குழந்தை பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவிக்கு உதவி செய்வதற்காக தனது காதலியை அழைத்துக் கொண்டு சென்ற கணவரையும் அவரால் அழைத்து வரப்பட்ட அவரது காதலியையும் வைத்தியசாலை வளவினுள் வைத்து சட்டபூர்வ மனைவியின் சகோதரர்கள் தாக்கிய சம்பவம் சிலாபம் பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்றுள்ளது.
பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது சட்டபூர்வ மனைவியின் இரண்டாவது பிரசவத்துக்காக மனைவியை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது தொடர்பில் மனைவிக்கு தெரியவந்திருந்துள்ளது.
இந்நிலையில் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்தியவர்கள் தெரிவித்துள்ளதோடு மனைவிக்கு உதவிக்காக ஒரு பெண்ணை அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும் என கணவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் போது தனக்குத் தெரிந்த ஒரு பெண் இருப்பதாகவும் அவளை அழைத்துக் கொண்டு வர முடியும் என மனைவியிடம் தெரிவித்து கணவர், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு வரச் சென்றுள்ளார்.
தனது கணவர் அழைத்து வரவிருப்பது அவரது காதலியே என யூகித்துக் கொண்ட மனைவி இது பற்றி தனது உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனால் அவதானத்துடன் இருந்துள்ள உறவினர்கள் தனது காதலியுடன் வைத்தியசாலைக்கு வந்த கணவரை நிறுத்தி அவரது காதலியை விசாரித்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் இந்த நபருடன் தொடர்பை பேணி வருவதாகவும் இவருடன் வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சட்டபூர்வ மனைவியின் சகோதர சகோதரிகள் அவ்விருவரையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த சிலாபம் பொலிஸ் நிலைய பொலிஸார் இச்சம்பவத்தை அவதானித்து அவர்களை சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து குறித்த யுவதி தனக்கு இந்நபர் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்தப் பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்து பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.