வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
யாழ். மாநகரசபை மைதானத்தில் நேற்றுமாலை நடந்த அரச நத்தார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறி சன இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர், யாழ். ஆயர் மற்றும், கத்தோலிக்க மதத்தலைவர்கள், குருமார், அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்-
ms-jaffna (1)ms-jaffna (2)ms-jaffna (3)
“எமது அரசாங்கம் சமாதானம், சகவாழ்வு, நல்லிணகத்தை இலக்காகக் கொண்டே செயற்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் ஊடாக மாற்றத்தை, நிரந்தர ஐக்கியத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கிறோம் என்பதை புத்திஜீவிகளும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தவேலைத்திட்டத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படைவாதிகளாவர்.
எமது ஆட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பகிரங்கமாக தங்களுடைய கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் தாங்கள் விரும்பிய தகவல்களை வெளியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை சந்தித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தமுடியும். நாடாளுமன்றிலும், மாகாணசபையிலும் சுதந்திரமாக செயற்படமுடியும். ஆனால் அவை அனைத்துமே தேசிய நல்லிணக்கத்தை பாதுகாப்பதாக அமைந்திருக்க வேண்டும்.
கொழும்பில் ஒரு அறையில் இருந்துகொண்டு எந்தவொரு நபரும் தமது கருத்துக்களை எவ்வாறும் வெளிப்படுத்தமுடியும். அவை யதார்த்தமான பிரச்சினைகளை புரிந்துகொண்டு வெளிப்படுத்தப்படும் கருத்துக்களாக கருதப்படமுடியாது.
நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு, ஆகியவற்றை கட்டியெழுப்ப வேண்டும். வறுமையை இல்லாதொழிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புடனேயே வடக்கு தெற்கு உட்பட இந்த நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள மக்கள் வாக்களித்தார்கள்.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், மீண்டும் போர் ஏற்படப் போவதாகவும், விடுதலைப் புலிகள் தலைதூக்குவதற்கு இடமளிப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பலமாகவுள்ளதோடு மீண்டுமொருமுறை போர் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தயாராகவுள்ளோம்.
தற்போது போர் நிறைவடைந்துவிட்டது. சமாதானம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் பிரச்சினைகள் நிறைவுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த நாட்டில் கொடிய யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும். அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
அதனை விடுத்து கொழும்பில் இருந்து கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென கூறுவதால் எதுவுமே நடக்கப் போவதில்லை.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டது. வடக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதூக்கப்போகின்றார்கள் எனக் கூறிக்கொண்டிருப்பவர்களை வடக்கிற்கு வந்து இந்த மக்களின் நிலைமைகளை நேரில்பார்வையிடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
அவர்கள் தரைவழியாக வடக்கிற்கு வரவேண்டுமாயின் வாகனங்களையும் எரிபொருளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். கடல்மார்க்கமாக வரவிரும்பினால் கப்பலை வழங்கமுடியும். இவற்றுக்கு அப்பால் ஆகாய மார்க்கமாக வரவிரும்புகிறார்கள் என்றால் விமான ஏற்பாடுகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளேன்.
அவர்கள் இங்கு வந்து 25ஆண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களை நேரடியாகப் பார்க்குமாறு கோருகிறேன். தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை காணப்படுவதாக கூறும் நீங்கள் அதற்கு உண்மையிலேயே எங்கு பிரச்சினை காணப்படுகின்றதென்பதை உணரவேண்டும்.
25ஆண்டுகளாக முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருப்பதே தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையாகும்.
(தங்களுடைய பதவிகளுக்காக கைகட்டி நிற்பதும், தமிழர்களை கையேந்த வைப்பதும் தமிழ் அரசியல்வாதிகள்தான். )
மல்லாகத்தில் முகாம்களில் வாழும் மக்களை பார்வையிடுவதற்காக முன்னறிவித்தலின்றியே சென்றேன். அவர்களின் வீடுகளுக்குள் சென்றேன். சமயலறை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டேன்.
அவர்களின் பிள்ளைகளுடன் உரையாடினேன். பாடசாலை செல்கின்றார்களா என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கேட்டறிந்துகொண்டேன்.
ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களில் தம்மை குடியேற்றுமாறே கோரினார்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பாக சிந்திக்கவேண்டும்.
அதனைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மக்கள் தமது சொந்த மண்ணில் ஆறுமாத காலத்தினுள் மீண்டும் குடியேற்றப்படுவார்கள். அதற்காக அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், முப்படையினர் அடங்கிய விசேட செயலணியொன்று அவசரமாக உருவாக்கப்பட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இந்த நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறும் அடிப்படைவாதிகள் மக்கள் ஆணை வழங்கிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
பாராளுமன்றில் சதியை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பெற்ற முனைகிறார்கள். அதற்கு நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஒன்றுபட்டுள்ளன. வடகிழக்கு மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
மக்கள் சக்தியால் ஏற்பட்ட அரசாங்கத்தை சதித்திட்டத்தின் மூலம் கவிழ்க்கவோ கைப்பற்றவோ முடியாது.
எனவே அத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு அனைவரும் பொதுவான வேலைத்திட்டத்திற்காக ஒன்றுபடவேண்டும். சுதந்திரம், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காகவும், மீண்டும் யுத்தம் ஏற்படாத நிரந்தரமான சூழலை ஏற்படுத்துவதற்காகவும், அபிவிருத்தியை கொண்டுவருவதற்காகவும் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
யேசுபிரானின் அந்த சிந்தனைக்கு அமைவாக அந்த உன்னதமாக விடயங்களை முன்னெடுப்பதற்கு உறுதிபூணப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.
எங்கட சம்பந்தன், மாவை, சுமந்திரன..போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எப்பொழுதாவது இடம்பெயர்ந்த மக்களின் இல்லங்களுக்கு சென்று பார்த்திருக்கிறார்களா??