முசிறி: தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு திரணியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி.
இவரது மனைவி தங்கம்மாள் (வயது 60). இவர்களது மகன் சுப்பிரமணியன் (40). பெரிய சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
சுப்பிரமணியன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் தங்கம்மாள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
தங்கம்மாள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்.
அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் முசிறி புதிய பஸ்நிலையத்தில் சுப்பிரமணியன் சுற்றி திரிவதாக தங்கம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அவர் முசிறிக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு சென்றதும் சுப்பிரமணியனை பார்த்த அவர், வீட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டார். ஆனால் இரவாகி விட்டதால் பஸ் வசதி இல்லை. இதைத்தொடர்ந்து காலையில் செல்ல திட்டமிட்டு, மகனுடன் பஸ் நிலையத்திலேயே தங்கினார்.
இன்று காலை விடிந்ததும், தங்கம்மாள் மகனை அழைத்து கொண்டு வெள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு சென்றார். அப்போது சுப்பிரமணியன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இருப்பினும் அவரது கையை இறுகபிடித்து கொண்டு அழைத்து சென்றுள்ளார்.
பஸ் நிலையத்தின் கழிப்பறை அருகே செல்லும் போது, திடீரென ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தங்கம்மாளை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.
பின்னர் அங்கு கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தங்கம்மாளின் தலையில் போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது.
சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர்.
சில பயணிகள் சுதாரிப்புடன் செயல்பட்டு சுப்பிரமணியனை மடக்கி பிடித்து கைகளை கயிறால் கட்டினர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் (பொறுப்பு), சப்– இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் தங்கம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை மகன் கொலை செய்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.