‘தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது.
சிங்கள கடும்போக்கு தளங்களான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தரப்புக்களோடு கூட கூட்டமைப்பு பேசி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது.
அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த சில ஆண்டுகளாக, ‘2016ஆம் ஆண்டுக்குள் (சர்வதேச ஒத்துழைப்போடு) தீர்வு பெற்றுக் கொள்ளப்படும்.
‘ என்று சொல்லிக் கொண்டிருக்கும் கருத்தினையே எம்.ஏ.சுமந்திரனும் மீள்மொழிந்திருக்கின்றார். ஆயினும், எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களில் கவனிக்கப்பட வேண்டியது எதுவெனில், ‘இந்தத் தருணம் தவறவிடப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற ஒன்று கிடைக்காது.’ என்கிற அறுதியிடலாகும். (இதுபற்றி இன்னொரு தருணம் பேசலாம்.)
இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் என்ன வகையான நம்பிக்கைகளின் போக்கில் இந்த ஆண்டுக்குள் இறுதித் தீர்வு கிடைத்துவிடும் என்கிற வாதத்தினை தொடர்ந்தும் முன்வைக்கின்றார்கள் என்பது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் பெரிதாக புரியவில்லை. அவை, கேள்விகளுக்கும் உட்பட்டவை.
அத்தோடு, இறுதித் தீர்வினை நோக்கிய நகர்வு எப்படிப்பட்டதாக இருக்கப் போகின்றது, அதன் ஒவ்வொரு கட்டங்களின் போதும் தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய உரையாடல்கள் எப்படிப்பட்டவை?, என்பது பற்றி இவர்கள் இருவரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார மையத்துக்கு எதிரான அனைத்துத் தரப்புக்களும் இந்த விடயத்தினைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.
அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார மையம் (அல்லது முடிவுகளை எடுக்கும் தரப்பு) ஏன் தங்களுடைய நகர்வுகள் தொடர்பில் வெளிப்படையான அணுகுமுறைகளைத் தவிர்த்து வந்திருக்கின்றது என்பது தொடர்பிலானது அது.
அரசியல்- இராஜதந்திர நகர்வுகளில் அனைத்து விடயங்களும் வெளிப்படையாக உரையாட முடியாதவை என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதான்.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான இறுதித் தீர்வு என்பது இரகசியங்களாக மேற்கொள்ளப்பட வேண்டியவை அல்ல. ஏனெனில், நாம் சுதந்திரத்துக்கு முந்தைய சிலோனில் இருந்து இன்றைய ஸ்ரீலங்கா (இலங்கை) வரையாக கடந்து வந்த பாதை முட்களாலும், படுகுழிகளினாலும் நிரம்பியவை.
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த வரைபு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே முடிவு செய்துவிட்டுத்தான், அந்த நகர்வுகளுக்குள்ளேயே வந்தார்.
பொதுமக்கள், புத்திஜீவிகள், அரசியல் கட்சிகளிடம் இருந்து அரசியலமைப்பு யோசனைகளை கோரும் நடவடிக்கையொன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதுவொரு அரசியல் போக்கு காட்டல் மாத்திரமே. அதில், உண்மைத் தன்மை என்பது பெரிதாக இல்லை.
பௌத்த மதத்தை முன்னிறுத்தி ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மீள வரையப்படுகின்றது.
இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு கண்டுவிட முடியும் என்கிற முனைப்பு, கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்ற போது எவ்வளவு அபத்தமானது என்பது வெளிப்படையாக புரியும்.
தமிழ் மக்களின் இறுதி ஆணை என்பது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கானது.
அது, ஒற்றையாட்சி என்கிற விடயத்தை குறித்தானது அல்ல. இந்த நிலையை, தமிழ் மக்களின் நெகிழ்நிலை தரப்பாக தம்மை தொடர்ந்தும் முன்வைத்துக் கொண்டிருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார மையம் எவ்வாறு கையாளப் போகின்றது?
இன்னொரு விடயம் குறிப்பிடக் கூடியது. அதாவது, புதிய அரசாங்கத்தோடு குறிப்பிட்டளவான இணக்கப்பாட்டோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது எந்தவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது அது.
அதனை, தனிப்பட்ட உரையாடல்களின் போது, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் குறிப்பிட்டும் வந்திருக்கின்றார்கள்.
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலைகளுக்குள் ஆடப்படும் சதுரங்கத்தை வெற்றி கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை அவர்கள் ஏதோவொரு சூட்சுமத்தின் போக்கில் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் ஒரு கட்டம் சர்வதேச ஒத்துழைப்பு என்கிற விடயத்தினூடு சாத்தியப்படும் என்றும் நம்புகின்றார்கள்.
ஆனால், உண்மை வேறு மாதிரியும் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் செல்லப் பிள்ளையான புதிய அரசாங்கத்தின் மீது அளவுக்கு மீறிய அழுத்தங்கள் உருவாகுவதை அந்த நாடுகள் அவ்வளவு ரசிக்காது என்பதுவும், அதனை அனுமதிக்காது என்பதுவுமாகும்.
அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன வகையில் சர்வதேச ஒத்துழைப்பை உட்கொண்டுவரப் போகின்றது. அதற்கான களம் இப்போது விரிந்திருக்கின்றதா? என்பதுவும் ஆராயப்பட வேண்டியவை.
தென்னிலங்கையின் கடும்போக்கு தளம் என்று தற்போது வரையறுக்கப்படும் தரப்புக்களில் பிரதான தரப்பான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்திய கூட்டு எதிரணியின் வகிபாகம் எதிர்வரும் நாட்களில் என்ன மாதிரியானது, அந்தத் தரப்பினை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
பண்டாவும், ஜே.ஆரும், சந்திரிகாவும் அரங்கேற்றிய நாடகங்களின் மீள்வடிவத்தை ரணிலும் தற்போது ரீமேக் செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த இடத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் ஆற்றிய நாடாளுமன்ற உரையொன்றின் பகுதியை கோடிடுவது பொருத்தமாக இருக்கும். அதாவது, ‘நான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கையொன்றை விடுக்க விரும்புகின்றேன்.
அவர், இந்த நாட்டின் தேசியத் தலைவர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகின்றார். அப்படியான சந்தர்ப்பத்தில் அவர், நாட்டுக்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
அவர், மற்றைய விடயங்களைவிட நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர், முக்கியமான தருணங்களில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.’ என்றார்.
அடுத்த சில நாட்களில், மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி இரா.சம்பந்தன் மீண்டும், ‘புதுப் பாதையை ஏற்படுத்தி, நாடு புதிய பாதையில் செல்லக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
அது எமது முதல் கடமையென்பதை இந்த இடத்தில் கூறுவது எனது கடமையென்று நான் கருதுகிறேன். இக்கருமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒத்துழைக்க வேண்டும் என நான் மிகவும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களின் (கிட்டத்தட்ட) ஏக அங்கிகாரம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தற்போது எதிர்கொண்டிருப்பது பெரும் சிக்கல். ஏனெனில், தென்னிலங்கையோடு களமாடுதல் என்பது எப்போதுமே இலகுவானது அல்ல. அப்படியான நிலையில், அவர் அனைத்து தரப்புக்களை நோக்கியும் தன்னுடைய நகர்வினை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
அவர்தான், வடக்கு- கிழக்கினை நோக்கி கடும்போக்கு அரசியல் நிலைப்பாடுகள், பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதை சிக்கலாக்கிவிடும் என்றும் சொல்கின்றார். தெற்கின் கடும்போக்கு தளங்களை நோக்கி இணக்கத்துக்கான அழைப்பையும் விடுக்கின்றார்.
இங்கு, வடக்கு- கிழக்கு என்ன வகையான கடும்போக்கு அரசியல் நிலைப்பாடுகளை முன்வைக்கின்றது என்பது கேள்விக்குரியது. ஏனெனில், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைக் கோருவது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் முன்வைத்துப் பெற்ற ஆணை.
அதற்கு மக்கள் ஏக அங்கீகரமும் வழங்கியிருக்கின்றார்கள். ஆக, அந்தக் கோரிக்கைகளினை உறுதி செய்யுமாறு கோருவது கடும்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாகாது. ஆக, இரா.சம்பந்தன் அது தொடர்பிலும் தன்னுடைய தெளிவான வெளிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடு தம்முடைய எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலை உறுதி செய்வதிலேயே ரணில் விக்கிரமசிங்க, அதிக ஆர்வத்தோடு இருக்கின்றார்.
இந்த இடத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய வகிபாகத்திலிருந்து விலகி நின்று, அவர் பௌத்த சிங்கள காப்பாளனாக தன்னை உருமாற்றுவதில் அக்கறை கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்.
அதாவது, நாட்டின் தலைவன் என்கிற வகையில் பௌத்த தர்மத்தை உறுதி செய்தில் உறுதியாக இருக்கின்றேன் என்று பௌத்த அடிப்படைவாத தரப்புக்களின் கோரிக்கைகளை கருத்திலேற்க ஆரம்பித்து விட்டார்.
குறிப்பாக, ‘உணவுக்காக மாடு வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். தடுக்கப்படும்’ என்பது மாதிரியான விடயங்களுக்குள் அவர் சிக்கிக் கொண்டுவிட்டார்.
அதில், அவர் ஆர்வம் கொள்வதினூடு எதிர்காலத்தில், ‘நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்த, பதவி ஆசையற்ற, பௌத்த தர்மத்தை காப்பாற்றிய தலைவன்’ என்கிற அடையாளத்தினைப் பெற விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன்.
மற்றப்படி, தென்னிலங்கையின் பெரும் அரசியல் நகர்வுகளை ரணில் விக்கிரமசிங்கவே ஆற்றிக் கொண்டிருக்கின்றார். அவரோடுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமாட வேண்டும். சதிராட வேண்டும். இந்த ஆட்டங்களின் போக்கில் தோற்றுப் போதல் என்பது, ஒற்றையாட்சிக்குள் எல்லாவற்றையும் இறுதி செய்வதே ‘இறுதித் தீர்வு’ என்ற விடயத்தை எம்மீது இறக்கி வைத்துவிடும்.
அது, தமிழ் மக்களின் அரசியலுரிமை இலக்கும் அல்ல. அவற்றுக்கான தீர்வும் அல்ல.
-புருஜோத்தமன் தங்கமயில்-