ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், பாது­காப்பு ஒத்­து­ழைப்பு விட­யத்தில் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில், அதிகளவு நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­திய போதிலும், போர் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் அந்த நெருக்­கத்தின் உறுதித்தன்மை மீது கேள்­வியை எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.

பாகிஸ்­தா­னி­ட­மி­ருந்து, ஜே.எவ்.- -17 போர் விமா­னங்­களை இலங்கை விமா­னப்­படை கொள்­வ­னவு செய்ய விரும்­பிய போது, இந்­தி­யா­விடம் இருந்து அதற்குக் கிளம்­பி­யி­ருக்கும் எதிர்ப்புத் தான் இந்த சந்­தே­கத்தின் அடிப்­படை.

சீனா­வினால் வடி­வ­மைக்­கப்­பட்ட, பாகிஸ்­தானின் கம்ரா தொழிற்­கூ­டத்தில் தயா­ரிக்­கப்­படும், ஜே.எவ்- -17 போர் விமானங்கள், அமெ­ரிக்­காவின் எவ்- -16 போர் விமா­னங்­க­ளுக்கு இணை­யான தொழில்­நுட்­பத்­தரம் மற்றும் வச­தி­களைக் கொண்­டவை.

இந்தப் போர் விமா­னங்­களை வாங்கி, இலங்கை விமா­னப்­படை தமது போரிடும் ஆற்­றலை தர­மு­யர்த்திக் கொள்ள முற்­பட்ட வேளையில் தான், இந்­தியா அதற்கு முட்­டுக்­கட்டை போட்­டி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் எதிர்ப்பு இல்­லா­விட்டால், பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரீப் அண்­மையில் கொழும்பு வந்­தி­ருந்த போது, இந்தப் போர் விமானக் கொள்­வ­னவு உடன்­பாடும் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருக்கும்..

இந்­தியத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்ட எதிர்ப்பும், அங்­கி­ருந்து அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் இரா­ஜ­தந்­திரக் குறிப்பும், அந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­படும் விட­யத்தை அப்­ப­டியே நிறுத்தி வைக்கச் செய்­தி­ருக்­கி­றது.

பாகிஸ்தான் போர் விமா­னங்­களை வாங்­கு­வ­தற்கு இந்­தியா ஏன் எதிர்ப்புத் தெரி­விக்க வேண்டும் என்ற சந்­தேகம் பலரிடமும் காணப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவின் போட்டி நாடாக, இருப்­பதால் தான், பாகிஸ்­தா­னிடம் இருந்து போர் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்யக் கூடாது என்று இந்­தியா அதி­காரத் தொனியில் கூறி­ய­தாகப் பலரும் நினைக்­கின்­றனர். உண்மை அது­வல்ல.

அவ்­வாறு இந்­தியா நினைத்­தி­ருக்­கு­மானால், ஏற்­க­னவே விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போது, பாகிஸ்தானிடம் ஆயு­தங்­களை வாங்கிக் குவித்த போதே, அதனைத் தடுத்­தி­ருக்கும்.

அப்­போது இந்­தியா அவ்­வாறு செய்­யா­த­தற்கு வேறு புறக்­கா­ர­ணி­களும் இருந்­தன என்­பதை மறுக்க முடி­யாது.

இப்­போது, பாகிஸ்­தா­னிடம் ஜே.எவ்- -17 போர் விமா­னங்­களை இலங்கை வாங்­கு­வதை இந்­தியா விரும்­பா­த­தற்கு, தமது எதிர் நாட்­டுடன் இலங்கை பாது­காப்பு உற­வு­களை வைத்­தி­ருப்­பதை விரும்­பா­தமை மட்டும் தான் கார­ண­மல்ல. இலங்கை­யுடன் பாது­காப்பு உற­வு­களை பாகிஸ்தான் வைத்­தி­ருப்­பதை இந்­தியா எதிர்க்க­வில்லை.

பிராந்­திய நாடு­க­ளுக்­கி­டையில் பாது­காப்பு உற­வுகள் என்­பது தவிர்க்க முடி­யாத ஒன்று என்­பதை இந்­தியா அறியும்.

எனவே, பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான பாது­காப்பு உற­வு­களை இந்­தியா எதிர்க்­கவோ -தடுக்­கவோ இல்லை.

பாகிஸ்­தா­னிடம் இருந்து ஜே.எவ். -17 போர் விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­வதை மட்­டும்தான் இந்­தியா எதிர்க்கிறது.

இதில் ஆயுத விற்­பனைப் போட்டி என்று எதுவும் கிடை­யாது. அவ்­வாறு வெளி­யான செய்­திகள் அனைத்தும் தவறானவை.

அதா­வது, இந்­தி­யாவின் தேஜஸ் போர் விமா­னங்­களை வாங்­கு­மாறு இந்­தியா அழுத்­தங்­களைக் கொடுப்­ப­தாக முன்னர் சில ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கின.

ஆனால், தேஜஸ் போர் விமா­னங்­களை இன்­னமும் இந்­திய விமா­னப்­ப­டையே இணைக்­க­வில்லை. அவை இன்­னமும் வணிக ரீதி­யான உற்­பத்­திக்கே தயா­ரா­க­வில்லை.

இன்­னமும் தர­மேம்­பாட்டு ஆய்­வுக்­கான நிலை­யி­லேயே தேஜஸ் போர் விமா­னங்கள் இருக்­கின்­றன.

ஆனால், பாது­காப்புத் தள­பாட உற்­பத்­தியை அடுத்த கட்­டத்­துக்கு அதா­வது ஏற்­று­மதி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்­பதில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

அதற்­காக இன்­னமும், தர­மேம்­பாடு முழு­மை­ய­டை­யாத, இந்­திய விமா­னப்­ப­டையே பயன்­ப­டுத்­தாத போர் விமானங்களை வாங்க வேண்டும் என்று இந்­தி­யா­வினால் ஒரு­போதும் இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்க முடியாது.

ஆயுத விற்­பனைப் போட்­டியும் இல்லை என்றால், எதற்­காகத் தான் இந்­தியா இந்த அழுத்­தங்­களைக் கொடுத்­தி­ருக்­கி­றது? அதற்கு இரண்டு கார­ணங்கள் சொல்­லப்­ப­டு­கின்­றன.

இந்த இரண்­டுமே இந்­தி­யாவின் தற்­காப்பு நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை.

போரில்­லாத சூழலில் இலங்கை விமா­னப்­படை அதி­ந­வீன போர் விமா­னங்­களைக் கொண்­ட­தாக வலுப்­ப­டுத்­தப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை என்­பது முத­லா­வது காரணம்.

பாகிஸ்தான் போர் விமா­னங்­களை இலங்கை விமா­னப்­படை கொள்­வ­னவு செய்தால், அதனைச் சாட்­டாக வைத்துக் கொண்டு, சீனா தனது பாது­காப்பு நலன்­களை அடைய முனை­யலாம் என்­பது இரண்­டா­வது காரணம்.

மூன்று வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக, இந்தப் போர் விமானக் கொள்­வ­னவு குறித்து, இந்­தி­யா­விடம் இருந்து இலங்­கைக்கு ஒரு இரா­ஜ­தந்­திர செய்தி அனுப்­பப்­பட்­ட­தாக கடந்த ஞாயி­றன்று வெளி­யான இந்­தியன் எக்ஸ்­பிரஸ் இதழில், எழுதியிருந்தார் நிரு­பமா சுப்­ர­ம­ணியன்.

எந்த கடிதத் தலைப்போ, கையெ­ழுத்தோ இடப்­ப­டாமல், வெள்­ளைத்­தாளில் சில விப­ரங்கள் அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்­ததாம்.

அதில், போர் முடி­வுக்கு வந்து விட்ட இந்தச் சூழ்­நி­லையில், இலங்கை விமா­னப்­படை நவீன போர் விமா­னங்­களைக் கொள்­வ­னவு செய்ய வேண்­டிய தேவை இல்லை என்ற விபரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இது ஒரு முக்­கி­ய­மான விவ­காரம். போரைக் காரணம் காட்டி இலங்கை தனது படை வலி­மையை அதி­க­ரித்துக் கொண்டதைப் போன்று இனி­வரும் காலங்­க­ளிலும், செய்யக் கூடாது என்ற உட்­பொ­ருளை அது உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

தனக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு, அதி­ந­வீன ஆயுத தள­பா­டங்­களைக் கொண்­ட­தா­கப்­ப­ல­ம­டை­வதை இந்­தியா விரும்­ப­வில்லை என்று அதனை எடுத்துக் கொள்­ளலாம்.

இந்­தியா அயலில் இருக்­கும்­போது, இலங்­கையின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டாது என்­ப­தா­கவும் இதனைப் பார்க்கலாம்.

இலங்­கையின் பாது­காப்பு தனது கைக்குள் இருப்­பதை இந்­தியா விரும்­பு­கி­றது என்­பதை இதன் மூலம் உணர முடி­கி­றது.

அதே­வேளை, நவீன போர்த்­த­ள­பா­டங்­க­ளுடன் இலங்கைப் படைகள் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வது தமது பாது­காப்பு நலன்­க­ளுக்கு குந்­த­க­மாக அமை­யலாம் என்று இந்­தியா கரு­து­கி­றதா என்ற சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே, பங்­க­ளா­தே­ஷுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களில் இடை­வெளி ஏற்­பட்­டி­ருந்த ஒரு கட்­டத்தில், சீனா­விடம் இருந்து ஆறு மிங் ரகத்தைச் சேர்ந்த நீர்­மூழ்­கிக்­கப்­பல்­களை வாங்க அந்த நாடு திட்­ட­மிட்­டி­ருந்­தது.

ஏன் தடுக்கிறது இந்தியா?

அதற்­கான கொள்­வ­னவு பேரங்­களும் நடந்து கொண்­டி­ருந்த போது, பங்­க­ளா­தே­ச­ஷுடன், இந்­தியா பேச்சு நடத்­தி­யது.

அதன் விளை­வாக, இரண்டு நீர்­மூழ்­கி­களை மட்டும் சீனா­வி­ட­மி­ருந்து வாங்க முடி­வெ­டுத்­தது பங்­க­ளாதேஷ்.

அதற்குப் பதி­லாக, ரஷ்­யா­விடம் இருந்து 3 கிலோ ரக நீர்­மூழ்­கி­களை வாங்கிக் கொடுப்­ப­தாக இந்­தியா உறு­தி­ய­ளித்­தது.

இப்­போது, பங்­க­ளாதேஷ் கடற்­ப­டை­யி­ன­ருக்கு ரஷ்ய நீர்­மூழ்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக இந்­தி­யாவே பயிற்சி அளிக்­கி­றது.

ஏன்­னென்றால், சீனாவின் ஆயு­தங்கள் தன் அருகே மேலா­திக்கம் செலுத்­தப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை.

இது­போ­லத்தான் இலங்­கை­யிலும், பாகிஸ்­தா­னிடம் போர் விமா­னங்­களை வாங்க வேண்­டா­மென்றும் தடுத்­தி­ருக்­கி­றது இந்­தியா.

எத்­த­கைய புற அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­கின்ற போதும், தன் கையை மீறிச் சென்­று­விடக் கூடாது என்ற இந்தியாவின் எதிர்­பார்ப்பே இதில் அதி­க­மாக இருக்­கி­றது.

இத­னால்தான் போரில்­லாத நிலையில் போர் விமா­னங்­களை வாங்க வேண்­டிய தேவை என்ன என்ற கேள்­வியை புதுடில்லி எழுப்­பி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இலங்கை தனது கைக்குள் தான் இருக்க வேண்டும் என்றோ, நவீன போர்த்­த­ள­பா­டங்­களை வாங்கக் கூடாது என்றோ கரு­து­மானால், ரஷ்­யா­விடம் போர் விமா­னங்­களை வாங்கித் தரு­வ­தா­கவோ, அதற்கு கடன் உதவி கூடத் தரு­வ­தா­கவோ இந்­தியா கூறி­யி­ருக்­காது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

இனி இரண்­டா­வது கார­ணத்­துக்கு வருவோம்.

பாகிஸ்­தா­னிடம் இருந்து, ஜே.எவ்.-17 போர் விமா­னங்­களை வாங்­கினால், இலங்கை விமா­னப்­ப­டையில் சீனாவின் போர்த்­த­ள­பா­டங்­களின் ஆதிக்கம் மிகை­யாகி விடும் என்ற கவலை இந்­தி­யா­வுக்கு இருப்­பது உண்மை.

ஜே.எவ்-17 போர் விமா­னங்கள் கம்­ராவில் உள்ள பாகிஸ்தான் ஏரோ­நொட்­டிக்கல் கொம்­பி­ளக்ஸ்சில் தயா­ரிக்­கப்­பட்­டவை என்று கூறப்­பட்­டாலும், அதனை இந்­திய பாது­காப்பு நிபு­ணர்கள் நம்­ப­வில்லை.

சீனாவின் செங்ட் எயார்­கிராப்ட் கோப்­ப­ரேசன் தயா­ரித்த பாகங்கள், பாகிஸ்தான் கொண்டு வரப்­பட்டு, தனியே கம்­ராவில் அவை ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வ­தா­கவே அவர்கள் கரு­து­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், இதையும் சீனத் தயா­ரிப்பு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்­க­னவே விமா­னப்­ப­டையில், எவ்-7 போர் விமா­னங்கள், கே-8 பயிற்சி விமா­னங்கள் வை-12, வை-8 போக்­கு­வ­ரத்து விமா­னங்கள், எம்.ஏ.-60 பய­ணிகள் விமா­னங்கள் என்று சீன விமா­னங்கள் தான் நிறைந்­தி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், ஜே.எவ் -17 போர் விமா­னங்­களும் வந்து விட்டால், விமா­னப்­ப­டையே சீனாவின் அச்சில் தான் சுழ­லு­வ­தாக மாறி­விடும்.

அத்­த­கை­ய­தொரு கட்­டத்தில், இலங்­கையில் சீனா ஒரு பரா­ம­ரிப்புத் தளத்தை நிறுவும் வாய்ப்­புகள் உரு­வாகி விடும் என்று இந்­தியா அஞ்­சு­கி­றது.

ஏற்­க­னவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் இறு­திக்­கா­ல­கட்­டத்தில் சீனக்­கு­டாவில் விமானப் பரா­ம­ரிப்புத் தளத்தை அமைக்க சீனா­வுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டது.

அதை­ய­றிந்த இந்­தியா, உட­ன­டி­யாக அந்த முயற்­சியை தனது இரா­ஜ­தந்­திர அழுத்­தங்­களின் மூலம் தடுத்து நிறுத்­தி­யது.

அதற்குப் பின்னர், அந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை ஹிங்­கு­ராக்­கொ­டவில் அமைக்­கலாம் என்று கேட்ட போதும், சீனா அதற்கு சம்­ம­திக்­க­வில்லை.

சீன விமா­னங்­களின் ஆதிக்கம் விமா­னப்­ப­டையின் அதி­க­ரிப்­பதை தடுத்தால் தான், இத்­த­கை­ய­தொரு முயற்­சிக்கு நிரந்தரமாக தடை போடலாம் என்று இந்தியா கருதுகிறது.

பாகிஸ்தானிடமிருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்கக் கூடாது என்று இந்தியா இதனால் தான் தடுக்கிறது.

அதற்கு சில தொழில்நுட்பக் குறைபாட்டுக் காரணங்களையும் இந்தியா முன்வைத்திருக்கிறது.

எவ்வாறாயினும், இந்தியாவின் இந்த தடுப்பு முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறுமென்று தெரியவில்லை.

தற்­கா­லி­க­மாக இது வெற்­றி­ய­ளித்­தி­ருந்­தாலும், பாது­காப்­புச்­செ­யலர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சியின் கருத்து இந்­தி­யா­வுக்கு சற்று குழப்­பத்தை ஏற்படுத்தக்கூடும்.

போரில்லாத நிலையில் போர் விமானங்களை ஏன் வாங்க வேண்டும் என்ற கருத்துக்கு அவர், அளித்துள்ள பதில் இந்தியாவுக்கு எரிச்சலூட்டக் கூடியது.

போரில்லாத சூழலிலும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது சாதாரண மூலோபாய அறிவுள்ளவர்களுக்கே புரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

கொழும்பு- புது­டில்லி இடையில் அவ்­வ­ளவு விரை­வாக தீர்க்க முடி­யாத ஒரு பிரச்­சி­னை­யா­கவே மாறும் அறி­கு­றியைத் தான் இது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஹரிகரன்-

Share.
Leave A Reply