2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக தவறாக வேறு ஒருவருக்கு பிரபஞ்ச அழகிக்கான மகுடம் சூட்டப்பட்டது என்பது இங்கு விஷேட அம்சமாகும்.

2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றில் கலந்து கொண்டவர்களில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஸ்டீவ் ஹார்வே பியாவின் பெயருக்கு பதிலாக கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார்.

ஹார்வே தவறாக அறிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற கொலம்பியாவின் பாலினா வேகா மகுடத்தை அரியாத்னாவுக்கு சூட்டினார்.

மகுடம் சூட்டப்பட்ட பிறகு தான் ஹார்வே தனது தவறை உணர்ந்து தவறுதாக அரியாத்னாவின் பெயரை அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

ஹார்வே செய்த தவறை அடுத்து பாலினா அரியாத்னாவின் தலையில் அணிவித்த மகுடத்தை எடுத்து பியாவின் தலையில் சூட்டி வாழ்த்து தெரிவித்தார். ஹார்வேவின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply