராசாவின் தோட்டம் வீதியில் இருந்த இரா ணுவத்தினருடன் கதைத்துக் கொண்டிருந்த தாக அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

இராணுவத்தினரிடம் கேட்டபோது, நாங் கள் பிடிக்கவில்லை என்று கூறினார்கள்.

பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை செஞ் சிலுவை சங்கத்தினரிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் எனது மகனின் பெயர் வந்தது. அவரை பார்ப்பதற்கு அவரின் அப்பா வெலிக்கடை சிறைச்சாலைக்கு பொருட்களும் வாங்கிக்கொண்டு சென்றவர்.

அந்த பெயருக்கு உரியவர் அங்கு இல்லை என சிறைச்சாலையில் உள்ளவர்கள் கூறி னார்கள் பின்னர், கொண்டுசென்ற பொருட்களை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்து விட்டு அப்பா வந்து விட்டார்.

அவ்வாறு சிறைச்சாலையில் இருந்து வந்த அப்பா மூன்று நாட்களின் பின்னர் இறந்துவிட்டார். எனக்கு பிள்ளைகள் மட்டும் இருக்கின்றார்கள். அவர்களும் திருமணம் செய்யவில்லை.

என்னுடைய பிள்ளையை பார்த்துவிட்டுச் சாகவேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை தான் செய்ய வேண்டும். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள். இல்லாவிட்டால், ஒன்றும் வேண்டாம் என்றார்.

Share.
Leave A Reply