கொழும்பு:
லத்தீன் மொழி பாப் இசையுலகில் தலைசிறந்த பாடகராக கருதப்படும் என்ரிக் இக்லேசியாஸ்(39), ‘லவ் அன்ட் செக்ஸ்’ என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சிகளை நடத்த உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அவ்வகையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 20-ம் தேதி இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்தனே ஆகியோர் இணைந்து நடத்தும் லைவ் இவென்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் ஐயாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்வரை விற்கப்பட்டன.
ஆனால், அனைத்து டிக்கெட்களும் விற்றுத்தீர்ந்து, அரங்கம் நிறைந்த காட்சியாக என்ரிக் இக்லேசியாஸ்-ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்சஸ்தாயியில் அவர் சில பிரபல பாடல்களை பாடப்பாட, உற்சாகம் மிகுதியில் அரங்கில் இருந்த இளம்பெண்கள் ஆடத் தொடங்கினார்கள்.
அவர்களில் சிலர் தங்களது உள்ளாடைகளை கழற்றி மேடைமீது பாடிக்கொண்டிருந்த என்ரிக் இக்லேசியாஸ் மீது வீசி தங்களது அன்பை(?) வெளிப்படுத்தினர்.
இன்னும் சில இளம் பெண்கள் மேடைமீது தாவி குதித்து ஏறி, அவரை கட்டியணைத்தும் முத்தமிட்டும் பாசமழையை பொழிந்தனர்.
இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் பழமைவாதக் கொள்கையில் ஊறிப்போன நாடான இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள் உள்ளிட்ட பலதரப்பினர் இளம்பெண்களின் இந்த ஆர்வக்கோளாறுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதைப்போல் நமது நாட்டின் கலாசாரத்துக்கு எதிரான அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, பொது இடத்தில் தங்களது உள்ளாடைகளை கழற்றிய பெண்களை திருக்கை வாலால் (கொடிய விஷத்தனமை கொண்ட மீனின் வால்) அடிக்க வேண்டும் என நான் வாதாட மாட்டேன்.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வால் சாட்டையால் அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முற்காலத்தில் தவறு செய்யும் கொடும் குற்றவாளிகளை திருக்கை வாலால் அடித்து தண்டிக்கும் வழக்கம் இலங்கையில் நடைமுறையில் இருந்தது. பழமைவாதத்தை விரும்பும் நாடான இலங்கையில் பொதுஇடங்களில் அன்பை வெளிப்படுத்தும் வகையில் (தம்பதியராயினும்) முத்தம் கொடுப்பது போன்ற செயல்கள் இன்றளவும் குற்றமாக கருதப்படுகிறது.
அவ்வாறு அநாகரிகமாக நடந்துகொள்பவர்களை போலீசார் கைது செய்து தண்டித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹேல, சங்கா இரசிகர்களிடம் மன்னிப்பு
லைவ் இவன்ற்ஸ் ஶ்ரீ லங்கா’ நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களான சங்கக்கார மற்றும் மஹேல, இரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கக்கார மற்றும் மஹேல, 200 இற்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘கிங் ஒப் லத்தீன்’ (King of Latin) என அழைக்கப்படும் இலத்தீன் மொழி பாடகரான, ஸ்பானிய நாட்டின் என்றிக் இக்லிசியஸின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்தோருக்கு இழப்பீடு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு CR & FC மைதானத்தில் இடம்பெற்ற குறித்த இசை நிகழ்ச்சி, திட்டமிட்ட கால அளவில் இடம்பெறாமை மற்றும் குறித்த நிகழ்வுக்கான விசேட நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்தோர் அதற்குரிய சலுகைகளை பெறாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, தங்களது மனவருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நிகழ்வின் நுழைவுச்சீட்டுகள் ரூபா 5,000 தொடக்கம் ரூபா 35,000 வரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆயினும் ரூபா 35,000 நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்தோர், தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
குறித்த நிகழ்விற்காக பாதுகாப்பு கடமைக்காக ஒழுங்கு செய்திருந்த பாதுகாப்பு நிறுவனத்தால், இரசிகர்களை கட்டுப்படுத்தாத நிலை தோன்றியதனால் அதிக விலை கொண்ட நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்தோருக்கான பகுதியில் அவர்களால் அமர முடியாமல் போனதாலேயே இவ்வாறான நிலை தோன்றியதாக அவர்கள் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும், மாலை 7.00 மணியிலிருந்து 3 மணித்தியாலங்களுக்கு குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், சுமார் ஒரு மணித்தியாலயமே நிகழ்வு இடம்பெற்றதாக இரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு கடமைகள் சரியான முறையில் இடம்பெறாமையாலும், பாடகர் உரிய நேரத்திற்கு சமூகமளிக்காததனாலும் அத்துடன் குறித்த சில பொருட்கள் உரிய நேரத்திற்கு வராததன் காரணமாகவும் இத்தவறு இடம்பெற்றதாக சங்கக்கார, மஹேல விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்விற்கான (வரவு செலவு குறித்து) மாநகர சபை பொழுதுபோக்கு வரி குறித்து எழுந்துள்ள சந்தேகங்களையும் தாங்கள் தீர்த்துவைக்க தயாரகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் கோரும் மன்னிப்பு மற்றும் வழங்கப்படும் இழப்பீட்டினால் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை ஈடு செய்ய முடியாத போதிலும், உங்களுக்காகவும் நாட்டுக்காகவும் தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தொடர்ந்தும் பேண விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த இசைநிகழ்ச்சியில் பெண் ஒருவர் தனது மார்புக் கச்சையை கழற்றி வீசியிருந்தார் என்பதோடு, மற்றுமொரு பெண் மேடையில் ஏறி பாடகரை கட்டியணைத்ததோடு, முத்தமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்ச்சி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கப்போவதில்லை எனவும் இவ்வாறான கலசாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் நடைபெறும் வேளையில் தான் மெளனமாக இருக்கமாட்டேன் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.