யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமும் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினமே 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.


வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தை மாதம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக வலி,வடக்கு மற்றும் வலி,கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி வலி,வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று வலி,கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள் குடியேற்றத்திற்கு இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலி,கிழக்கு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த முழுமையான நிலங்களும் இன்றுடன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மதியம் 2 மணி தொடக்கம் குறித்த மீள்குடியேற்றப் பகுதிகளை பார்வையிடுவதற்கு நில உரிமையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 25 வருடங்களாக தங்கள் சொந்த நிலங்களை மக்கள் பார்வையிட ஆவலுடன் வந்திருந்தனர்.


மேலும் கடந்த 2010ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதிகளுக்கு ஆலய வழிபாட்டுக்காக படையினர் அனுமதியுடன் வந்திருந்த போது காணப்பட்ட தங்களுடைய வீடுகள் தற்போது இல்லை. என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் கடந்த தை மாதம் மீள்குடியேற்றப்பட்ட போது மக்களுடைய, குடியிருப்புக்களை அண்மித்ததாக இருந்த பாரிய படை முகாம்கள் குறித்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அவ்வாறான படை முகாம்களில் பளை, வீமன்காமம் பகுதியில் இருந்த படை முகாம் அகற்றப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply